Translate

Monday, 2 January 2012

ஈரான் மீது பொருளாதார தடைகள், பாகிஸ்தானுக்கு நிதியுதவி நிறுத்தம்…


ஈரான் மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்கக் கூடிய மற்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்கும் நிதியுதவியை குறைக்கக் கூடிய பாதுகாப்பு பிரேணணையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார்.
குறுகிய தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணையை ஈரான் நேற்று வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது. அத்துடன் அணுமின் நிலையங்களுக்கான யுரேனிய எரிபொருளையும் தயாரித்துள்ளது.

இந்த இரண்டையுமே உள்நாட்டு தொழில்நுட்பம் மூலம் ஈரான் சாதித்துள்ளது. ஈரான் குறித்த இச்செய்திகள் நேற்று தான் வெளியாகின. ஆனால் இந்த இரண்டும் எப்போது, எங்கே நடந்தன என்பது குறித்து ஈரான் தேசிய செய்தி நிறுவனம் எதுவும் குறிப்பிடவில்லை.
இந்த அதிரடி சம்பவங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு, இவை பற்றிய செய்திகள் முதலில் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.
அதை உறுதிப்படுத்தும் விதத்தில் கடந்தாண்டு டிசம்பர் கடைசி வாரத்தில் ஈரான் மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதிக்கும் பாதுகாப்பு பிரேணணை ஒன்று அமெரிக்க காங்கிரசில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி அமெரிக்காவின் அரசு மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் ஈரான் மத்திய வங்கி உட்பட நிதி நிறுவனங்களுடன் எவ்வித உறவும் வைத்து கொள்ளக் கூடாது. மீறி உறவு கொள்ளும் வங்கிகள், அமெரிக்க பங்குச் சந்தையிலிருந்து விலக்கி வைக்கப்படும்.
அதேபோல் பயங்கரவாதத்துக்கெதிரான போரில் பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும், 850 மில்லியன் டொலர் நிதியுதவியில் 60 சதவீதம் அதாவது 510 மில்லியன் டொலர் நிறுத்தி வைக்கப்படும்.
பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் நாட்டு வெடிகுண்டுகள் மூலமாக ஆப்கானில் பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலியாகி வருகின்றனர். அதனால் நாட்டு வெடிகுண்டு உற்பத்தியைத் தடுக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் முழுமூச்சுடன் ஈடுபட்டால் ஒழிய இந்த தடை நீக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை.
ஹவாய் தீவில் ஓய்வு பெற்று வரும் ஜனாதிபதி ஒபாமா இந்த பிரேணணையில் நேற்று கையெழுத்திட்டார். ஈரான் தனது தொலை தூரம் சென்று தாக்கும் ஏவுகணைப் பரிசோதனையை நிறுத்தி வைப்பதாகவும், அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்குத் தயார் எனவும் அறிக்கை வெளியிட்டதற்கு சில மணிநேரங்கள் கழித்து ஒபாமா இந்த பிரேணணையில் கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து பிரேணணை சட்டமாகியுள்ளது.
அதேநேரம் குவான்டனாமோ சிறையில் உள்ள வெளிநாட்டுக் கைதிகளை விசாரணைக்காக அமெரிக்காவிற்கோ அல்லது உடல்நலம் காரணமாக அவரவரின் நாடுகளுக்கோ அனுப்பி வைப்பதில் இந்த சட்டம் சில கெடுபிடிகளை வலியுறுத்தியுள்ளது.
உலகளவில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள இந்நிலையில் ஈரான் மீதான தற்போதைய தடைகள் எண்ணெய் வர்த்தகத்தில் மேலும் பல நெருக்கடிகளை ஏற்படுத்தும் எனவும், கைதிகள் பரிமாற்றத்தில் செய்யப்பட்டுள்ள கெடுபிடிகள் தேவையில்லை எனவும் ஒபாமா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில், இந்த பிரேணணையில் நான் கையெழுத்திட்டேன் என்பதற்காக இதன் எல்லா அம்சங்களையும் ஏற்றுக் கொண்டேன் என்பது அர்த்தமல்ல என்றார்.
ஆனால் பாகிஸ்தானுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டது குறித்து அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

No comments:

Post a Comment