Translate

Thursday 1 March 2012

மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா. தீர்மானம்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்



இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பாக ஐக்கிய நாடு மனித உரிமைகள் கவுன்சில் கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி தங்களை நேரில் சந்தித்தபோது அளித்த மனுவையும், ஜுன் 25ஆம் தேதி தங்களுக்கு எழுதிய கடிதத்தையும் தற்போது நினைவூட்ட விரும்புகிறேன். இலங்கையில் போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், இலங்கை முகாம்களில் உள்ள அனைத்து தமிழர்களும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரை, அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரை, மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 8-6-2011 அன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அந்த மனுவிலும், கடிதத்திலும் குறிப்பிட்டிருந்தேன்.
இந்த தீர்மானத்தைத் தொடர்ந்து மத்திய அரசு சாதகமான நடவடிக்கை எடுத்து வருகிறது என்று நான் கருதினேன்.
இந்த நிலையில், இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பாக ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடு மனித உரிமைகள் கவுன்சில் கொண்டு வரும் தீர்மானத்தின் மீது வரும் மார்ச் மாதம் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது என்றும், அப்போது இலங்கையின் நிலைப்பாட்டை இந்தியா ஆதரிக்கும் என்றும் நம்புவதாக இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தங்களை நேரில் சந்தித்து அளித்த மனுவிலும், தங்களுக்கு எழுதிய கடிதத்திலும் தெரிவித்துள்ள எங்களது நிலைப்பாட்டை வலியுறுத்துவதற்காகவும், இலங்கை போரின்போது நடந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பாக ஐக்கிய நாடு மனித உரிமைகள் கவுன்சில் அமெரிக்க ஆதரவுடன் கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிப்பதுடன், இலங்கைக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment