Translate

Tuesday 20 September 2011

பத்மநாபசுவாமி கோவிலின் இரகசிய அறையில் இருந்து எடுக்கப்பட்ட சொத்துக்கள் மதுரை மீனாட்சி கோவிலுக்கும், பாண்டி நாட்டுக்கும் உரிய சொத்துக்கள்


கேரள உயர்நீதிமன்றத்தின் ஆணையால் ஸ்ரீபத்மநாபர் கோயிலில் பாதாள இரகசிய நிலவறைகளைத் திறந்து பார்த்ததில் (ஒரு அறை நீங்கலாக) இதுவரையிலும் சுமார் இரண்டு லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளும், இதர பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திறக்காமல் இருக்கின்ற ஆறாவது அறையைத் திறந்தால் அதில் விலை மதிப்பற்ற தங்கத்தினால் ஆன சாமி சிலைகள் ஏராளம் இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.


    “C” பாதாள அறையில் இருந்த தங்க நகைகள், பாத்திரங்களில் குறிப்பிடத்தக்கவை, கழுத்துக்குடம், தங்க எழுத்தாணி, இதுகள் தவிர சிறியதும் பெரியதுமான ஏராளமான மோதிரங்கள், தங்க வளையல்கள், நெற்றிச்சுட்டி ஆகியவைகளும் கிடைத்தன. இந்த அறையின் ஒரு மூலையில் தங்கக்கட்டி, தங்க்கயிறு, நெல்மணி அளவிலான தங்க குண்டுமணிகள். நூற்றுக்கணக்கான தங்கச் செயின்கள், தங்கச் கம்பிகள், 50 பைசா அளவிலான தங்க நாணயங்கள், ஒரு பைசா அளசவிலான தங்க நாணயங்கள் காணப்பட்டன. 18 அடி நீளம் கொண்ட 214 கிலோ எடை கொண்ட 4 ராசட்த தங்கச் செயின்கள் இருந்தன. ஒரு சாக்கு நிறைய பெல்ஜியம் ரத்தினங்கள் இருந்தன”. (தினகரன் - 02.07.2011 – பக்.12)
    இந்த நகைகளைப் பார்ககும் போது வேணாட்டுப் பெண்களோ, அல்லது வேணாட்டு தெய்வங்களோ அணிகின்றவைகளாகத் தோன்றவில்லை. இத்தகைய நகைகள் தமிழர்கள் மட்டுமே அணிகின்றவைகளாக உள்ளன. சிலப்பதிகாரக் காவியத்தில் தமிழ்ப் பெண்கள் அணிகின்ற அணிகலன்கள் குறித்த விவரம் காணப்படுகிறது.
    “கால்விரல் மோதிரம், பரியகம், நூபுரம், அரியகம், பாடகம், சதங்கை, அரையில் அணியும் முத்துவடம், முப்பத்திரண்டு வடத்தாலான முத்து மேகலை, மாணிக்கமும் முத்தும் இழைத்ததோள் வளையங்கள், மாணிக்கமும் வைரமும் அழுத்திய சூடகம், செம்பொன்வளை, நவமணிகள், சங்கவளை, பவழவளை, மாணிக்க மோதிரம், ஆகியவைகளே”.
    “யவனம் ஏற்றி வந்து இறக்கிய பொன்னும் பகைவர்களிடமிருந்து கவர்ந்து கொண்டு வந்த பொன்னும், நாட்டிலேயே மண்ணைத் தோண்டியும், அரித்து எடுத்த பொன்னும், தமிழகத்தில் எங்கும் மலிந்து கிடந்தன”. (டாக்டர் கே.கே. பிள்ளை – தமிழக வரலாறு–1972 – பக் 142, 143)
    ஸ்ரீபத்மனாபர் கோயில் இரகசிய அறைகளில் காணப்படுகின்ற நகைகள் மேலே சொல்லப்படுகின்ற நகைகளைப் போன்றே காணப்படுகிறபடியால், அவைகள் தமிழர்களுக்குச் சொந்தமானவைகள் என்பதில் வேறு கருத்திருக்க முடியாது.
    இத்தங்க நகைகளுக்குப் பின்னால் பாண்டிய நாட்டு வரலாறு ஒன்று மறைந்து காணப்படுகின்றது. இத்தகையத் தங்க நகைக் குவியல் ஸ்ரீபத்மனாபசுவாமிக் கோவிலில் இருப்பதற்கு எக்காரணமும் இல்லையென்பது வரலாற்று ஆய்வாளர்களிடம் கணிப்பு. ஏனெனில் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் சாத்வீகத்தில் பற்றுடையவர்களும், பிறநாடுகளின் சொத்துக்களை கொள்ளை அடித்து தங்கள் கருவூலகத்தை நிறைக்க வேண்டும் என்ற பேராசை உடையவர்களும் அல்லர். இறைபக்தி மிக்கவர்களான இக்குடும்பம் தங்களது நாட்டை “தர்மபூமி”யாக கோலோச்சி வந்தவர்களும் ஆவர். அகண்ட திருவிதாங்கூரை உருவாக்கிய மார்த்தாண்டவர்மா மகாராஜாவும் சிறு நாடுகளின் மீது படை நடத்துகின்ற வேளைகளில் அந்நாட்டு செல்வங்களை கவர்ந்து வரவில்லை. அவரக்குப் பிறகு நாட்டை ஆண்ட மன்னர்களும், ராணிமார்களும் ஆங்கில அரசின் பாதுகாப்பில் இருந்தமையால் ஆங்கிலேயர்களுக்கு கட்ட வேண்டிய திறையைக்கூட உரிய காலத்தில் கட்ட இயலாமல் திக்குமுக்காடியதாக வரலாறு கூறுகிறது. வேலுத்தம்பிதளவாய் திறை செலுத்த இயலாததால் ஆங்கிலேயர்களுடன் போர் செய்து தோல்வியைத் தழுவினார். இப்பேர்பட்ட இக்கட்டான நிதி நெருக்கடிகளிலும் இக்குவியல் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் நிச்சயமாக அதை எடுத்து வேலுத்தம்பிதளவாய் கப்பம் கட்டுவதற்காகப் பயன்படத்தியிருப்பார். ஆங்கிலேயருக்கு இவ்வாறு புதையல் இருப்பது தெரிந்திருந்தால் அவர்கள் இதை கைப்பற்ற முயன்றிருக்கலாம். ஆனால் இவர்களுக்குத் தெரியாமல் இந்த நகைப் புதையல் இருந்தமையால் அவைகள் இவர்கள் காலங்களுக்கு முன்பே இங்கே பத்திரமாக இருந்துள்ளன என்பது உறுதியாகிறது. கர்னல்மன்றோ அவர்கள் திருவிதாங்கூருக்கு ஆங்கிலப் பிரதிநிதியாகவும், திவானாகவும் பணியாற்றிய காலத்தில் இராணி லட்சுமிபாய் அம்மையாருக்கு தங்கக் குடை ஒன்றை அன்பளிப்பாக அளித்தார் என்று வரலாற்றுப் புத்தகங்களில் குறிக்கபட்டுள்ளதாக செய்தி வெளியானது (தினகரன்- 02.07.2011- பக். 12) ஆனால் இந்த தங்கக்குடை மேற்படி புதையல்களில் காணப்படவில்லை. ஆகையால் இந்த தங்கப் புதையலுக்கு வேறு வரலாறு உண்டு என்பது உறுதியாகிறது. எனவே தங்கக் குவியலுக்கும் வேணாட்டிற்கும் சம்பந்தமில்லை என்பது உறுதியான ஒன்றாகிறது.

    பாண்டிய நாடு தெற்கே கன்னியாகுமரி முதல் கிழக்கே காவிரி ஆற்றங்கரை வரையிலும், வடக்கே கோயம்புத்தூர், நெல்லூர் வரையிலும் பரந்து கிடந்தது. அதன் தலைநகர் மதுரைப் பட்டணம் ஆகும்.
    மதுரையை சடையவர்மன் சுந்தரபாண்டியனையடுத்து மாறவர்மன் குலசேகர பாண்டியன் முடிசூட்டிக் கொண்டான். (கி.பி. 1268 – 1310) “ …... பாரசீக வளைகுடாவின் மேல் உள்ள தீவுகள் துருக்கி, ஈராக்கு, குராசான் ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் காணப்படும் செல்வங்கள் பாண்டிய நாட்டினின்றும் பெற்றவையாம். அவனுடைய ஆட்சியும், நாட்டுவளமும் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து வந்துள்ளன. இவ்வாட்சி காலத்தில் அன்னிய நாட்டு மன்னரின் படையெடுப்பு ஒன்றேனும் நிகழ்ந்ததில்லை. பாண்டிய மன்னனும் ஒரு முறையேனும் நோய்வாய்ப்பட்டிலான். மதுரை அரசு பண்டாரத்தில் ஆயிரத்து இருநூறு கோடிப் பொன் சேர்ப்புக்கட்டி வைக்கப்பட்டுள்ளது. அஃதன்றி மத்து, மாணிக்கம், நீலம், பச்சை போன்ற நவரத்தினங்கள் அங்கு குவிந்து கிடக்கின்றன. மேலும் விளக்குவதற்கு சொற்கள் இல்லை…”. எனறு வெனீஸ் நாட்டு வழிப்போக்கனான மார்கோ பாலே பாண்டிய நாட்டு செல்வக் கொழிப்பை குறித்து எழுதுகிறார். (டாக்டர் கே.கே. பிள்ளை – தமிழக வரலாறு, மக்களும் பண்பாடும் - 1975- பக். 375, 377)
    மார்க்கோபோலோ மேலும் குறிப்படுகையில், “பாண்டியநாடு இந்தியாவிலேயே, மிகச் சிறந்த நாடு என்றும், அது பண்பும் மாண்பும் வாய்ந்ததென்றும், அந்நாட்டை ஐந்து பாண்டியர்கள் அரசாண்டு வந்தனர் என்றும், அவர்களுள் ஒருவன் சொண்டர் பாண்டாவர் (சுந்தரபாண்டி வேர்) என்பவன் முடிசூடிய மன்னன் என்றும், பாண்டி நாட்டில் மிகப் பெரிய வனப்புமிக்க முத்துக்கள் கிடைத்தனவென்றும், தாமிரபருணியின் கூடல் முகத்தில் இருக்கும் காயலபட்டணம் மிகப் பெரிய நகரம் என்றும், ஹார்மோஸ், கிரீஸ், ஏடன் அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து குதிரைகளையும், வேறு பலபண்டங்களையும் ஏற்றிக்கொண்டு வந்த மதக்கலகங்கள் அனைத்தும் காயலுக்கு வந்துதான் போகின்றன என்றும், காயல் பட்டினத்தில் வாணிகம் செழித்தோங்கி நடைபெற்று வந்ததாயும், பாண்டிய மன்னனிடம் அளவு கடந்த பொன்னும், மணியும் குவிந்து கிடந்ததெனவும், அவன் நீதியுடனும், நேர்மையுடனும் ஆட்சி புரிந்து வந்தான் எனவும், அவன் அயல் நாட்டு வணிகருடன் மிகுதியும் கண்ணோட்டம் உடையவன் என்றும் மார்கோ பொலோவின் குறிப்புகள் தெரிவிக்கின்றன”. (அதே புத்தகம்-பக் 376)
    இதனைப் போன்றே பேராசிரியர் கே. இராஜைய்யன் அவர்களும் எழுதுகிறார்கள், காண்க:
 “ The foreign travelers who visited the pandya empire during the reign of Maravarman gives an account of the country. Marco polo, the Italian traveler, has stated”, the king possesses vast treasures and wears upon his person great store of rich jewells… An Arab traveler by name wassaf too visited the country . According to him the king was healthy and wealthy. His treasury was filled with gold and pearls.(Dr.K.Rajayyan – History of Tamil Nadu, past to present – 1995 – page 103).
இக் குறிப்புகளிலிருந்து பாண்டிய நாட்டின் மிகுதியானச் செல்வச் செழிப்பை அறிய முடிகிறது. அன்றைய மதிப்பில் 1200 கோடிப்பொன் சேர்ப்புக்கட்டி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிகின்றது. பொற்கட்டிகளின் மதிப்பு மட்டுமாக இது கருதப்படுகிறது. அதற்கு மேல் நவரத்தினங்கள். அதற்கு மேலும் விளக்குவதற்கு சொற்கள் இல்லை என்று டாக்டர் கே.கே. பிள்ளை எழுதுகிறார்.

வெளிநாடுகளில் இருந்து இத்தனைச் செல்வங்களும் பாண்டிய நாட்டுக்கு எப்படி வந்தடைந்தது? பாண்டியநாடு மேற்கத்திய மற்றும் சீனாவுடன் வியாபாரத் தொடர்பு வைத்திருந்தது. அதன் மூலமாக கிடைத்த திரவியங்களால் நாடு செழித்தது என்பதுதான் நிலை. அதற்காக இந்நாட்டிலிலுந்து என்ன என்னப் பொருட்கள் ஏற்றுமதியாயின என்பதற்கும் குறிப்புகள் உண்டு.
“மேற்கே கிரீஸ், ரோம், எகிப்து முதல் கிழக்கே சீனம் வரையில் கடலோடிப் பிழைத்தார்கள். எகிப்து, பாலஸ்தீனம், மெசப் பொட்டோமியா, பாபிலோனியா, சீனம் ஆகிய நாடுகளுடன் பண்டைத் தமிழர்கள் வாணியத் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தனர். தமிழகத்துப் பண்டங்களான ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு ஆகியவற்றிற்கு மேற்காசிய நாடுகளில் பண்டைய நாட்களிலேயே வேட்மையுண்டு.” (கே.கே. பிள்ளை – தமிழக வரலாறு – பக். 50)
“தமிழகம் ஏற்றுமதி செய்த சரக்குகளில் சாலச் சிறந்தவை இலவங்கம், இஞ்சி, மிளகு, ஏலம், அரிசி, நுண்வகைக் கலிங்கங்கள், தேக்கு, கருங்காலி, நூக்கு, சந்தனம் ஆகிய கட்டமரவகைகள் முதலியன” (கே.கே. பிள்ளை-தமிகை வரலாறு-1973 – பக். 5, 59)
அரிக்கமேட்டில் ஏராளம் உரோமானிய தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உரோமா புரியோடு வாணியம் இருந்தழமையால் மேலை நாட்டு வைரங்களும் கிடைத்தன. அவைகளும், பெற்காசுகளும் இப்பொழுது திறக்கப்பட்ட தங்கக்குவியல்களில் காணக் கிடைக்கின்றன. பாண்டிய நாட்டுடன் வாணியம் செய்ய நியமிக்கபட்டிருந்த உரோமானியர் ‘யவனர்’ எனப்பட்டனர். முதலாம் நூற்றாண்டில் அகஸ்டஸ் சீசர் தமிழ்நாட்டுடன் வாணியத் தொடர்பு கொண்டிருந்தார். முதலாம் நூற்றாண்டின் இடைப்பாகத்தில் பொறுப்பேற்ற ரோமைச் சக்கரவர்த்தி டைபிரியாஸ், கிரேக்கஸ் வாணிப்பத்தால் ரோமாபுரிச் செல்வம், ரோமைப் பெண்களின் வாசனைப் பொருட்கள் ஆசையால் கொடுக்கப்படுவதை தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்று ரோமை சட்டமன்றமான “செனட்” சபைக்கு வேண்டுதல் விடுத்தார். அந்த அளவிற்கு ரோமிலிருந்து செல்வம் தமிழகம் வந்தள்ளது.. அவைகள் இன்று பத்மனாபர் கோயிலில் காணப்படகின்றன.
இந்த குறிப்புகளை வைத்துப் பாhக்கும்போது, மதுரையில் காணப்பட்ட நகைகள், முத்துக்கள், வைர வைடூரியங்கள், கிர்pடங்கள், போன்றவைகள் அனைத்தும் கேரளம் ஸ்ரீபத்மநாபர்கோயில் பாதாள நிலவறைகளில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்களுடன் ஒத்திருப்பதைக் காணலாம்.
இவைகள் அனைத்தும் கேரளத்தின் ஸ்ரீபத்மநாபர் கோயில் இரகசிய நிலவறைகளுக்குச் எவ்வாறு சென்றடைந்தன என்பதை விரிவாக ஆராய்ந்தால் உண்மையை அறிந்து கொள்ளலாம்.
“மாறவர்மன் குலசேகரனுக்கு இருமக்கள் இருந்தனர். ஒருவன் சடையவர்மன் சுந்தரபாண்டியன், மணந்த மனைவிக்குப் பிறந்தவன்;: மற்றவன் மாறவர்மனின் வீர பாண்டியன், மன்னனுடைய வைப்பு மனைவிக்குப் பிறந்தவன். மாறவர்மன், பட்டத்துக்குரிய சுந்தரபாண்டியனை புறக்கணத்து வீரபாண்டியனுக்கு இளவரசர் பட்டம் சூட்டினான் (கி.பி 1296). சுந்தரபாண்டியன் இந்த அநீதியைப் பொறானாய் வெகுண்டெழுந்து தன் தந்தையைக் கொன்று தானே அரியணையெறினான் (கி.பி.1310). கைக்கெட்டியது வாய்க்கெட்டாத வாய்ப்பைப் பெற்ற வீரபாண்டியன், சுந்தரபாண்டியன் மேல் போர் தொடுத்தான். சுந்தரபாணடியன் மதுரையை கைவிட்டு ஓடிவிட்டான்”. (கே.கே. பிள்ளை – பக். 377)
ஆனால் மதுரையை சுந்தரபாண்டியனிடமிருந்து திரும்பப் பிடித்துக் கொள்வதற்கு வீரபாண்டியன் வேணாட்டு அரசனான இரவிவாமன் குலசேகரனிடமிருந்து படைத்துணை பெற்றான். (பேராசிரியர் மு. இராஜய்யன் - பக். 104)
“Maravarman Kulasekara has two sons. Jathavarman Sundara Pandya and Jayavarman Veera Pandya/ of these the former was the son of the king by his lega queen/ and the latter by a mistress. Kulasekara/ with some partiality for the latter arranged for his succession after him. Enraged at this outrage, the elder Sundara Pandiya assassinated his father, drove his half brother from Madurai and ascended the throne. This led to a great civil war between the two brothers and to the interference of Malikkafur, during his invasion of Ma bar”. (A. Krishnaswamy Iyengar, Annamalai Nagar – Topics in South Indian History from Early Times upto 1565 – 1978 – Page 217)
எனவே, மதுரையில் அரசு கட்டிலுக்காக தாயாதிச் சண்டைத் தொடர்ந்தது. தன்னிடமிருந்து, வீரபாண்டியன், மதுரையை திரும்பவும் பிடித்துக் கொண்டமையாலும், அவனுக்கு வேணாட்டு அரசர் படைத்துணை அளித்து விட்டமையாலும், வேறு வழியின்றி சுந்தரபாண்டியன் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் உதவியை நாடினான்: தென்னகத்தை கொள்ளையப்பதற்கான முழு முயற்சிகளில் ஈடுபட்டிருந்த அலாவுதீன் கில்ஜிக்கு இந்தப் பொன்னான வாய்ப்பை தானே உருவாக்கித் தந்தது.
அலாவுதீன் கில்ஜி, தளபதி மாலிக்கபூரிடம் மாபாரை (மலபாரை) கொள்ளையடித்து, தனது படையில் யானைப் படைப் பிரிவை வலுப்படுத்துவதற்காக ஏராளம் யானைகளை கவர்ந்து வர வேண்டும் என ஆணை பிறப்பித்தார். இந்த ஆணையை சிரமேற்கொண்டு, மாலிக்கபூர், பெரும்படையுடன் தென்னகம் புறப்பட்டான். வரலாற்று ஆய்வாளர் ஆர். சத்தியநாய்யர் இவ்வாறு குறிப்படுகிறார்.

“சுந்தரபாண்டியர் உதவிக்கு அழையாதிருப்பினும், மாலிக்கபூர் மாபாரில் படையெடுத்திருப்பாரென்பது உறுதி. ஏனெனில், அலாவுதீன் கில்ஜி, மாபாரின் வளம், செல்வம், சிறந்த யானைப்படை முதலியவற்றால் தூண்டப்பட்டு அப்பகுதியைக் கைப்பற்ற ஆர்வம் கொண்டிருந்தார்”. (இந்திய வரலாறு – பக். 112)
இதனால், மாலிக்கபூரின் முக்கிய நோக்கம் மாபாரைக் கபை;பற்றி முடிந்த அளவு யானைகளை கவர்ந்தெடுப்பதேயாகும். அந்த வேளையில் தான் மதுரையில் சுந்தரபாண்டியன் அழைப்பை ஏற்று, தனது பாதையை மதுரை நோக்கி மாற்றினால், மதுரையை மீட்டு சுந்தரபாணடியனுக்கு கொடுத்துவிட்டு, தஞ்சை, கும்பை, சிதம்பரம் போன்ற கோயில்களை கொள்ளை அடித்துவிட்டு திரும்பவும் மதுரையைக் கவருவதற்காக வந்தவனுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. மதுரைப் பொக்கிஷங்களையெல்லாம் வீராபண்டடியனும், சுந்தரபாண்டியனும், மீனாட்சி அம்மன் கோயில் பூசாரிகளும் கடத்தி மேற்கு சென்றுள்ளனர் என்று கேள்விப்பட்ட உடனே, மாலிக்கபூர் தன் படையை வேணாட்டு மீது நடத்தினான். இப்படையை வேணாட்டு அரசன் முதலில் களக்காட்டிலும், தொடர்ந்து ஆரல்வாய்மொழியிலும் எதிர்த்து பேரிட்டார். தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்த மாலிக்கபூர், ஆவணாட்டுடன் சமரசம் செய்து கொண்டு 500 யானைகளைப் பெற்று, ராமேஸ்வரம் சென்றான் என்று புலனாகிறது. மதுரைச் பொக்கிஷங்களைத் தேடி எடுக்கும் முயற்சியை கைவிட்டு, யானைகளுடன் திருப்தியடைந்து, வேணாட்டை விட்டுவிட்டான்.

“அச்சமயம் டெல்லி சுல்தன் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதியான மாலிக்கபூர் ஒரு செரும் படையுடன் தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்தான். சுந்தரபாண்டியன் அவனை அணுகி படைத்துணை அளிக்கும்படி விண்ணப்பித்துக் கொண்டான். மாலிக்காபூர் மதுரையை தாக்கினான். வீரபாண்டியன் மதுரையைவிட்டு வெளியேறப் பல இடங்களுக்கும் ஒளித்து மாலிக்காபூருக்கு தொல்லை கொடுத்தான்…”

“பலமுனைகளிலும் வீரபாண்டியன் மாலிக்காபூரை கடும் போர்களில் கலக்கி வந்தான்… மாலிக்காபூர் உறையூருக்கு அண்மையிலிருந்த வீரபாண்டியனின் தலைநகரான “பீர்வில்” என்ற இடத்தை நோக்கி தன் படையை செலுத்தினான். வீரபாண்டியன் படைகளில் பணிபுரிந்து வந்த 20,000 முஸ்லீம் படைவீரர்கள் தக்க சமயத்தில் தம் கடமையையும் நன்றியையும் மறந்தவர்களாய் மாலிக்காபூர் படையினருடன் சேர்ந்து கொண்டனர். வீரபாண்டியன் ஊரைவிட்டே ஓடிவிட்டான். நகரமும் மாலிக்காப+ரின் கைக்குள் விழுந்தது. அடை மழை வேறு பெய்யத்தொடங்கியது. அதனால் போரைத் தொடர இயலாதவனாய் மாலிக்காபூர் கண்ணணுரை நோக்கி விரைந்தான். அங்கே வீரபாண்டியன் காணப்பட்டான் எனச் செய்தி வந்தது. வழியில் பொன்னும் மணியும் ஏற்றிக் கொண்டு சென்ற பாண்டி நாட்டு யானைகள் நூற்றியிருபதை கைப்பற்றிக் கொண்டான்”. (கே.கே. பிள்ளை – 1975 – பக். 377 ரூ 378)

ஆனால் வேறு சில வரலாற்று ஆசிரியர்கள், வீரபாண்டியன் மதுரையை விட்டு வெளியேறுகின்ற வேளையில். அரண்மனை பொக்கிஷங்கள் அனைத்தையும் 120 யானைகளில் ஏற்றிச் சென்று, மேற்குக் காடுகளில்  சென்று காணாமற் போனான் என்று கூறுகின்றனர். பாண்டிய நாட்டின் மேற்குக் காடுகள் வேணாட்டின் கிழக்கு காடுகளாகும். அங்கிருந்;து, பாதுகாப்பு நிமித்தம் பொக்கிஷங்களை வேணாட்டிக்கு எடுத்துச் செல்வதற்கே அதிக வாய்ப்பு, ஏனெனில், மதுரையை சுந்தரபாண்டியனிடமிருந்து மீட்டு, வீரபாண்டியனுக்கு அரியணையை அளிப்பதில் படைத்துணை கொடுத்தவன் வேணாட்டு மன்னன். இரவிவர்மன் குலசேகரன் ஆவான். ஆகையால் வேணாட்டு மன்னர்கள் பாண்டியர்களுக்கு உறுதுணையாகவே என்றும் இருந்தள்ளனர். எனவே இந்த 120 யானைப் பொக்கிஷங்களும் வேணாட்டுக்கே சென்றடைந்தன என்று கருத அதிக வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையில் மாலிக்காபூர் வீரபாண்டியனைத் தேடிக்கொண்டு சிதம்பரம் சென்றடைந்தான். அங்கும் கோயில் பொக்கிஷங்களை சூறையாடினான். இடையில் காணப்பட்ட கோயில்களை இடித்து தரைமட்மாக்கினான். திருவரங்கத்தையும் அவன் விட்டு வைத்தானில்லை. அடுத்த மதுரையை குறி வைத்தான். அவன் தாக்குதலை முன்னரேயறிந்த சுந்தரபாண்டியனும் மதுரையை கைவிட்டு அரண்மனை பொக்கிஷங்களுடன் ஓடிவிட்டான்.
ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்சிலைகளையும் சாமிஆவரணங்களையும், பொக்கிஷங்களையும் கோயில் அர்ச்சர்களும், பிராமணப்பணியாளர்களும், மிகவும் இரகசியமாக எடுத்து ஆரல்வாய்மொழிக் கோட்டைக்கு வந்துவிட்டனர். அங்கே அவைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதை வரலாற்று அறிஞர் J.H. Nelson இவ்வாறு குறிப்படுகிறார்.

“The golden idol named Mathurai – Nayana – Veittha – Perumal, which graced the festal processions of god Siva, had been carried for safety to the Malabar country, when Parakrama fled for his life and there mysteriously lost together with much treasure. (J.H. Nelson, The Madura Country – A. Manual – 1868 page 81)

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்கச் சிலையையும், பொக்கிஷங்களும் மலபார் நாட்டில் காணாமற் போயிற்று என்று கூறுவதிலிருந்து, அவைகள் எங்கோ அறியபடாத இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது என்பதையே காட்டுகிறது.

“The golden idols which graced the festival procession of god Siva had been carried for fafety to Kerala. The golden idols were installed and worshipped in Kilukiluppaikadu in Aramboly. Malik kfur would have come to take back the golden idols, as Aramboly was well guarded the Muslim invasion of Travancore was averted. (Prof: N. Rajappan, unpublished Ph. Dthesis Chapter IV – page 69)

ஆரல்வாய்மொழியில் கிலுகிலுப்பைக்காடு என்ற இடம் மலைச்சரிவு ஆனதினால் அங்கே ஒரு சாஸ்தா கோயில் இருந்தது. அதில் மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரை பிரதிஷ்டை செய்தமையால், அந்த கோயில் “மீனாட்சி சுந்தரேஸ்வர் கோயில்” என்று பெயர் மாற்றம் கண்டது. இக்கோயில் இன்றும் ஆரல்வாய்மொழி வடக்குத் தெருவில் பிள்ளைமார் சமூகத்தார் வாழ்விடத்தில் காணலாம். இங்கே நிறுவப்பட்டிருந்த இந்த தங்க விக்கிரகங்களும், அதன் ஆபரணங்களும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தமையால், அவைகளை அங்கிருந்து எடுத்து திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பாதுகாப்புக்காக வைத்தனர்.

மாலிக்காபூர் மதுரையை வீரபாண்டியனிடமிருந்து மீட்டு, சுந்தரபாண்டியனிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, வேறு போர் இல்லாத நிலையில் தஞ்சை மற்றும் சிதம்பரம் கோயில்களில் படையெடுத்து செல்வங்களையும், யானைகளையும் கவர்ந்துவிட்டு மீண்டும் மதுரை திரும்பினான். அவனது நோக்கம், மதுரையையும் கொள்ளை அடித்துவிட்டு, டெல்லி திரும்ப வேண்டும் என்பதாயிருந்தது. இவனது நோக்கத்தை அறிந்து கொண்ட சுந்தரபாண்டியன், அரண்மனை மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் பொக்கிஷங்களையும் எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டான். வீரபாண்டியனை எப்படியாவது பிடித்து, அவன் கவர்ந்து சென்ற பொக்கிஷங்களை பிடித்தெடுப்பதற்காக மாலிக்கப+ர் வனப்பகுதிகளுக்கு படையெடுத்தான்.

“Kaffur went in pursuit of Veera Pandiya, who had fled into deep forest, but soon he gave up the chase because of incessant rain and the difficult forest terrain… There after he made a sudden raid on Madura, but found that Sundara Pandya had got news in advance and has fled with all his treasure. Some Chroniclers like Firistha and Haji – ud- Dabir, mention that Kaffur reached the extreme south, of Indian Peninsula. It could be that he was able to go upto Rameswaram, for in his work entitled ‘Ashiga’ Amir Khusrav speaks of an invasion against Veera Pandya upto the coast of Ceylon”. (A History of Indian Civilization – Vol. II Part – I K.P. Bhjadur – 1980 – Page 61,62).

னவே பாண்டிய சகோதரர்களைத் தேடி மாலிக்காப+ர் தென்னகமெங்கும் ஜல்லடை போட்டு அலசியிருக்கிறான். ஆனால் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் இருவரும் வேணாட்டுக்குத்தான் தப்பியிருக்க வேண்டும். இந்த தேடுதல் வேலையில் அவன் ஆரல்வாய்மொழிக்கும் வந்திருக்கிறான். ஆனால் வேணாட்டு அரசனின் படைகள் அவனை எதிர்த்து நின்று போர் புரிந்ததனால், அவன் வேறு வழியின்றி சமாதானப் பேச்சு மூலம் 500 யானைகளைப் பெற்றுக் கொண்டு தெற்கே சென்றான். இதனால் பாண்டியநாட்டு பொக்கிஷங்களும் வேணாட்டும் தப்பித்துக் கொண்டன.
பாண்டிய நாட்டை ஒட்டு மொத்தமாகக் கொள்ளையடித்துச் சேர்த்த பொக்கிஷங்களைக் கொண்டு, மாலிக்காப+ர் 1311 – ல் டெல்லி திரும்பினான்.

“After these exploits he returned to Delhi in 1311 with enormous spoils which included 312 elephants, 20,000 horses, 2750 pounds of gold, equal in value to ten crores of tanks and chests of jewels. No such booty had ever before been brought fo Delhi”. (History of India (1000 – 1707) – Ashirbadilal Sri Vastava- 1971- Page 126 & 124) இந்த எண்ணிக்கைகளிலும் வரலாற்று ஆசிரியர்கள் ஒத்த கருத்துடன் இல்லை.

பாண்டிய நாட்டு வாரிசுகளான சுந்தரபாண்டியனும், வீரபாண்டியனும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தான தங்கச் சிலைகளும், நகைகளும் அவனுக்கு கிடைத்திருந்தால் அவன் கவர்ந்து சென்ற பொக்கிஷங்கள் பல மடங்கு உயர்ந்திருக்கும். ஆனால் முன் கருதலுடன் சேர நாட்டில் இவைகள் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டதால், அவைகள் தப்பித்துக் கொண்டன.

மாலிக்காப+ருக்குப் பிறகு, டெல்லி சுல்தான் முகமதுபின்துக்ளக் தனது பிரதிநிதிகளை மதுரைக்கு அனுப்பி வைத்து, இசுலாமியர்களின் ஆட்சியை பாண்டிய நாட்டில் நிறுவினான். இவர்களது ஆட்சி 1367 வரைத் தொடர்ந்தது. அவர்களை விரட்டுகிறேன் என்று கூறிக் கொண்டு விசய நகரப் பேரரசு தனது ஆட்சியை மதுரையில் (1367 முதல் 1565 வரை) நிலை நிறுத்தியது. ஆகையால் பாண்டிய மன்னர்குல வாரிசுகளால் பாண்டிய நாட்டைத் தொடர்ந்து ஆட்சிச் செய்ய இயலாமற் போகவே, அவர்களது குலம் அழிந்தது. இதனால் சேர நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பாண்டியநாட்டு பொக்கிஷங்களை பிற்காலத்தில் உரிமை கொண்டு மீட்டுச் செல்வதற்கு யாரும் வராத காரணத்தால், இன்று வரை அவைகள் கேரளாவில், ஸ்ரீ பத்மனாபர் கோயிலில் ரகசிய பாதாள அறைகளில் நிரம்பிக் கிடைக்கின்றன.

இந்த செல்வங்களை அங்கே பதுக்கிப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த ரகசியத்தை அறிந்து, பிற்காலங்களிலும் அதைக் கைப்பற்றுவதற்குப் பல முயற்சிகள் நடந்துள்ளன. 1544 – ல் விஜய நகரத் தளபதி அச்சுதராயரும், 1634 – ல் மதுரை மன்னர் திருமலை நாயக்கரும், 1680- ல் முகிலனும் திருவிதாங்கூரை தாக்கினர். 1680 – ல் படை நடத்திய முகிலன் எவ்வித எதிர்ப்புமின்றி திருவனந்தபுரம் சென்று நகைகளை கைப்பற்றுவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சியில் தோல்வியுற்றான். அவனுக்குப் பிறகு 1697–ல் ராணி மங்கம்மாளின் படைத்தலைவன் நகரசப் பையனும், 1712 – ல் அனந்தோசி நாயக்கனும் தொடர்ந்து படையெடுத்து நகைகளைப் பெற முடியாது திரும்பினர், இவனுக்குப் பிறகு திருவிதாங்கூர் வட எல்லை வழியாக, நகைகளைக் கவருதல் என்ற நோக்குடன் மைசூர் டிப்பு சுல்தானின் முயற்சியும் பயனளிக்கவில்லை. இதனால் ஸ்ரீபத்மனாபர் கோயிலில் அந்த பாண்டிய நாட்டுச் செல்வங்கள் சேதப்பாடுகள் இன்றி பாதுகாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஸ்ரீபத்மனாபசுவாமி கோயிலில் ரகசிய நிலவறைகளில் பாதுகாக்கப்பட்டு வரும் பொரும்பாலான செல்வம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நகைகளும், பாண்டிய நாட்டின் செல்வங்களும் ஆகும். அதை திரும்ப பெறுவதற்கு தமிழக அரசுக்கு முழு உரிமையுண்டு.
மதுரையில் தாயதிச் சண்டையால் நாடு அழிந்தது. சுந்தரபாண்டியன் மதுரையை மீட்பதற்கு டெல்லி சுல்தான் படைத்தளபதி மாலிக்கப+ரை விரும்பி அழைத்தான். அதை ஏற்ற மாலிக்கப+ர் வீரபாண்டியனை விரட்டிவிட்டு சுந்தரபாண்டியனை மதுரைக்கு அரசானாக்கினான். பிறகு தென்னாடு புகுந்து அனைத்துக் கோயில்களையும் கொள்ளையிட்டான். ஆனால் மதுரையை விட்டு வெளியேறுகின்ற வேளையில் வீரபாண்டியன் 120 யானைகளில் பாண்டிய நாட்டின் பொன்னையும், தங்கத்தையும், மாணிக்கங்களையும் கூடவே எடுத்துச் சென்றான் என்று கே.கே.புpள்ளை கூறுகிறார் (பக்கம் 378) மீதமிருந்தை சுந்தரபாண்டியன்  எடுத்துக் கொண்டு தெரியாத இடத்துக்கு சென்று விட்டான் என்று பெராசிரியர் கே.இராஜய்யன் எழுதுகிறார்(பக்கம் 111)
 “While Veera Pandya fled to the woods, Sundara Pandya, collected his treasures and escaped to some unknown place. There is a tradition that Ravivarma Kulasekara, the ruler of Venad fought against the Afghans and forced them to retreat” (Prof: K. Rajayyan – History of Tamil Nadu, past to present – 1955 – page 111).
இதிலிருந்து நம் அறிவுக்கு ஒரு உண்மைப் புலனாகிறது. வேணாட்டு அரசர்கள், பாண்டிய அரசுக்கு ஆதரவும், அடைக்கலமுமாக இருந்தனர் என்பதே. அறியப்படாத இடத்துக்கு, மதுரை பொக்பிஷங்களுடன் சுந்தரபாண்டியன் சென்றுவிட்டான் என்று குறிக்கப்பட்டிருப்பது, அவைகளை வேணாட்டுக்குத்தான் சுந்தரபாண்டியன் எடுத்துக் சென்றுள்ளான் என்பதை ரகசியமாக வைத்து, அவைகளை வேணாடு பாதுகாப்பதை வெளி உலகிற்குத் தெரியாமல் இருப்பதற்குச் செய்த தந்திரம் என்றே கருத வேண்டும். எனவே ஸ்ரீபத்மநாபர் கோவில் பாதாள ரகசிய அறைகளில் காணப்படுகின்ற தங்க நகைகள், வைர வைடூரியங்கள், பொற்காசுகள், தங்க கீரிடங்கள், சிலைகள் அனைத்தும் பாண்டிய நாட்டு உடமைகளும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உரியவைகளும் ஆகும்.

இவைகளைக் குறித்த விவரங்கள் அனைத்தும் மதிலகம் ஆவணங்களில் காணலாம். ஆனால் அவைகள் அழிக்கப்பட்டிருப்பதற்கும் வாய்ப்பு உண்டு. எனென்றால் மலையாளிகள் முன் கருதலுடன்தான் எப்போதும் செயலாற்றுவர். இருப்பினும் தமிழக அரசு கேரள அரசுடன் இது குறித்து தொடர்பு கொண்டு, பாண்டிய நாட்டுக்கும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கும் சொந்தமான இந்த நகைகள் அனைத்தையும் மீட்டெடுக்க வேண்டும். தேவைப்பட்டால், கேரள உயர்நீதிமன்றத்தில் திரு. சுந்தரராஜ் ஐயர் தொடர்ந்திருக்கின்ற நீதிமன்ற வழக்கில், தமிழக அரசம் தன்னை இணைத்துக் கொள்வது தேவையாகிறது. அல்லது தனியாக ஒரு வழக்கை டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தொடரலாம். அவ்வாறு தொடர்ந்து தமிழர்களுக்கு, குறிப்பாக பாண்டிய நாட்டிற்குச் சொந்தமான நகைகளை மீட்டெடுத்திட வேண்டும்.

(Dr. D. Peter)
Chairman,
Kanyakumari Institute of Development Studies (KIDS),
266, Water Tank Road, Nagercoil-629001

No comments:

Post a Comment