மன்னார் பேசாலை பகுதியில் அமைந்துள்ள பற்றிமா வீட்டுத்திட்டத்தில் மீள்குடியேறியிருந்த குடும்பங்களைக் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடற்படையினர் அச்சுறுத்தி பலவந்தமாக வெளியேற்றியுள்ளனர்.
இந்த நிலையில் அந்த மக்கள் இரவேடு இரவாக சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரத்தை நடைப்பயணத்தில் கடந்து வந்து பேசாலை புனித வெற்றி மாதா தேவாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில், குறித்த பேசாலை 50 வீட்டுத்திட்டத்தில் கடந்த பல மாதங்களாக மக்கள் வீட்டு வேலை செய்து வந்தனர்.இந்த நிலையில் சுமார் 15 குடும்பங்கள் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் குறித்த வீட்டுத்திட்டத்தில் உள்ள தமது வீடுகளில் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் சம்பவ தினமான கடந்த வெள்ளிக்கிழமை இரவு 15 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 பேர் வரை பேசாலை 50 வீட்டுத்திட்டத்தில் உள்ள தமது வீடுகளில் தஞ்சமடைந்தனர்.
எனினும் குறித்த வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரும்,அவருடைய மகளும் வீட்டுத்திட்டத்துக்கு வந்த போதும் வீட்டிற்கு வர வில்லை.இந்த நிலையில் இரவு 8.30 மணியளவில் குறித்த குடும்பஸ்தர் தனது மனைவிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தன்னை கடற்படையினர் தடுத்து வைத்துள்ளதாகவும்,தான் அங்கு வர முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அங்கிருந்து சுமார் 15 பேர் கடற்படையினருடைய முகாமுக்கு வந்த போது அங்குள்ள கடற்படையினர் மக்களுடன் வாக்குவாதப்பட்டதோடு உடனடியாக அனைவரையும் வெளியேறுமாறு உத்தரவிட்டு அச்சுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் இரவு 9 மணியளவில் குறித்த காட்டுப்பிரதேசத்தினுள் வாழ்ந்து வந்த 15 குடும்பங்களும் பேசாலை வெற்றிநாயகி ஆலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.
இதன் போது வயோதிபர்கள்,பெண்கள்,சிறுவர்கள் என அனைவரும் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்தனர்.
உறக்கத்தில் இருந்தவர்களும் அதிர்ச்சியுடன் மீண்டும் ஓர் இடப்பெயர்வா?என அச்சத்துடன் சென்றனர்.
இந்த மக்கள் இரவு 11.30 மணியளவில் பேசாலை புனித வெற்றி நாயகி தேவாலயத்தை வந்தடைந்தனர்.
இந்த நிலையில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அன்ரனி விக்டர் சோசை உடனடியாக அங்கு சென்று நிலைமைகளை நேரில் பார்வையிட்டதுடன் வெளியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மன்னாரில் உள்ள கடற்படை அதிகாரிகளிடம் அவர் தொடர்பு கொண்டு கேட்டபோது மேலிடத்தின் உத்தரவுக்கமைய தாங்கள் கடற்கரைப் பகுதியில் 5 கிலோ மீற்றர் தூரமுள்ள பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தியிருப்பதாகவும் இந்தியாவில் இருந்து சந்தேகத்திற்குரிய ஒரு குழுவினர் இங்கு வந்துள்ளது தொடர்பில் தகவல் கிடைத்திருப்பதாலுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கடற்படையினர் அறிவித்துள்ளார்கள்.
தற்போது பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் அகதிகளாக உறவினர்களுடைய வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். _
No comments:
Post a Comment