சிவ்சங்கர் மேனன் - சம்பந்தன் சந்திப்பு
இந்திய தேசிய பாதுகாப்புச் செயலர் சிவ்சங்கர் மேனன் இன்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கு மேற்கொண்ட ஒரு நாள் விஜயத்தில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்தார்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனுடன் சந்திப்பு
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு, வடக்கிலும் கிழக்கிலும் தொடரும் நில அபகரிப்புகள், இராணுவமயமாக்கல் ஆகியவை குறித்து தேசிய பாதுகாப்பு செயலரிடம் எடுத்துரைத்ததாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இந்த முறை சிவ்சங்கர் மேனனின் விஜயம் ஒரு தெளிவான செய்தியை இலங்கை அரசுக்கு சொல்வதற்காகவே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தான் உணர்வதாக அவர் தெரிவித்தார்.
இது தவிர, இலங்கை அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நடத்தி வந்த இரு தரப்புப் பேச்சுவார்த்தைகள் நின்று போயிருப்பது, பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இனப்பிரச்சினையைக் கொண்டு செல்ல அரசு எத்தனிப்பது ஆகியவையும் விவாதிக்கப்பட்டதாக சம்பந்தன் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் பிற மாகாண சபைகளுக்குத் தேர்தல்களை நடத்தும் சூழல் இருக்கும் போது, வட மாகாணத்துக்கு மட்டும் இன்னும் தேர்தல் நடத்த இலங்கை அரசு முன்வராத பிரச்சினையும் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஆனால் இந்தியா, ஐநா மன்ற மனித உரிமைகள் பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கெதிராக வாக்களித்ததால், இந்தியா மீது இலங்கை வருத்தத்தில் இருப்பதாகவும், எனவே இந்தியாவின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் நிலையில் இலங்கை இல்லை என்றும் வரும் செய்திகள் பற்றிக் கருத்து தெரிவித்த சம்பந்தன்,
இந்தியா இந்த வாக்கெடுப்பில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் முன்னர் அதன் விளைவுகளைக் கவனத்தில் கொண்டே அந்த முடிவை எடுத்திருக்கும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
மேலும், இந்தியா ஒரு செல்வாக்கு மிக்க பிராந்திய வல்லரசு என்ற நிலையில், இலங்கைப் பிரச்சினையில் அதன் நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் அக்கறையுடன் கவனிக்கும் என்று தான் கருதுவதாகவும், எனவே இந்தியாவுக்கு இலங்கை விடயத்தில் செல்வாக்கில்லாமல் போய்விடும் என்ற கருத்தை தான் நம்பவில்லை என்றும் கூறினார்.
No comments:
Post a Comment