Translate

Saturday, 30 June 2012

இந்து, இஸ்லாமிய இடங்களில் விகாரை தாபிப்பது மக்களை துன்பப்படுத்தியுள்ளது: த.தே.கூ


  இந்து, இஸ்லாமிய மக்களின் பூர்வீக வாழ்விடங்களைத் தொல்பொருள் ஆய்வுப் பகுதி என அரசாங்கம் பிரகடனப்படுத்தி அங்கு பௌத்த விகாரைகளைத் தாபிப்பது இந்து, இஸ்லாமிய மக்களைப் பெரிதும் துன்பப்படுத்தியுள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் உள்ள 3ஆம் கட்டை மலை அருகில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை இட்டு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் பௌத்த மதவிவகார அமைச்சரும், பிரதமருமான திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்னவுக்கு அவசரமாக கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போதைய அரசாங்கத்தில் வடக்கு, கிழக்கு மண்ணில் இவ்வாறான பௌத்த மத வணக்கஸ் தலங்கள் திட்டமிட்டு தாபிக்கும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இது குறித்து தங்களுக்கு மகஜர் மூலமும், பாராளுமன்றத்திலும், பாராளுமன்ற விவகார அமைச்சின் கூட்டத்திலும் கவனத்துக்கு கொண்டு வந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகையால் ஆசியாவில் ஆச்சரியம் மிக்க நாடாக இலங்கையை மாற்றுவதாக கூறும் தங்கள் அரசாங்கம் ஒருபோதும் சிங்கள மக்கள் வாழாத இடங்களில் சிறுபான்மை மக்களை வேதனைப்படுத்தும் வகையில் சிறுபான்மை மக்களின் மத வழிபாட்டை கொச்சைப்படுத்தும் வகையில் திட்டமிட்டு பௌத்த மதம் தாபிப்பது இலங்கை நாட்டின் வரலாற்றில் பெரும் ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்தி வருகின்றது.

ஆகவே தயவு செய்து உடனடியாக தங்களது ஆதரவுக் கட்சியான ஹெல உறுமயவின் நிகழ்ச்சி நிரலில் அடங்கி உள்ள வடக்கு, கிழக்கு மண்ணில் இத்திட்டமிட்ட பௌத்த மத தாபிப்பை தடுத்து நிறுத்துமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்நிலை தொடருமாக இருந்தால் இது குறித்து இந்து மக்களை எழுச்சிப்படுத்த வேண்டிய சூழல் உருவாகும். இலங்கை வரலாற்றிலே தற்போதைய ஆட்சியில் தான் சிறுபான்மை மக்களின் வாழ்விடங்களில் பௌத்த மதம் தாபிக்கும் செயற்பாடும், சிறுபான்மை மக்களின் வணக்கஸ்தலங்களைத் திட்டமிட்டு அழிக்கும் செயற்பாடும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.

தற்போது மூதூர் 3ஆம் கட்டை மலை அருகில் சிங்களக் குடியிருப்புக்கள் இல்லாத நிலையில் இங்கு பௌத்த மதம் தாபிக்க நடவடிக்கை எடுப்பதோடு, அருகில் உள்ள காடுகளை துப்புரவு செய்து சிங்கள மக்களைக் குடியிருக்க வைக்க ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தமிழ் பேசும் சமூகம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இந்த வகையில் இச்செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறு கேட்கின்றேன். இந்து, இஸ்லாமிய மக்களின் பூர்வீக வாழ்விடங்களை தொல்பொருள் ஆய்வுப் பகுதி என அரசாங்கம் பிரகடனப்படுத்தி அங்கு பௌத்த விகாரைகளைத் தாபிப்பது இ;ந்து, இஸ்லாமிய மக்களை பெரிதும் துன்பப்படுத்தியுள்ளது.

ஜனநாயக நாட்டில் நடைபெறும் இச்செயற்பாட்டைத் தடுத்து நிறுத்த வேண்டியது நாட்டின் பிரதமர் என்ற வகையில் தங்களுக்கு உரியதாகும். எனவே நியாயமான நடவடிக்கையை மேற்கொண்டு அதற்கான பதிலைத் தந்துதவுமாறு வேண்டுகின்றேன் என அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார். 
_

No comments:

Post a Comment