Translate

Wednesday, 20 July 2011

போர்க்குற்றவாளி மகிந்தரோடு மேடையில் ஒன்றாகத் தோன்றவிருக்கும் 3 கோமாளிகள்!

போர்க்குற்றவாளி மகிந்தரோடு மேடையில் ஒன்றாகத் தோன்றவிருக்கும் 3 கோமாளிகள்!

இன்று (20.07.2011) கிளிநொச்சி மண்ணில் நடைபெற உள்ள மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு தமிழக பின்னிப் பாடகர்களான மனோ, சுசித்திரா, கிரிஷ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் என்ற அதிர்சிகரமான செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இவர்கள் கிளிநொச்சி செல்லவுள்ளதாகவும், இன்று இவர்களின் இசைக்கச்சேரி நடைபெறும் எனவும் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருவதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகிந்தர் கலந்துகொள்ளும் இவ்விழாவின் மேடையில் இவர்களும் தோன்றி பாடுவது மட்டுமல்லாது, மகிந்தருக்கும் வாக்குப் போடுமாறு இவர்கள் கோரவுள்ளனராம்.

இது நடைபெறுமானால் இந்த 3 கோமாளிகளையும் யார் தான் மன்னிப்பார் ? பல்லாயிரக்கணக்கான உயிரைக் குடித்த மகிந்தருடன் சேர்ந்து அவருக்காகப் பாட்டுப்படிப்பதா ? இல்லை ஈழத்தில் பல்லாயிரம் உயிர்கள் கொல்லப்பட்டுவதை நிறுத்தக்கோரி முத்துக்குமார் முதல் 17 பேர் தங்களைத் தாங்களே தீ இட்டார்களே அதனை மறப்பதா ? இவர்கள் எல்லாம் எதை மறந்து இலங்கைக்குச் சென்றார்கள் ? இந்த மூன்று கோமாளிகளும் இலங்கைக்கு சுற்றுப்பயனம் என்று சொல்லி தற்செயலாக சென்றார்களா இல்லை முன்னரே பிளான் போட்டுத் தான் இந் நாட்களில் சென்றார்களா என்ற சந்தேகங்களும் இப்போது வலுக்கின்றது.

மேடையில் ஏறி இவர்கள் பாட்டுப்பாடுவதால் ஈழத் தமிழ் மக்கள் மனம் மாறி மகிந்தருக்கு வோட்டுபோடுவார்கள் என அவர் நினைத்தால் அது அவருடைய அடி முட்டாள்தனத்தைக் காட்டுகிறது. ஆனால் இந்த 3 கோமாளிகளுக்கு எங்கே போனது அறிவு ? இவர்கள் திரும்பவும் சென்னை தானே செல்லவேண்டும். இவர்கள் என்ன அமெரிக்கா செல்லவிருக்கிறார்களா இல்லையே. மகிந்தரோடு சேர்ந்து ஒரே மேடையில் நின்று பாடல் எதுவும் படிக்கவேண்டாம் என்ற பல அழுத்தங்கள் இவர்களுக்குச் சென்றவண்ணம் உள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.

இதனை உதாசீனம் செய்து அவர்கள் மகிந்தருக்கு ஆதரவாக செயல்படும் பட்சத்தில், தமிழ் நாடு திரைப்படத் துறையில் இருந்து இவர்கள் ஓரம்கட்டப்படுவது நிச்சயம் என்ற சூழ் நிலை தோன்றும். தமிழ் உணர்வாளர்களும் திரைப்படத் துறையினரும் இவர்களுக்கு நல்ல பாடம் ஒன்றைப் புகட்டாமல் விடமாட்டார்கள். ஈழத்தமிழர்களுக்காகச் சிறைசென்று, தன் உடலுக்கு தீயிட்டு, போராட்டங்களை நடத்திய எத்தனையோ தொப்புள்கொடி உறவுகள் இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் இப்படியும் சிலர் ! மகிந்த போடும் எலும்புத்துண்டுக்காக அலையும் ஜென்மங்களாவும் உள்ளனர்.

நடைபெறவிருக்கும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோகவெற்றி பெறும் என்பதில் எவருக்கும் சந்தேகங்கள் இருக்காது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடும் பிழைகளை நாம் அவ்வப்போது சுட்டிக்காட்டுவோமே தவிர, ஈழத்தில் ஒருமித்த தமிழரின் குரலாக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற அதிர்வு இணையமும் தன்னாலா உதவிகளைப் புரியும் என்பதனையும் இங்கே தெரிவிக்க விரும்புகிறது.

அதிர்வு

No comments:

Post a Comment