நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகங்கள் ஊடாக மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பாணை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய 30 பக்க அழைப்பாணையை இலங்கையில் உள்ள ஊடகங்கள் உட்பட 100 ஊடகங்களில் வெளியிட உள்ளதாக அமெரிக்காவின் அரசமைப்பு சட்டத்தரணி புரூஸ் பெய்ன் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் அந்த அழைப்பாணை ஜனாதிபதியைச் சென்றடைந்தமை உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
செப்ரெம்பர் 30ஆம் திகதி குறித்த நீதிமன்ற ஆவணம் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகச் சட்டத்தரணி புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.
சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகளுக்குப் பொறுப்பானவர் என்று கூறி ஜனாதிபதி மீது அமெரிக்காவில் சித்திரவதைக்கு உள்ளானோரைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
படையினரால் படுகொலை செய்யப்பட்ட மூவரின் சார்பில் அமெரிக்க சமஷ்டி நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதியிடம் இருந்து 30 மில்லியன் டொலர் நட்டஈடு கேட்டுத் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குத் தொடர்பான அழைப்பாணை ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் ஜனாதிபதி மாளிகையோ, வெளிவிவகாரத்துறை அமைச்சோ, நீதி அமைச்சோ அதனைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டன.
இதையடுத்தே ஊடகங்களின் மூலம் அழைப்பாணையை ஜனாதிபதிக்கு எட்டச் செய்ய அனுமதிக்குமாறு புரூஸ் பெய்ன் அமெரிக்க சமஷ்டி நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தார்.
இந்த அழைப்பாணையை இலங்கை ஜனாதிபதி நீண்டகாலத்துக்குப் புறக்கணிக்க முடியாது என்றும், ஜனாதிபதியிடம் அழைப்பாணை சமர்ப்பிக்கப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று தாம் நம்புகின்றனர் எனவும் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத் தொடருக்காக நியூயோர்க் சென்றிருந்த சமயம் அங்குள்ள குயின்ஸ்சில் புத்த விகாரைக்குச் சென்றபோது அழைப்பாணையை கையளிக்க அமெரிக்க அதிகாரிகள் முனைந்தனர் எனவும், ஆனால் அவரது பாதுகாவலர்கள் அந்த ஆவணத்தை கையளிக்க முடியாமல் தடுத்து விட்டதாகவும் சட்டத்தரணி மேலும் கூறியுள்ளார்.
அழைப்பாணை பெறுவதை அவர் தவிர்ப்பது தெளிவாகியுள்ளதால், நீதிபதிகள் மகிழ்ச்சியடையவில்லை. எனவே இந்த அழைப்பாணையை பரிமாற ஊடகங்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் புரூஸ் பெய்ன் தெரிவித்துள்ளார்.
அழைப்பாணையை முழுமையாக வெளியிட முன்வருமாறு உலகிலுள்ள ஊடகங்களுக்கு குறிப்பாக இலங்கையில் உள்ள ஊடகங்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment