Translate

Sunday, 2 October 2011

சிங்களம் நிராகரிக்கும் போர்க்குற்ற விசாரணையும் அரசியல் தீர்வும் - இதயச்சந்திரன்


சிங்களம் நிராகரிக்கும் போர்க்குற்ற விசாரணையும் அரசியல் தீர்வும் - இதயச்சந்திரன்

ஒரு வாறாக நிபுணர்குழுவின் அறிக்கையை மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரிடம் கொடுத்து விட்டார் ஐ.நா பொதுச் செயலர் பான்கீ மூன்.
கொடுத்தால் உறவை முறித்துக் கொள்வோமென பான் கீ மூனிற்கு அச்சுறுத்தல் கொடுத்த சிங்களம், பேரவையின் விசாரணைக்கு எடுத்தால் நீதிமன்றம் செல்வோமென வெருட்ட ஆரம்பித்துள்ளது.

அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு 18வது கூட்டத் தொடர், எடுப்பதா இல்லையா என்பதை விவவாதிக்க 19வது கூட்டத்தொடர், விவாதிப்பதற்கு 20வது கூட்டத்தொடர், எடுத்த முடிவிற்கு என்ன செய்யலாமென்று 21வது கூட்டத்தில் பேசும் போது 2012 ஆம் ஆண்டும் முடிந்துவிடும். அதற்கிடையில் வடக்கு - கிழக்கெங்கும் தமிழர் நிலங்கள் சுத்தமாகக் கைமாறிவிடும். பின்னர் தாயகம் அற்றவர்களுக்கு சுயநிர்ணய உரிமை எதற்கென மாக்சிச ஜம்பவான்களான டி.யூ.குணசேகராவும், திஸ்ஸ விதாரணவும், மகிந்தரின் மந்திர ஆலோசகரான வாசுதேவாவும் சித்தாந்தக் கேள்விக்கணைகளை தொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
வடிவங்கள் மாறலாம், போராட்டம் மாறக் கூடாதெனப் புதிதாகச் சொல்பவர்களும், இலங்கையின் இறையாண்மைக்குள் தீர்வொன்றே பொருத்தமென, தேசங்கள் இல்லாத தேசத்திற்கு விளக்கம் கூற முற்படுவார்கள். இதைத்தான் சிறுபான்மை இனமென்று இல்லை என மகிந்தரும் வடக்கிற்கு தமிழ் பொலிசார் தேவையில்லையென கோத்தபாயாவும் விளக்கமாகக் கூறுகிறார்கள்.
கூட்டமைப்பு, அரசோடு பேசிக்கொண்டிருக்கும் போது, தமிழர் தாயக நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. இதை நிறுத்தும்வரை, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியாதெனக்கூற கூட்டமைப்பால் முடியவில்லை. இத்தகைய விடயங்களில் பலஸ்தீன விடுதலை இயக்கம் உறுதியாகத்தானிருக்கிறது. யூதக் குடியேற்றங்களைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேலுடன் பேசிப் பலனில்லை என்பதால், இம் மாத இறுதியில், தனிநாட்டுக் கோரிக்கையை ஐ.நா சபையில் முன்வைக்க அவ்வியக்கம் தீர்மானித்துள்ளது கவனிக்கத்தக்கது.
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா சபையில் பந்தாடப்படுவது போன்று, பேச்சுவார்த்தைகளும் இழுபட்டுச் செல்லும். அதற்கான அடித்தளத்தினை ஏற்கனவே சிங்களம் அமைத்துவிட்டது. 16 ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் 15 எதிர்கட்சி உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்கிற மாயமான் வேட்டைக்காரர்கள் அரசியல் தீர்வுகாண புறப்படப் போகிறார்கள்.

சமாந்தரமாக, தமிழ் தேசியக் கூட்டமைப் போடும், மகிந்தர் பேசிக் கொண்டிருப்பார். அங்கு எட்டப்படும் பகுதி பகுதியான முடிவுகள், நாடாளுமன்றத் தெரிவுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். இந்த 31 பேரடங்கிய குழுவில், பேரினவாத அரசியல் மாயைக்குள் சிக்குண்டு கிடப்போரே பெரும்பான்மையாக இருப்பார்கள். ஆகவே கூட்டமைப்போடு மகிந்த கம்பனி எட்டும் முடிவுகள் அங்கு நிச்சயம் நிராகரிக்கப்படும். இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு கூட்டமைப்பை எவ்வாறாயினும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் சேர்த்துவிட வேண்டுமென்று திஸ்ஸ விதாரண அவசரப்படுவதைக் கவனிக்கலாம்.
ஆதலால் திஸ்ஸ விதாரண தலைமையில் நடந்த மெகா தொடராக நீடித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நிராகரித்தது போன்று, நாடாளுமன்ற தெரிவுக் குழுவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்க்க வேண்டும். தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளின் பெயர்ப் பட்டியலை வழங்காமல் 10 சுற்றுப் பேச்சுக்களை முடித்து விட்டது சிங்களம். ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் நிபுணர்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் மறுபடியும் ஓடிவருகிறது.
தாம் சமர்ப்பித்த மூன்று கோரிக்கைகளுக்கான பதிலை எழுத்து மூலம் தருமாறு கூட்டமைப்பு விடுத்த வேண்டுகோளினை சிங்களம் கிடப்பில் போட்டதால், பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டது.
பிளேக்கின் விஜயத்தின் பின்னர் மறுபடியும் ஆரம்பமான பேச்சுவார்த்தையில் திஸ்ஸ விதாரணவின் அனைத்துக் கட்சி தீர்வு யோசனை மற்றும் சந்திரிகா தீர்வுப்பொறி குறித்து உரையாடப்பட்டுள்ளது.
கூட்டமைப்பு அரசிடம் சமர்ப்பித்த 51 விடயங்களில், 18 விடயங்கள் மாகாணசபை வரையறைகளுக்கு அப்பால் சென்றுவிட்டதாக நிமால் சிறீபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த 18 விடயங்கள் 13வது திருத்தச் சட்டத்தின் இணைந்த பட்டியலில் (CONCURRENT LIST) உள்ளதென்பதை கவனிக்க வேண்டும்.
ஆகவே காணி, காவல்துறை உரிமையற்ற மாகாணசபைத் தீர்வு பற்றிச் சிங்களம் பேசப் போகிறது என்பதை இப் பேச்சுவார்த்தைகள் புலப்படுத்துகின்றன. மனித உரிமைப் பேரவையில் நவநீதம்பிள்ளை அம்மையாருடன் மல்லுக்கட்டிய நிமால் சிறீபால டிசில்வா, ஜீ.எல்.பீரிஸ், ராஜீவ விஜசிங்க மற்றும் சஜின்வாஸ் குணவர்தனா போன்றோரே, சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்
போடு 16ம் திகதி பேச்சில் ஈடுபட்டனர்.
ஜெனீவாவிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வெற்றிச் செய்தியோடு வந்திறங்கிய நிமால் சிறீபால டி சில்வா, மனித உரிமைப் பேரவையிலுள்ள 47 நாடுகளில் 46 நாடுகள் தமக்கு ஆதரவாக இருப்பதாக கூறிய கையோடு கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் ஜீ.எல்.பீரிஸ் சொன்ன 39 நாடுகள் கதையும், சில்வா கூறிய 46 நாடுகள் கதையும் முரண்பட்ட செய்திகளாக இருந்தாலும், மகிந்தரை மகிழ்சிப்படுத்த தமது இராஜதந்திர ஆளுமையைக் காட்ட கூறப்பட்ட புனைவுகளாகக் கருதவேண்டும். ஆகவே போர்க்குற்ற விசாரணைக்கு எதிராக உலக நாடுகளை திருப்பி விட்டோமென சுயதிருப்த்தி கொள்பவர்கள், அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளில் நேர்மையாக ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்ப்பது மடமைத்தனம்.
சிங்களத்தின் இரட்டை வேடங்களை மனித உரிமைப் பேரவையிலுள்ள பெரும்பான்மையான நாடுகள் புரிந்து கொண்டார்களோ இல்லையோ, சர்வதேச மன்னிப்புச்சபை தெளிவாக இனங்கண்டுள்ளது. சுயாதீன அனைத்துலக விசாரணை ஒன்றினைத் தவிர்ப்பதற்கே, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை சிங்களம் உருவாக்கியதென மன்னிப்புச்சபை அம்பலப்படுத்தியுள்ளது.
ஆதலால் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அளவில் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் சிங்களம், அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் மக்களை ஏமாற்ற முயல்கிறது என்கிற செய்தியும் சொல்லப்பட வேண்டும். ஆகவே சிங்களத்துடனான பேச்சுவார்த்தைகளில் காலவரையன்றினை கூட்டமைப்பு நிர்ணயிக்க வேண்டும்.
மார்ச் 2012ற்கு முன்பாக அந்தக் கால எல்லை இருந்தால் இன்னமும் பொருத்தமாகவிருக்கும். ஏனெனில் தீர்வு வருமென்று சர்வதேசம் நம்பலாம். ஆனால் வராதென்பதை ஒடுக்கப்படும் தமிழ்மக்கள் புரிந்து கொள்வார்கள். மாவீரர்களின் தியாகத்தால் சர்வதேச மயப்பட்ட எமது போராட்டம், புதிய தளங்களில் பிரவேசிக்கிறது.
போர்க்குற்ற விசாரணைக்கு மட்டுமல்ல, நியாயமான அரசியல் தீர்வொன்றிற்கும் சிங்களம் இணங்காதென்பதை இணைத்துச் சொல்லவேண்டிய தருணமிது. அதே வேளை பலஸ்தீன விவகாரம் என்கிற பேரலைக்குள் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினை அடிபட்டுச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நன்றி: ஈழமுரசு (20.09.2011)

No comments:

Post a Comment