Translate

Sunday, 2 October 2011

தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரான்ஸ் தமிழ் மக்களுடனான சந்திப்பு.

பிரான்ஸ் தமிழர் நடுவத்தின் ஏற்பாட்டில், அதன் பணியகத்தில் (01102011) இன்று பிற்பகல் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், விடுதலைச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஆக்கபூர்வமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் சிறீலங்கா அரசுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தைகள் குறித்து இயல்பாக எழுகின்ற சந்தேகங்கள், கேள்விகள் என்பனவற்றிற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள், தெளிவாக விளக்கமளித்தார்.



தாயகத்தில், போரின் பின்னரான காலப்பகுதியில் தோன்றியிருக்கின்ற மிகமோசமான, கவலைதருகின்ற நிலைமைகளை உணர்ச்சிததும்ப விளக்கிய திரு. செல்வம் அடைக்கலநாதன் அவர்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகம், இந்த அவல நிலையைப் போக்க, முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ் மக்களின் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய புல வெற்றிகளின் ஆதாரமாய் இருந்த புலம் பெயர் தமிழ்ச்சமூகத்தால், தற்போது தோன்றியிருக்கின்ற நெருக்கடி நிலைகளை போக்க நிட்சயமாக முடியும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில், தாயகத்தில், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்றவகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்நின்று பொதுக்கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, சர்வதேச அனுசரணையுடன், பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவிகள் சென்றடையும் வண்ணம் ஏற்பாடுகள் மேற்கொள்ளச் செய்வது குறித்த விடயம் ஆராயப்பட்டது.

தமிழ்மக்களின் இலக்கு, இலட்சியம் என்ற விடயத்தில், புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச்சமூகமும், தாயக மக்களும் ஒன்றிணைந்து செயற்படும்போது, நாம் எதிர்பார்த்த இலக்கை எளிதில் அடைந்துவிடலாம் என உறுதியுடன் தெரிவித்த திரு. செல்வம் அடைக்கலநாதன் அவர்கள், புலத்தில், தற்போது தோன்றியுள்ள, முரண்பாடுகள், குழப்பங்கள், முற்றாக நீக்கப்பட்டு, ஒற்றுமையான சூழல் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

சர்வதேச சூழல் தமிழர் தரப்பிற்கு சாதகமாக இருப்பதை எடுத்துரைத்த அவர், தமிழர் தரப்பு, பெறுமதியான விளைவை இதன்மூலம் ஈட்டிக்கொள்ள பாடுபடவேண்டும் எனவும், அதற்கு முதலில் ஒற்றுமை அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களையும், அவதூறு புனைபவர்களையும் கவனத்தில் கொள்ளாமல், தமிழ் மக்களின் நல்ன்கள் குறித்து, முழுக்கவனமும் செலுத்திச் செயற்படுமாறு, தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களுக்கு அவர் இத்தருணத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

நன்றி.

தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்,

No comments:

Post a Comment