Translate

Tuesday, 18 October 2011

நீங்கள் புகைப்பிடிப்பவரா? நன்றே செய்க அதனை இன்றே செய்க!


நீங்கள் புகைப்பிடிப்பவரா? நன்றே செய்க அதனை இன்றே செய்க! 



1. போதையை ஏற்படுத்துதல்:
புகைத்தல் போதையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆரம்ப பழக்கமுடையோருக்குச் சிறிது கூடுதலாகவே போதை ஏற்படுகிறது. ஏனைய போதைவஸ்துக்களைப் பாவிப்பதன் மூலம் ஏற்படுகின்ற அளவுக்குப் போதை ஏற்படாத போதும், மிகக் குறைந்த அளவிலாவது புகைப்பவர்கள் போதை கொள்கிறார்கள். 
2. சோர்வை ஏற்படுத்துதல்:
புகைப்பதனால் போதை ஏற்படுவதில்லை என்று வாதிப்போரும் புகைத்தல் சோர்வை ஏற்படுத்துகிறது என்பதை மறுப்பதில்லை.
இவற்றுடன் புகைப்பதனால் மூன்று வகையான தீமைகள் விளைகின்றன.
i. உடல்நலனுக்கு ஏற்படும் கேடு:
புகைப்பதனால் உடல்நலனுக்கு ஏற்படும் பயங்கரமான பாதிப்புக்களைப் பற்றியும் சுகாதாரக் கேடுகளைப் பற்றியும் நவீன மருத்துவம் மிக விரிவாகப் பேசுகிறது. ஒரு காலத்தில் புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி உறுதியான, முடிவான அறிவியல் ரீதியான ஆய்வுகள், முடிவுகள் இருக்கவில்லை என்பதனால் இது பற்றிய நிலைப்பாடுகளும் வேறுபட்டன. ஆனால் இன்று இதன் கேடுகள் குறித்து எத்தகைய சந்தேகத்தையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு இது பற்றிய ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. வருடாந்தம் புகைத்தல் தொடர்பான நோய்களினால் 2.5 மில்லியன் மக்கள் வயதாவதற்கு முன்னதாகவே இறப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவிக்கிறார். அதாவது ஒவ்வொரு 13 வினாடிகளுக்கும் ஒரு மரணம் இதன் மூலம் சம்பவிக்கிறது. மற்றுமோர் ஆய்வின்படி புகைப்பதனால் தினமும் 300 பேர் கொல்லப்படுகிறார்கள். இன்னுமோர் ஆய்வின்படி தினமும் இரண்டு சிகரெட்டுக்கு மேல் புகை பிடிப்பவர்களில் நான்கில் ஒருவர் வயதாவதற்கு முன்பே இறக்கிறார்.

புகைத்தலால் பலவேறுபட்ட நோய்கள் உருவாகின்றன. புகைப்பிடிப்பதனால் ஏற்படும் நோய்களில் புற்றுநோய் குறிப்பிடத்தக்கதாகும். பலவிதமான புற்றுநோய்கள் இருக்கின்றன. பிற புற்றுநோய்களைக் காட்டிலும் நுரையீரல் புற்றுநோயால் அதிகமான மக்கள் மரணமடைகிறார்கள். 90மூ க்கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய், புகைப்பிடிப்பதனால் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்த நோய் தொற்றிக் கொள்ளும் அபாயம், புகை பிடிக்காதவர்களைக் காட்டிலும் புகைப்பிடிப்பவர்களுக்கு 15 மடங்கு அதிகமாகவுள்ளது. தொண்டை அல்லது வாய்ப்புற்று நோய் அபாயத்தை புகைப்பிடித்தல் தோற்றுவிக்கிறது. மேலும் புகைப்பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்கள் உணவுக்குழல், இரைப்பைப் புற்றுநோயினால் இறக்கும் அபாயம் அதிகம் இருக்கிறது. புகைப்பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்கள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக புற்றுநோய் ஆகியவற்றாலும் தாக்கப்படும் ஆபத்தும் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.

புகைப்பிடித்தல் இதய நோய்களுக்கும் முக்கிய காரணமாக விளங்குகிறது. புகைக்கப்படும் சிகரெட்டின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் தீவிரமடைகிறது.
சிகரெட்டில் நிகோடின் அடங்கலான 4000 கேடு விளைவிக்கும் இரசாயனப் பொருட்கள் இருப்பதாக விஞ்ஞானம் கூறுகிறது.
புற்றுநோய்கள், இருதய நோய்கள் மட்டுமன்றி புகைப்பிடிப்பதால் அபாயகரமான சுவாசக் கோளாறுகளும் ஏற்படுவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. மார்புச்சளி, ஆஸ்துமா, எம்பீஸிமா (Emphysema) உட்பட மற்றும் பல சுவாசக் கோளாறு நோய்களை புகைத்தல் தீவிரப்படுத்துகிறது என்பதற்கு போதிய அறிவியல் ஆதாரங்கள் கிடைக்கின்றன.

புகைப்பிடித்தல் இனப்பெருக்க சுகாதாரத்திற்கும் ஊறுவிளைவிக்கும் என்பதும் மருத்துவம் கூறும் மற்றுமோர் உண்மையாகும்.
சொத்தைப்பல், பல்விழுதல், ஈறு வீக்கம், வாயில் துர்நாற்றம் முதலான பல நோய்களுக்கும் புகைத்தல் காரணமாக அமைகிறது.
மேலும் புகைத்தல் நுகர்திறனைக் குறைக்கின்றது. உபயோகிக்கும் மருந்துகளின் பயன்தரும் திறனைக் குறைக்கிறது. குடற்புண் நோய்களை தீவிரப்படுத்துகிறது.

இதுவரை கண்ட விளக்கங்களிலிருந்து புகைப்பிடித்தல் உடல் நலனை எவ்வாறு கடுமையாகப் பாதிக்கிறது என்பதை விளங்க முடிந்தது. அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:

”உங்களை நீங்களே கொல்ல வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகவும் அன்புடையோனாக இருக்கின்றான்”(அந்நிஸா: 25)

”மேலும் உங்களை நீங்களே அழிவுக்கு உட்படுத்திக் கொள்ளாதீர்கள்” (அல்பகரா:195)

புகைப்பிடிப்பதனால் விளைகின்ற மூன்று வகையான கேடுகளில் உடல்நலத்திற்கு ஏற்படும் கேடுகளைப் பற்றியே இதுவரைக்கும் கலந்துரையாடினோம். இரண்டாம் வகைக் கேடு பொருள் நஷ்டமாகும்.

ii. பொருள் நஷ்டம்:
புகைப்பிடிப்பதனால் பணம் விரயமாகிறது. உடலுக்கோ, ஆன்மாவுக்கோ எத்தகைய பயனுமளிக்காத ஒன்றிற்காக பணம் விரயமாக்கப்படுகிறது.
வீண்விரயம் (மூன்று வகைப்படும்)

’1. விலக்கியவற்றில் செலவு செய்வது. அது ஒரு கொசுவின் இறக்கையளவு அற்பமாக இருப்பினும் சரியே.
’2. அவசியம் தேவையற்ற ஒன்றில் செலவுசெய்தல். இந்தச் செலவினால் குறித்த நபரின் செல்வநிலை அகலும் ஆபத்து ஏற்படும்போது அதுவும் வீண்விரயமாகும்.
’3. செல்வத்தை வீணாக வீசியெறிதல், இது குறைந்தளவுடையதாக இருப்பினும் சரியே…

iii. ஆன்மாவுக்கு ஏற்படும் தீங்கு
புகைத்தலுக்கு பழக்கப்பட்டவர்கள் தமது மனோவலிமையை இழந்து, இத்தீய பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். ஏதோ காரணத்தால் புகைப்பிடிக்கின்ற சந்தர்ப்பத்தை இழக்கின்ற வேளையில் இத்தகையோரின் நடவடிக்கைகள் எவ்வளவு தூரம் கேவலமானதாகவும் கீழ்த்தரமானதாகவும் அமைகின்றன என்பதை அவதானிக்க முடியும்.
எனவே, சுகாதார கண்ணோட்டத்தில் நோக்கினாலும், பொருளாதார கண்ணோட்டத்தில் பார்த்தாலும், ஆன்மிகக் கண்ணோட்டத்தில் அணுகினாலும் புகைப்பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு. நன்றே செய்க அதனை இன்றே செய்க!
 

No comments:

Post a Comment