Translate

Wednesday, 9 November 2011

“எங்களின் படத்தை தடைசெய்வதற்கு அவர்கள் யார்?“ - சிறிலங்காவுக்கு எதிராக தமிழ்நாட்டில் போர்க்கொடி

சிறிலங்காவில் உள்ள தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய – சிறிலங்காவில் தமிழ்த் திரைப்படங்களை படமாக்குவதில்லை என்று அறிவித்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் தெளிவான செய்தி ஒன்றை அனுப்பியுள்ளனர்.இயக்குனரும் தயாரிப்பாளருமான சசிக்குமார் தனது ‘போராளி‘ திரைப்படத்தை சிறிலங்காவில் திரையிடப் போவதில்லை என்ற உறுதியான முடிவை அறிவித்துள்ளது, சிறிலங்காவுக்கு எதிரான கடுமையான நிலைமையை தோற்றுவித்துள்ளது. 


தமிழர்கள் பற்றிப் பேசப்படும் வசனங்களை சிறிலங்கா அரசு தமிழ்ப்படங்களில் இருந்து தடைசெய்து வருகிறது. 

சிறிலங்கா தமிழர்கள் பற்றிப் பேசப்படும் வசனங்களை சிறிலங்கா அரசின் தணிக்கைக்குழு ‘கசாப்புக்கடைகாரன்‘ போன்று வெட்டியெறிந்து விடுகிறது. 

தீபாவளி வெளியீடான சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் சிறிலங்கா தமிழர்கள் பற்றிப் பேசப்படும் பல வசனங்கள் வெட்டப்பட்டுள்ளன. 

“ஒன்பது நாடுகள் சேர்ந்து ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்திப் பெற்றது வெற்றியல்ல. துரோகம்.“ என்ற இந்தத் திரைப்படத்தின் வசனமும் சிறிலங்காவில் தடை செய்யப்பட்டுள்ளது. 

ஏழாம்அறிவு திரைப்படத்தின் காட்சிகளை கண்டபடி சிறிலங்கா அரசு வெட்டியுள்ளதைக் கண்டித்துள்ள இயக்குனர் சசிகுமார் தனது ‘போராளி‘ திரைப்படத்தை சிறிலங்காவில் திரையிடப் போவதில்லை என்று கூறியுள்ளார். 

‘பசங்க‘ திரைப்படத்தின் தயாரிப்பாளரான அவர், எங்களின் படத்தை தடைசெய்வதற்கு அவர்கள் யார்? நாங்கள் நடவடிக்கை எடுப்போம். எனது ‘போராளி‘ படத்தை அங்கு திரையிடமாட்டேன். 

சிறிலங்கா மீதான நடவடிக்கைக்கு நானே முன்னிலை வகிக்கிறேன். சிறிலங்காவில் திரையிடுவதற்கான உரிமையை யாருக்கும் விற்கப் போவதில்லை. 

இதனால் எனது வருமானத்தில் ஒரு பகுதி பாதிக்கப்படும். ஆனாலும் வருமானத்துக்காக தன்மானத்தை இழக்க முடியாது. 

இதே நிலைப்பாட்டை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களும் எடுப்பார்கள் என்று நம்புகிறேன்“ என்று கூறியுள்ளார். 

சசிக்குமாரின் முடிவை வரவேற்றுள்ள இயக்குனர் வெற்றிமாறன், “நான் சசிக்குமாருடன் முற்றுமுழுதாக உடன்படுகிறேன். நான் முடிவெடுக்கும் நிலையில் இருந்தால், எனது படங்கள் சிறிலங்காவுக்கு இல்லை என்று உறுதியாகக் கூறுவேன்“ என்று தெரிவித்துள்ளார். 

தயாரிப்பாளர் உதயநிதி ஸ்ராலின் “அயல்நாட்டில் ஏழாம் அறிவு திரைப்படத்தை வெளியிட குறிப்பிடத்தக்க பிரச்சினைகளை எதிர்கொண்டோம். 

படத்தைத் திரையிட அனுமதிப்பதற்கு முன்னர் அவர்கள் பல வசனங்களை நீக்கச் சொன்னார்கள். சில இடங்களில் வசனங்களை மௌனமாக்குமாறு கேட்டனர். 

இந்த உணர்வுபூர்வமான பிரச்சினையில் சிறிலங்காவில் எனது படங்களை திரையிடுவது குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் ஆலோசனை பெறவுள்ளேன்.“ என்று கூறியுள்ளார். 

“ஒரு ஆண்டில் சுமார் 100 தமிழ்ப்படங்கள் சிறிலங்காவில் திரையிடப்படுகின்றன. ஒவ்வாரு படத்தின் மூலமும் சிறிலங்காவில் இருந்து 10 இலட்சம் ரூபா வருமானம் கிடைக்கிறது. 

சிறிலங்காவில் படங்களை திரையிடுவதில்லை என்ற முடிவு எடுக்கப்படுமானால், சுமார் 10 கோடி ரூபா இழப்பு ஏற்படும். இது ஒரு பெரிய தொகை“ என்கிறார் தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத தயாரிப்பாளர் ஒருவர். 

அதேவேளை இது குறித்த தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டத்திலேயே தீர்மானிக்கபடும் என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் கலைப்புலி எஸ்.தாணு. 
வழிமூலம் - டெக்கன் குரோனிக்கல்

No comments:

Post a Comment