பார்க்க, பகிர்க
--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan
சைவ நெறி = முழுமையை நோக்கிய உயிரின் கூர்தலுக்கான வழி.
முழுமை = உமை பங்கனான சிவன்
உயிர் = முழுமை அற்றது.
முழுமையை அடையத் தடையாக, தன்முனைப்பு, வினை, மாயை ஆகிய முக்கழிவுகள்.
இக் கருத்துரை, விளக்கவுரை, விரித்துரை யாவும் சைவ சித்தாந்தம்.
இலங்கைப் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் சைவசித்தாந்தம் ஒரு பாடம். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கலைமுதுவல் பட்டதாரி வகுப்புகளை இந்து நாகரிகத் துறையினர் நடத்தி வருகின்றனர்.
எனினும் சைவசித்தாந்தத்துள் ஆய்வு செய்து எவரும் கலாநிதிப் பட்டம் இதுவரை பெறவில்லை.
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில் சைவசித்தாந்த ஆய்வுக்கு முனைவர் (=கலாநிதி) பட்டம் வழங்குவது வழமை. சென்னைப் பல்கலைக் கழகத்தில் சைவசித்தாந்தத் துறை உண்டு. அங்கே முனைவர் பட்டத்துக்கு சைவசித்தாந்தத்துள் புகுந்து ஆய்ந்து பட்டம் பெறும் மாணவர் உளர்.
4.11.2011 காலை. சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபம். மேதகு தமிழக ஆளுநர் ரோசையா சென்னைப் பல்கலைக் கழக வேந்தராகத் தலைமை தாங்குகிறார். துணைவேந்தராக முனைவர் திருவாசகம் அங்கு இருக்கிறார். இந்தியப் பல்கலைக் கழகங்களுக்குப் பொதுவான மானியக் குழுவின் தலைவர் முனைவர் வேதப் பிரகாசர் முதன்மை விருந்தினராக வந்திருக்கிறார். தமிழக அரசின் மாண்புமிகு உயர்கல்வி அமைச்சர் பழநியப்பன் வந்திருக்கிறார். பதிவாளர், துறைத் தலைவர்கள் எனப் பேராசிரியர்கள் வரிசையாக மேடையை அலங்கரிக்கிறார்கள்.
4.11.11 அன்று பட்டமளிப்பு விழா. விருந்தினர்களுள் ஒருவராக நானும் அங்கு இருந்தேன்.
பல்வேறு பட்ட வகுப்புகளில் முதன்மை வெற்றிகள், பதக்கங்கள், பரிசில்கள் பெற்றவர் மஞ்சள் அங்கிகளுடன் சிவப்புக் கரைச் சால்பட்டிகளுடன் வரிசையாக இருக்கின்றனர்.
முனைவர் பட்ட மாணவர்கள் வெள்ளை அங்கிகளுடன் சிவப்புக் கரைச் சால்பட்டிகளுடன் வரிசையாக இருக்கின்றனர்.
அறிஞர் ஊர்வலம், தமிழ்த்தாய் வாழ்த்து, துணைவேந்தர் அறிக்கை, அமைச்சர் உரை, முனைவர் வேதப்பிரகாசரின் பட்டமளிப்புவிழாப் பேருரை என நிகழ்ச்சி தொடர்கிறது.
பதக்கங்கள் பரிசுகள் பெற்றவர்கள் வரிசை முதலில். ஒவ்வொருவராக வந்து வேந்தரிடம் பட்டத்தையும் பரிசையும் பெற்றுச் செல்கின்றனர்.
அடுத்து முனைவர் பட்டம் பெற்றோர் வருகின்றனர். ஒவ்வொருவராகப் பெயரிட்டு அழைக்க 428 பேருக்கு வரிசையாகச் சான்றிதழ்கழை வழங்குகிறார் வேந்தரான மேதகு ஆளுநர் ரோசையா.
செல்வி நந்தினி சண்முகலிஙகம் என்ற பெயரை அழைத்ததும் தெரிந்தவராயிற்றே, அவர்தானோ எனக் கூர்ந்து கவனிக்கிறேன். அவர்தான், அவரேதான். தலைப்பாகை மறைத்தாலும் அங்கிக்குள் புகுந்தாலும் நந்தினி நந்தினியல்லவா!
யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபைத் தலைவர் திரு. சண்முகலிங்கம் அவர்களின் மகள். சிறு வயது முதலாக எனக்குத் தெரிந்தவர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் சைவசித்தாந்தத் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி என்பதை அறிந்திருந்தேன். ஆய்வேட்டைக் கொடுத்துப் பட்டமும் பெற்றுவிட்டார் என்பதை நேரில் கண்டதும் கண்கள் பனித்தன.
சைவப் பராம்பரியத்தில் திளைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர், இலங்கையில் சைவசித்தாந்தத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற முதலாவது புலமையாளர் என்ற செய்தியால் பூரித்தேன்.
பட்டமளிப்பு விழா முடிந்து வெளியே வந்ததும் முதல் தொலைப்பேசி அழைப்பு யாழ்ப்பாணத்துக்கு. என் இனிய நண்பர் திரு. சண்முகலிங்கத்துக்கு. அறிவறிந்த மக்களைப் பெற்றதால், சான்றோர் வரிசையில் தன் மகளும் உலாவினள் என்பதால் ஈன்ற பொழுதில் பெரிதுவக்குமாறு செய்தி கூறினேன்.
முழுமையை நோக்கிய உயிரின் கூர்தலுக்கு வழிகாட்டும் புலமையாளருள் ஒருவராக, இலங்கையில் சைவசித்தாந்தத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற முதலாவது மாணவியான அவரை உள்ளம் உவந்து மனம் நிறைந்து, வியந்து பாராட்டி வாழ்த்தினேன்.
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan
No comments:
Post a Comment