அரசியல் தலையீடுகள் மற்றும் இராணுவ மயமாக்கல் என்பவற்றால் நாட்டில் காணிப் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகவும் இதனால் காணிப் பிரச்சினை மிகவும் முக்கியமான பிரச்சினையாக உருவாகியுள்ளது எனவும் மாற்றுக் கொள்கைகளுக்காக கேந்திர நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கு மாகாணத்தில் காணி உரிமை தொடர்பாக பல சர்ச்சைகள் உருவாகியுள்ளது. ஆவணங்கள் காணாமல் போனமை, பாரியளவிலான இடப்பெயர்வு, வேறு தரப்பினர் காணிகளை பயன்படுத்துகின்றமை, காணியற்ற மக்கள், இராணுவத்தினர் காணிகளை பயன்படுத்துகின்றமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது எனவே காணி உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ள அந் நிலையம்,
யுத்தம் இடம்பெற்ற வலயங்களில் காணிப்பயன்பாடு மற்றும் காணி உரிமை தொடர்பில் தெளிவான கொள்கைகள் வகுக்கப்பட்டு அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வடக்கிலுள்ள காணிப் பிணக்குகளை தீர்க்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் அரசியல் தலையீடுகள் மற்றும் இராணுவ மயமாக்கல் உள்ளிட்ட இன்ன பிற காரணிகளினால் காணிப் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளது.
வெளிப்படைத் தன்மையுடனும், பொதுமக்களின் பங்களிப்புடனும் வகுக்கப்படும் கொள்கைகள் பிணக்குகளுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வினை வழங்கும் என அந் நிலையம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment