Translate

Sunday, 11 December 2011

உறவுகளை இழந்தவர்கள் உரிமைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க எவருக்கும் உரிமை கிடையாது : டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன


சர்வதேச மனித உரிமைகள் தினமான சனிக்கிழமை யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற ஜனநாயக அடக்குமுறை சம்பவமானது இலங்கை அரசாங்கத்தின் மேலுமொரு கறுப்பு தினத்தை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டியிருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

குடாநாட்டில் சிவிலியன்கள் மீது பொலிசாரையும் இராணுவத்தினரையும் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாத அடக்குமுறையை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெவித்துள்ள அக்கட்சி இது குறித்து சர்வதேச மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினம் நேற்று முன்தினமான சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது யுத்த காலத்தில் காணாமல் போனவர்களை மீட்டுத்தருமாறும், சிறைப்படுத்தப்பட்டவர்களை விடுவிக்குமாறும் கோரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் யாழ். குடாநாட்டில் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இடையூறு விளைவிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும் அக் கட்சியின் மனித உரிமைகள் தொடர்பான இணைப்பு செயலாளருமான டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
சர்வதேச மனித உரிமைகள் தினமானது கடந்த சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இதனை அனுஷ்டிப்பதற்கு இலங்கையும் உரித்துடைய நாடாகும். ஏனெனில் சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தில் இலங்கையும் கைச்சாத்திட்டிருக்கின்றது.
இவ்வாறான நிலையில் இலங்கையில் ஒரு சாராருக்கு இழைக்கப்பட்ட அநீதியின் காரணமாகவே கடந்த சனிக்கிழமை யாழ். குடாநாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது. உறவுகளை இழந்தவர்கள் இவ்வாறு உரிமைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க எவருக்கும் உரிமை கிடையாது.
இருந்த போதிலும் இங்கு பொலிசாரையும் இராணுவத்தினரையும் பயன்படுத்தி பாய அடக்குமுறை இடம்பெற்றுள்ளது. சமாதானம், இன ஐக்கியம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு பற்றியெல்லாம் கூச்சலிடுகின்ற அரசாங்கம் சாதாரண மக்களின் அதுவும் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமையை, கருத்துச் சுதந்திரத்தை தமது அரச பயங்கரவாதத்தால் அடக்க முற்படுவதானது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சி இந்த செயலை மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.
அரசாங்கத்தின் இத்தகைய அடக்குமுறை நீடித்துக் கொண்டிருக்கும் பட்சத்தில் எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை தேசிய ஒருமைப்பாட்டுக்குள் இணைத்துக் கொள்வது என்பதை அரசு சிந்திக்க வேண்டும். அவர்களிடத்தில் எவ்வாறு சகவாழ்வைக் கட்டியெழுப்ப முடியும் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.
உலகமே ஏற்று அனுஷ்டிக்கப்பட்ட சர்வ தேச மனித உரிமை தினத்தில் இவ்வாறு மோசமான செயற்பாடு ஒன்று அரங்கேறியிருப்பதானது இன்றைய அரசாங்கத்தின் மேலுமொரு கறுப்பு தினத்தை சர்வதேசத்துக்கு படம் பிடித்துக் காட்டியிருக்கின்றது.
இலங்கையின் ஒவ்வொரு அசைவினையும் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்ற சர்வதேசம் யாழ்.குடாநாட்டு சம்பவத்தையும் உள்ளவாறே படம் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.
மேலும் பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் நாட்டு மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளையும் சர்வதேசத்திடமிருந்து கிடைக்கப் பெறுகின்ற அவப் பெயரையும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
அந்த வகையில் கடந்த சனிக்கிழமை குடாநாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட மக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை தொடர்பிலும் சர்வதேச மனித உரிமைகள் பேரவை மற்றும் அனைத்துப் பாராளுமன்ற சங்கம் ஆகியவற்றுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் உலக நாடுகளில் உள்ள அனைத்து மனித உரிமைகள் அமைப்பின் கவனத்துக்கும் இந்த விடயம் கொண்டுசெல்லப்படும் என்றார்.

No comments:

Post a Comment