லண்டனிலிருந்து ஜெனீவா வரைக்கும் நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணம்.(சனிக்கிழமை 28-01-2012 இலிருந்து திங்கட்கிழமை 27-02-2012 வரைக்கும்)
எங்கள் மாவீரர்களினதும் எங்கள் மக்களினதும் நீண்டகால மகத்தான அர்ப்பணிப்புக்களினாலும் அளப்பரிய தியாகங்களினாலும் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ள தமிழீழ சுதந்திரப் போராட்டமானது இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தினை எட்டியுள்ளது. இவர்கள் அனைவரும் எந்த உன்னதமான லட்சியத்தினை அடைவதற்காக தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கினார்களோ அந்த "சுதந்திரத் தமிழீழம்" எனும் இவர்களது லட்சியக் கனவினை நனவாக்கும் பொறுப்பானது இன்று புலம்பெயர் ஈழத்தமிழர்களின் கரங்களிலே இவர்களினால் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த வரலாற்றுக் கடமையிலிருந்து புலம்பெயர் ஈழத்தமிழர்கள் என்றென்றைக்குமே தப்பிவிட முடியாது. "சுதந்திரத் தமிழீழம்" எனும் அந்த உயர்ந்த லட்சியத்தினை அடிப்படையாகக் கொண்டே "நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்" எனும் ஒரு மாபெரும் “மக்கள் சுதந்திர இயக்கம்” ஒன்று புலம்பெயர் தமிழர்களினால் இன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களினால் புலம்பெயர் தேசங்களிலிருந்து ஜனநாயக தேர்தல்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் தாங்கள்தான் இந்தப் புதிய யுகத்தின் புதிய "சுதந்திரப் போராளிகள்" என்பதனை மெய்யுணர்ந்தும். தாங்கள் இன்று புலம்பெயர்ந்து வாழுகின்ற இந்தப் புதிய தேசங்கள்தான் தங்களது புதிய "போராட்டக் களங்கள்" என்பதனை அறிவுணர்ந்தும். "சுதந்திரத் தமிழீழம்" எனும் உலகத் தமிழர்களினது நீண்டகால லட்சியத்தினை அகிம்சை தழுவிய அறவழிப் போராட்டங்கள் ஊடாக சர்வதேச சமூகத்தினரின் அனுசரணையுடனும், அங்கீகாரத்துடனும் மட்டும்தான் தங்களால் வென்றெடுக்க முடியும் என்பதனை கற்றுணர்ந்தும் ஏற்றுக்கொண்டு, இன்று தாங்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற தேசங்களிலே "தமிழீழ சுதந்திரப் போராட்டத்தினை" ஜனநாயகப் பாதையில் நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள்.
எதிர்வரும் 27 ஆம் நாள் மாசி மாதம் அடுத்த ஆண்டு ஆரம்பிக்க இருக்கின்ற ஐ.நா.வின் மனித உரிமைகள் சபையின் (19 ) பத்தொன்பதாவது கூட்டத்தொடரின் போது ஐ.நா. நிபுணர்கள் குழுவின் சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கையானது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான அதிகூடிய சாத்தியம் தற்போது தோன்றியுள்ளது. சிறீ லங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையானது அதன் ஒருபக்க அரசு சார்ந்த ஆய்வின் முடிவுகளுக்காக சர்வதேச மனித உரிமைகளுக்கான அமைப்புக்கள் பலவற்றின் பலத்த கண்டனத்திற்கு தொடர்ந்தும் ஆளாகி வருகின்றது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வேச மன்னிப்புச் சபை, பிரித்தானிய சனல் 4 ஊடகம், ஆகியன தமது பலத்த ஏமாற்றத்தை பகிரங்கமாகவே தெரிவித்துள்ளதோடு தமிழீழத்தில் போரின்போது இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களை பக்க சார்பு அன்றி நடுநிலைமையுடன் ஆராய்வதற்காக ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணையின் அவசியத்தையும் மீண்டும் வலியுறுத்த ஆரம்பித்து விட்டன. எனவே ஐ.நா.வின் அறிக்கையானது ஐ.நா. மனித உரிமைகள் சபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் மீது சிறீலங்காவின் பேரினவாத அரச பயங்கரவாதப் படைகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள், போன்ற பாரிய சர்வதேச குற்றங்களை விசாரிப்பதற்காக ஒரு “சுயாதீனமான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்” ஒன்றினை நிறுவுவது சம்பந்தமாக கூட்டத்தொடரின் போது ஆராயப்படுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றன.
ஆகவே இன்னமும் இரண்டே மாதங்களில் நடைபெறவிருக்கின்ற ஐ.நா.வின் மனித உரிமைகள் சபையின் பத்தொன்பதாவது கூட்டத்தொடரானது ஈழத்தமிழர்களுக்கு அவர்களின் நீண்டகால தமிழீழ சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக அமையவிருக்கின்றது. இந்த வகையில் மனித உரிமைகள் சபையின் பத்தொன்பதாவது கூட்டத்தொடரானது எதிர்காலத்தில் தமிழீழத்தில் ஈழத்தமிழினத்தின் “இருப்பினையே” தீர்மானிக்கவல்ல ஒரு வரலாற்று நிகழ்வாக அமையவிருக்கின்றது என்பது மட்டும் உறுதி. அடுத்த வருடம் நடைபெறவிருக்கின்ற ஐ.நா.வின் மனித உரிமைகள் சபையின் பத்தொன்பதாம் கூட்டத்தொடரும், அதனையடுத்து வரும் அண்மைய காலங்களில் நடக்கவிருக்கின்ற சர்வதேச அரசியல் நிகழ்வுகளும், தமிழீழத்தில் ஈழத்தமிழினத்தின் தலைவிதியையே நிர்ணயிக்கவிருக்கின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களாக அமையப்போகின்றன என்றால் அது மிகையாகாது.
மனித உரிமைகள் சபையின் பத்தொன்பதாவது கூட்டத்தொடரின் பலாபலன்களை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் முயற்சிகளிலும் ஏன் அதற்கும் ஒரு படி மேலே சென்று சிறீ லங்காவின் மீதான ஐ.நா.வின் அறிக்கையினை மனித உரிமைகள் சபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் தடுப்பதன் ஊடாக சர்வதேச சமூகத்திடமிருந்து ஈழத்தமிழினத்திற்கு நீதி கிடைப்பதனைத் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளிலும் கூட சிறீ லங்காவின் பேரினவாத அரசும் இந்த அரசிற்குத் துணை போகின்ற பல அந்நிய சக்திகளும் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் பலதரப்பட்ட ராஜதந்திர நடவடிக்கைகளில் ஏற்கனவே ஈடுபடத் தொடங்கிவிட்டன.
இவர்கள் அனைவரதும் முயற்சிகள் அனைத்தையும் முறியடிப்பது மட்டுமல்லாது தமிழீழத்தில் ஈழத்தமிழினத்தின் மீது சிறீ லங்காவின் பேரினவாத அரச பயங்கரவாதப்படைகள் மேற்கொண்டிருப்பது ஒரு முற்றான இனப்படுகொலை-யும் இனஅழிப்புமே என்பதனை தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி ஈழத்தமிழினத்திற்கு சர்வதேச சமூகத்திடமிருந்து நீதியைப் போராடிப் பெறுவதன் ஊடாக தமிழீழத்தில் ஈழத்தமிழினத்தின் இருப்பையும் வாழ்வாதாரங்களையும் மேண்பாட்டினையும் உறுதிப்படுத்துவதானது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலையாய கடமை ஆகின்றது.
இதற்கான முயற்சிகளில் புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களும் மற்றைய புலம்பெயர் தமிழர் தேசிய அமைப்புக்களைச் சார்ந்த உறுப்பினர்களும் பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களிலும் முயற்சிகளும் ராஜதந்திர நடவடிக்கைகளிலும் முழு மூச்சோடு ஏற்கனவே செயல்படத் தொடங்கிவிட்டார்கள். இவற்றின் ஒரு அங்கமாகவும் புலம்பெயர் தமிழ் மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒரு புதிய வேகத்துடன் புதிய எழுச்சியுடன் பல்லாண்டுகளாக அநீதிகள் இழைக்கப்பட்டு வரும் எங்கள் மக்களுக்கு சர்வதேச சமூகத்தினரிடம் நீதி கேட்டும் எங்கள் மக்களின் அடிப்படை மனித உரிமைகளுக்காக உலக அரங்கினில் ஓங்கி உரத்துக் குரல் கொடுக்கும் முகமாகவும் நாங்கள் "நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணம்" ஒன்றினை எதிர்வரும் மாசி மாதமளவில் லண்டனிலிருந்து ஜெனீவா வரைக்கும் மேற்கொள்ளவிருக்கின்றோம்.
இந்த நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணத்தில் எங்களுடன் இணைந்து பங்குபற்ற விரும்பும் அனைவரையும் நாங்கள் அன்புடன் வரவேற்கின்றோம். அத்துடன் இந்த நடைப்பயணத்திற்கு உங்கள் அனைவரிடமிருந்தும் தார்மீக ஆதரவினையும் உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து உதவுமாறும் நாங்கள் உங்கள் அனைவரையும் அன்புடனும்இ உரிமையுடனும் பணிவுடன் வேண்டி நிற்கின்றோம்.
ஐ.நா.வின் மனித உரிமைகள் சபையின் தலைவருக்கும், அதில் அங்கத்துவம் வகிக்கின்ற அனைத்து நாடுகளின் பிரதிநிகளுக்கும், மற்றும் அக்கூட்டத் தொடரில் பங்கேற்கவிருக்கின்ற மனித உரிமைகள் அமைப்புக்கள் உட்பட ஏனைய அரசு சார்பற்ற அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அனைவரிடமும், நாங்கள் எங்களது நடைப்பயணத்தின் முடிவின் போது கையளிக்கவிருக்கின்ற எங்களது மூன்று கோரிக்கைகள் ஆவன:-
1) ஈழத்தமிழர்களின் மீதான சிறீ லங்காவின் பேரினவாத அரச பயங்கரவாதிகளின் இனப்படுகொலையையும் போர்க்குற்றங்களையும் மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிப்பதற்காக ஒரு சுயாதீனமானஇ நீதியான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட்டு மனிதத்திற்கு எதிராக மாபெரும் குற்றங்களைப் புரிந்தவர்களையும் இவற்றுக்குக் காரணமானவர்களையும் சர்வதேச சமூகம் தண்டிக்க வேண்டும்.
2) சிறிலங்காவின் பேரினவாத அரசினால் தமிழீழத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற அமைப்பியல் இனப்படுகொலை திட்டமிடப்பட்ட சிங்களக் குடியயேற்றங்கள் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் காணாமல் போதல்கள் கொலைகள் கற்பழிப்புக்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் சித்திரவதைகள் போன்ற அனைத்தையும் உடனடியாக நிறுத்துவதற்காகவும் மேலும் தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பையும் இருப்பையும் உறுதிப்படுத்துவதற்-காகவும் ஐ.நா.சபையானது தாமதியாது தமிழீழத்தில் "மனித உரிமைகள் பாதுகாப்புக் கண்காணிப்பகம்" ஒன்றினை உடனடியாக நிறுவ வேண்டும்.
3) ஈழத்தமிழர்களை ஒரு முற்றான இனஅழிப்பிலிருந்து காப்பாற்றும் முகமாகவும், சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தின் கொடுமைகளை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரும் ஈழத்தமிழர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முகமாகவும், தமிழீழத்தில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிப்பதோடு ஐ.நா.சபையின் மத்தியஸ்தத்துடன் கூடிய சர்வசன வாக்கெடுப்பு ஒன்றும் தமிழீழத்தில் நடாத்தப்படல் வேண்டும்.
நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணத்தின் நிறைவின் போது மாசி மாதம் 27 ஆம் நாளன்று ஜெனீவா நகரிலுள்ள ஐ.நா.வின் மனித உரிமைகள் சபைக்கு முன்னராக மாபெரும் "மக்கள் கவனயீர்ப்புப் பேரணி" ஒன்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் உலகத் தமிழர் பேரவை, சுவிஸ் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் ஒன்றியம், போன்ற ஏனைய தமிழ் தேசிய அமைப்புக்களுடனும் கூட்டாக ஒன்று சேர்ந்து முன்னெடுக்கப்பட இருக்கின்றது. இப்பேரணியில் கலந்து கொண்டு "ஆண்டாண்டு காலமாக அநீதிகள் இழைக்கப்பட்ட ஈழத்தமிழினத்திற்கு நீதி கிடைக்கும் வரையில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் என்றென்றைக்குமே ஓய மாட்டார்கள்" என்பதனை சிறீ லங்காவின் பேரினவாத அரசிற்கும், உலக நாட்டின் தலைவர்களுக்கும், சர்வதேச சமூகத்தினருக்கும் நாங்கள் இடித்துரைப்போமாக!!!
- தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்-
நன்றி.என்றென்றும் அன்புடன்
பவுல், தேவன், குமார், சிவச்சந்திரன், ஜெயசங்கர், யோகி, சுஜய், நிமலன், மணிவண்ணன்.
பவுல், தேவன், குமார், சிவச்சந்திரன், ஜெயசங்கர், யோகி, சுஜய், நிமலன், மணிவண்ணன்.
No comments:
Post a Comment