சிறீங்காவிற்கு எதிராக மனித உரிமைக் கமிஷன் கொண்டு வந்திருக்கும் குற்றச்சாட்டுக்களில் மறைமுகமான வில்லனாக இருப்பவர் மலையாள நம்பியாரே..
எம்.ஜி.ஆரை நம்பிய ஈழத் தமிழர் அழிக்கப்பட்டு, இப்போது கிளைமாக்சில் நிற்கிறார்கள்.. எம்.ஜி.ஆர் காட்டிய தர்மமா.. இல்லை நம்பியார் காட்டிய அதர்மமா..? ஜெனீவாவில் ஜெயிக்கப் போவது.. யாரு..?
இப்படியொரு சுவாரஸ்யமான ஒப்பீட்டுடன் இன்றைய சிறீலங்கா செய்திகளுக்குள் நுழைகிறோம்…
சிறீலங்காவில் இடம் பெற்ற போர்க் குற்றங்களின் மல வாடை இன்றய மேலைத் தேய ஊடகங்களின் காலைச் செய்திகளில் நெடில் வீச ஆரம்பித்தது. சர்வதேச அரங்கில் சிறீலங்கா என்ற நாடு மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளதாக சற்று முன் அவை சுட்டிக் காட்டியுள்ளன. மனித உரிமை அமைப்பு சிறீலங்காவுக்கு எதிராக முன்வைத்துள்ள 80 பக்க குற்றச்சாட்டுக்களை அடியொற்றி டேனிஸ் ஊடகங்கள் கூட செய்தி வெளியிட்டுள்ளன.
2009 மே மாதம் வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் பொது மக்கள் வாழிடங்களை குறி வைத்து சிங்களப் படைகள் தாக்குதல் நடாத்தின.. இது நிரூபிக்கப்பட்ட உண்மை.
வைத்தியசாலைகள் மீது திட்டமிட்ட ஷெல் வீச்சு நடாத்தப்பட்டது இது மறுக்க முடியாத உண்மை..
சரணடைந்த விடுதலைப் புலி பெண் போராளிகளில் பலர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள் இது மன்னிக்க முடியாத சர்வதேச குற்றம்.. உதாரணம் இசைப்பிரியா கூட்டுப் பாலியல் கொலை.. சிங்கள அரசே இதற்கு அப்பட்டமான முழுப் பொறுப்பு..
அந்த நிகழ்வில் 40.000 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள், ஆனால் நன்கு ஆதாரங்கள் கிடைத்த மரணங்கள் 11.172 ஆகும். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சதாம் உசேன் கூட வெறும் 80 பேர் கொலைக்காகவே தூக்கிலிடப்பட்டார். உலகில் போர்க் குற்றம் சுமத்தப்பட்ட மிகப் பெரிய எண்ணிக்கை இதுவாக உள்ளது. உலகத் தலைவர்களை திகைக்க வைத்துள்ளது.
சிறீலங்காவின் போர்க்குற்ற விஷ நெடில் ரூனிசியா தலைநகர் ருனிஸ்சில் இருந்த உலக நாடுகளின் 60 வெளிநாட்டு அமைச்சர்களின் மூக்குகளையும் நேற்று விரல்விட்டு குடைந்தது.
நேற்று முன்தினம் சிரியாவில் கூடிய உலகின் 60 நாடுகளின் முக்கிய தலைவர்கள் சர்வாதிகாரி ஆஸாட்டின் அடாவடித் தனங்களை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான பேச்சுக்களை உறுதிபட நடாத்தினார்கள். அவர்கள் காதுகளுக்குள் சிறீலங்காவும் முன்மாதிரி படமாக இருக்கிறது என்பது தெரிந்ததே.
அத்தருணம் கருத்துரைத்த சவுதி அரேபியா நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர், தன்னுடைய சொந்த நாட்டு மக்களை கொன்று குவிக்கும் ஒரு துவேஷ அரசுக்கு எதிராக போராடும் போராளிகளுக்கு ஆயுதம் கொடுப்பது தவறே அல்ல என்று தொவித்தார்.
இன்று அதிகாலை வெளியான சவுதி தொலைக்காட்சி செய்தியில் சவுதி இளவரசர் செயட் அல் பைசால் சிரிய சர்வாதிகாரியை வீழ்த்துவதற்கான ஆயுதங்களை சிரிய போராளிகளுக்கு வழங்கத் தயார் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சவுதி மன்னர் அமெரிக்காவின் கயிற்றில் ஆடும் ஒருவர் என்றாலும், அவருடைய குரல் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சர்வதேச வரவேற்பு பெற்றுள்ளது.
சிறீலங்காவையும், சிரியாவையும் பார்த்து உலகம் கண்ணீர் வடிக்கிறது..
இரண்டாம் உலகப் போரின் போது ஆசிய விவகாரத்தில் மாபெரும் தவறை இழைத்துவிட்டதையும் உணர்கிறது. பல நாடுகளில் தப்பான இனவாத, துவேஷ, ஜாதிவெறி ஆட்சி, ஜனநாயகம் என்ற போர்வையில் நடைபெறுகிறது. இதை வேரோடு பிடுங்கி எறிய உலக சமுதாயம் முடிவெடுத்துள்ளது.
ஐ.நா பாதுகாப்பு சபையில் சீனா, ரஸ்யா ஆகிய மோசமான நாடுகள் இரண்டு வீட்டோவை பாவித்து சிரிய சர்வாதிகாரியை பாதுகாக்க முயற்சித்தன. இப்போது ஐ.நாவால் முடியாத விடயத்தை மறு வழியில் முடித்து வைக்க உலகம் அணி திரண்டுவிட்டது. மொத்தம் 60 நாடுகள் அணி ரூனிசியாவில் அணி திரண்டுவிட்டன.
இந்த எழுச்சியோடு சிறீலங்காவையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். சிரியா போலவே அங்கும் குடும்ப ஆட்சி நடக்கிறது. சிரியா போலவே அங்கும் சொந்த நாட்டு மக்களை இனத்துவேஷத்துடன் சிங்கள இனவாத அரசு கொன்றுள்ளது. இன்று சிரியா கோம்ஸ் நகரில் நடாத்தும் அதே தாக்குதல்களை வன்னியில் சிங்கள அரசு 2009 ம் ஆண்டு நடாத்தியது.
சிறீலங்காவிற்கு உலக சமுதாயம் மன்னிப்பளித்தால் சிரிய சர்வாதிகாரி ஆஸாட்டுக்கும் மன்னிப்பளிக்க வேண்டும். ஆகவேதான் இந்த இராஜதந்திர முனைப்பாக்கத்தில் இந்தியா வசமாக சிக்குப்பட்டு, சிங்களத்தை கைவிட வேண்டிய நெருக்கடிக்குள் மாட்டுப்பட்டுள்ளது.
இன்று சிறீலங்காவை விட மிகப்பெரிய சர்வதேச ஆபத்தில் இருப்பது இந்தியாவே. ஏற்கெனவே ஈரானின் எண்ணெயை இந்தியா இறக்குவதை நிறுத்தவில்லை. லிபியாவில் கடாபி வீழ்ச்சியடைய அவரிடம் இரவோடு இரவாக ஓயிலை ஏற்றுவதில் கண்ணாக இருந்த இந்தியாவை மேலை நாடுகள் மறக்கவில்லை. இப்போது இந்திய இராஜதந்திரம் சிறீலங்காவை கைவிடப் போவதாக செய்திகள் கூறுகின்றன.
ஈழத் தமிழ் மக்கள் குரலாக இந்தியா நின்றிருந்தால் இன்று சீனாவையும், ரஸ்யாவையும் புறந்தள்ளி மேலை நாடுகளுடன் கைகோர்த்து, இன்றைய உலக எழுச்சியின் பங்காளியாக மாறியிருக்கலாம். இனியாவது இந்தியா யூ ரேண் எடுக்க வேண்டும், அது ஈழத் தமிழ் மக்களுக்காக அல்ல, அவர்களுக்கு இனி இந்தியா தேவையில்லை. இந்தியா தன்னுடைய நலனுக்காக இந்த மாற்றத்தை செய்ய வேண்டும்.
இந்தியா சிறீலங்கா வன்னியில் செய்த வேலைக்கு எதிராக உலகம் யூ ரேண் எடுத்துவிட்டது.
அன்று..
ஈழத் தமிழருக்கு ஆதரவாக இருந்து எம்.ஜி.ஆர் பேர் பெற்றார்…
பின்பு..
சிங்களவருக்கு ஆதரவான மலையாள நம்பியாரை நம்பியது இந்திய அரசு..
உருப்படவா முடியும்…?
எம்.ஜி. ஆரை ஆதரித்த ஈழத் தமிழரா.. இல்லை நம்பியாரை ஆதரித்த சிங்கள அரசா.. ஒப்பீடு பொருத்தமாகத்தான் இருக்கிறது.. சிறீலங்கா அரசு நயவஞ்சகம் செய்துள்ளதாக மனித உரிமைக் கமிஷன் குறிப்பிட்டிருப்பது அவர்கள் செய்த வில்லன் வேலைக்கு பொருத்தமான தலைப்பாகவே உள்ளது.
தொடர்கிறது.. கூத்து..
அலைகள் தென்னாசிய, சிரிய விவகாரப் பார்வை.. 25.02.2012
No comments:
Post a Comment