Translate

Saturday, 25 February 2012

காப்பாற்ற முடியாது என்று கையை விரித்தார் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை


சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்காவிடம் கையை விரித்து விட்டார்

.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை ஜெனிவாவில் நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர்.
சிறிலங்காவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தவே அவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் அந்த முயற்சி கைகூடவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பின் போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொறுப்புக் கூறுதல் தொடர்பான எந்தப் பரிந்துரைகளும் செய்யப்படாதது குறித்து சிறிலங்கா தரப்பிடம் நவநீதம்பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை ,சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதற்கு நவநீதம்பிள்ளை, இந்த விடயத்தில் தன்னால் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றும், இதிலிருந்து தான் தொலைவிலேயே இருப்பதாகவும் கூறிவிட்டார்.
அதேவேளை, நவநீதம்பிள்ளையின் இந்தப் பதில் சிறிலங்கா தரப்புக்கு ஏமாற்றத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிசுடன் இந்தச் சந்திப்புக்குச் சென்ற சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, அமெரிக்காவின் இந்த நகர்வு சிறிலங்காவின் நல்லிணக்க நடவடிக்கைகளைத் தடம்புரளச் செய்து விடும் என்று நவநீதம்பிள்ளையைப் பார்த்து சீற்றத்துடன் எச்சரித்துள்ளார்.
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது உள்ளிட்ட அமெரிக்காவினால் செய்யப்பட்ட நீதிக்குப் புறம்பான படுகொலைகள், மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கு நவநீதம்பிள்ளை, பின்லேடன் கொல்லப்பட்டதையும் தான் கண்டித்ததாக கூறியது, சிறிலங்கா தரப்பை மேலும் எரிச்சலடைய வைத்ததாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment