சர்வதேசத்தின் அழுத்தங்களுக்குப் பதிலடி கொடுப்போம் என ஜெனிவா விரைந்த அமைச்சர்கள், அதிகாரிகள் தற்போது தமக்குள்ளே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இரு குழுக்களாகப் பிரிந்து முட்டி மோதிக் கொள்கின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அமைச்சர்களின் தராதரமற்ற இந்தச் செயலானது சர்வதேச மட்டத்தில் நாட்டுக்குப் பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது எனவும் ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் வெளிக்கிளம்புகின்ற இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குப் பிளவுபட்டுள்ள அமைச்சர்கள் குழுவால் பதில் கூற முடியுமா என ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வியெழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே
அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
சர்வதேச ரீதியில் நமது நாட்டுக்கு எதிராக வெளிக்கிளம்பியுள்ள அழுத்தங்களுக்குப் பதிலடி கொடுக்கக்கூடியவர் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாதான். அவரை அரசியல் கைதியாக சிறைவைத்துவிட்டு, சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என அமைச்சர் குழுவினர் உல்லாசப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது பெரும் வேடிக்கையாகவுள்ளது.
நாட்டில் போர் இடம்பெற்ற காலத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்கள் என்ன என்பதை நன்கு அறிந்தவர் சரத் பொன்சேகா மட்டுமே. போர்க் காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை சமர்ப்பித்தது.
ஐ.நா. நிபுணர் குழுவிடம் கலந்துரையாடுவதற்கு சரத் பொன்சேகாவிற்கு வாய்ப்பளிக்குமாறு நாம் அரசிடம் வேண்டுகோள் விடுத்தோம். அதுபோலவே நல்லிணக்க ஆணைக்குழுவினருடனும் கலந்துரையாடுவதற்கு அவருக்கு ஒரு வாய்ப்பளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தோம்.
நாட்டையும் நாட்டு மக்களையும் காக்கும் கடப்பாடுடைய நாம், அரசிடம் விடுத்த வேண்டுகோளை அரசு நிராகரித்துவிட்டு சரத் பொன்சேகாவை சாதாரண கைதியாக அல்லாமல் அரசியல் கைதியாக சிறைவைத்தது. அன்றே நாம் கூறியபடி சரத் பொன்சேகாவிற்கு ஒரு வாய்ப்பளித்திருந்தால் இன்று நாடு இத்தகைய பாரதூரமான விளைவுகளைச் சந்தித்திருக்காது. இப்பிரச்சினைகளுக்கு போர் நிறைவுற்ற காலத்திலேயே நல்லதொரு தீர்வும் கிடைத்திருக்கும்.
சரத் பொன்சேகாவை நாட்டில் சுதந்திரமாக நடமாடவிட்டால் அரசின் கபட நாடகங்கள் நாட்டில் அப்பட்டமாக வெளியாகியிருக்கும். இதனை உள்ளூர அறிந்து வைத்திருந்ததால்தான் அரசு அவரைச் சிறைவைத்தது. அவரை சிறைவைக்காது இருந்திருந்தால் நாட்டில் இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது.
சர்வதேசத்தின் அழுத்தங்களை முறியடிப்போம் என வீறாப்புடன் ஜெனிவா விரைந்த அமைச்சர்கள் குழுவினர் தற்போது தமக்குள்ளே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இரு குழுக்களாகப் பிளவுபட்டு முட்டி மோதிக்கொண்டிருக்கின்றனர். இவர்களது இந்தச் செயற்பாடானது சர்வதேச ரீதியில் நாட்டிற்குப் பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை ஒன்றை முன்வைத்தது. நாட்டில் இறுதிக்கட்ட போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்குற்றம் தொடர்பாக அதில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வெள்ளைவான் கடத்தல்கள், பொதுமக்கள் மீதான தாக்குதல், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல், பொது இடங்களுக்குத் தீ வைத்தல், 17வது அரசியல் சீர்திருத்தத்தை இல்லாது செய்தல், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தாக்குதல், நீதியற்ற தேர்தல்கள் நடத்துதல் மற்றும் அரச அடக்குமுறைகள் என்பன இலங்கையில் இடம்பெறுகின்றன. இவற்றை இலங்கை அரசு உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கருத்தையே நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையும் தெரிவிக்கின்றது. இந்த இரண்டு அறிக்கைகளிலும் என்ன உள்ளது என அரசு நாட்டு மக்களுக்குக் கூறவில்லை. அதைக் கூறவேண்டிய கடப்பாடுடைய நாம் மக்களுக்கு எடுத்துரைத்தோம். இதனால் அரசு எம்மைத் திட்டுகிறது. எதிர்க்கட்சியினர் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் விரோதமாகச் செயற்படுகின்றனர் எனக் கூறுகின்றது. என்றார்.
No comments:
Post a Comment