ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆளுங்கட்சி எதிர்வரும் வாரத்தில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ள எதிர்ப்புச் செயற்பாடுகள், ஆளுங்கட்சியிலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கின்றன எனத் தெரிகிறது.
எரிபொருள் விலை அதிகரிப்பாலும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பாலும் மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்துவரும் சூழ்நிலையில், இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு மக்களை அழைப்பது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது என ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுத் தங்களுக்குள் கருத்துப்பரிமாற்றம் செய்துகொண்டமையை அறியமுடிந்தது.
இது தொடர்பில் நேற்று எம்மிடம் கருத்து வெளியிட்ட மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், "எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் சம்பளம் உட்பட்ட பல பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் பெருந்தோட்ட மக்களை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு எந்த முகத்தை வைத்துக்கொண்டு அழைப்பது" என்று கேள்வியெழுப்பினார்.
எவ்வாறாயினும், அரசுடன் இணைந்து செயற்படுவதால் அரசின் கோரிக்கைக்கேற்ப மக்களை அணிசேர்க்க வேண்டுமெனவும், இதன் விளைவுகள் அடுத்த தேர்தலின்போதுதான் தங்களுக்குத் தெரியவருமென்றும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் கவலையுடன் குறிப்பிட்டார்.
|
No comments:
Post a Comment