மனித உரிமை மீறல்களை விசாரணை செய்யும் அதிகாரம் பெற்ற ஐநா மனித உரிமைக் கவுன்சில் வருடமொன்றுக்கு மூன்று தடவை சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் தனது கூட்டத் தொடரை நடத்துகிறது. ஐநா மனித உரிமை ஆணையம் என்ற முன்னாள் அமைப்பு 2005ம் ஆண்டு உலக உச்சி மாநாட்டில் மனித உரிமைக் கவுன்சிலாக பெயர் மாற்றப்பட்டது.
இப்போது நடக்கும் 19ம் கூட்டத் தொடரில் சிறிலங்கா போர்க் குற்றங்கள் தொடர்பான காரசாரமான விவாதங்கள் நடக்குமென எதிர்பார்க்கப்டுகிறது. மேற்கு நாடுகள் குறிப்பாக அமெரிக்கா சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணையை கொண்டு வரலாம் என்ற தகவல் கசியத் தொடங்கியுள்ளது.
இப்படியான பிரேரணைகள் கொண்டு வரப்படலாம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இது தொடர்பான கசிவுகளை ஒரு சிறிலங்கா மீதான அழுத்தம் பிரியோகிக்கும் உத்தியாகப் பார்க்க முடியும். இந்த நாட்டைத் தம்பக்கம் இழுப்பதற்காக மாத்திரம் அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்று சொல்வதில் தவறில்லை.
பிரேரணைகள் கொண்டு வரப்பட்டாலும் அவை பெருபான்மை வாக்கைப் பெற்றால் தான் பயனுள்ளதாக அமையலாம்.மனித உரிமைக் கவுன்சில் (UN Human Rights Council) ஐநா பொதுச் சபையின் துணை அமைப்பாகச் (Subsidiary Body) செயற்படுகிறது. தன்னுடைய விசாரணை முடிவுகளை மனித உரிமைக் கவுன்சில் நேரடியாக ஜநா பொதுச் சபைக்கு அறிவிக்கிறது.
அதிகார அந்தஸ்தைப் பொறுத்தளவில் மனித உரிமைக் கவுன்சில் ஐநா பாதுகாப்புச் சபையிலும் பார்க்க வலுக் குறைந்ததாகவுள்ளது. இறுதித் தீர்மானம் எடுக்கும் வலு பாதுகாப்புச் சபையிடம் மாத்திரம் உண்டு.
ஐநா பொதுச் சபையின் 191 உறுப்பு நாடுகள் இரகசிய வாக்கெடுப்பு மூலம் 47 நாடுகளை ஐநா மனித உரிமைக் கவுன்சில் உறுப்பு நாடுகளாகத் தெரிவு செய்கின்றன. இந்த உறுப்பு நாடுகள் அதிக பட்சம் ஆறு வருட காலம் மனித உரிமைக் கவுன்சில் உறுப்பியம் வகிப்பார்கள்.
பெருமளவு மனித உரிமை மீறல்களைப் புரியும் நாடுகளின் மனித உரிமைக் கவுன்சில் உறுப்புரிமையை நிறுத்தி வைக்கும் அதிகாரம் இந்தக் கவுன்சிலுக்கு உண்டு. வருடமொன்றுக்கு மூன்று முறை கூட்டங்களை நடத்தும் கவுன்சில் விசேட காரணங்களுக்காக மேலதிக கூட்டங்களை நடத்தலாம்.
மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்கு “றப்பொத்துவார்ஸ்” (Rapporteurs) எனப்படும் நிபுணர்களை நியமிக்கும் அதிகாரம் கவுன்சிலிற்கு உண்டு. இந்த நிபுணர்கள் வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு கவுன்சிலிடம் இருக்கிறது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான நடவடிக்கையை எடுக்கும் படி ஐநா பாதுகாப்புச் சபையைக் கோரும் அதிகாரம் கவுன்சிலிற்கு வழங்கப்பட்டுள்ளது. தன் வலதாக நடிவடிக்கை எடுக்கும் அதிகாரம் கவுன்சிலிடம் இல்லை. கவுன்சிலின் கோரிக்கைக்கு அமைவாகப் பாதுகாப்புச் சபை பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கும்.
நேரடியாகத் தலையிடுதல் (Direct Action) பொருளாதாரத் தடை விதித்தல் மற்றும் நீதி நடவடிக்கை எடுக்கும்படி சர்வதேச நீதிமன்றத்திடம் ஒப்படைத்தல் என்பனவற்றை பாதுகாப்புச் சபை எடுக்கலாம். சர்வதேச நீதி மன்றத்தின் நியாயாதிக்கத்திற்கு (Jurisdiction) அப்பாற்பட்ட விடயங்களை அதனிடம் விசாரணைக்குச் சமர்ப்பிக்கும் அதிகாரம் பாதுகாப்புச் சபையிடம் உண்டு.
சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் பொறுப்பை ஐநா சாசனம் பாதுகாப்புச் சபைக்கு வழங்குகிறது. படை நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை ஐநா சாசனம் பாதுகாப்புச் சபைக்கு வழங்குகிறது. படை நடவடிக்கையை ஐநா பாதுகாப்புச் சபையால் மாத்திரம் எடுக்க முடியும்.
மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்துவதற்குத் தவறியதற்காக பாதுகாப்புச் சபை கண்டிக்கப் படுகிறது. றுவான்டா இனப் படுகொலை, சிறேபிறேனிக்கா இனப்படுகொலை, டாபூர் படுகொலைகள், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்பனவற்றில் தலையிட்டு நிறுத்தாமல் பாதுகாப்புச் சபை ஒதுங்கி நின்று தனது கடமையைச் செய்யத் தவறியது.
மனித உரிமைப் பேணுகை அரசியலுக்கு உட்பட்டது என்ற விமர்சனம் நியாயமானது. எனினும் உன்னதமான தீர்மானங்களைத் நிறைவேற்றுவதில் ஐநா பாதுகாப்புச் சபை முன்னணி வகிக்கிறது. 2006 ஏப்ரல் 26ம்நாள் அது 1674ம் இலக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன் பொருளடக்கம்.
“மக்களை ஜெனோசைற், போர்க் குற்றங்கள், இனச் சுத்தகரிப்பு, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பையும் போர்க் காலத்தில் பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பையும்” இந்தத் தீர்மானம் பாதுகாப்புச் சபை மீது சுமத்துகிறது.
இப்போது நடக்கும் ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இரு முக்கிய விவகாரங்கள் பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ளன. முதலாவதாகக் கவுன்சில் 2009 மே 27ம் நாள் நிறைவேற்றிய தீர்மானத்தை மீளப்பெற வேண்டும் அல்லது முற்றாகத் திருத்தம் செய்ய வேண்டும்.
இதற்கு வாக்கெடுப்பில் பெரும்பான்மையை பெற்றாக வேண்டியது அவசியம்.சிறிலங்கா தனது போர் வெற்றியைப் பாராட்டும் பிரேரணையை கவுன்சிலின் வாக்களிப்புக்கு 2009 மே 27ம் நாள் விட்டது. கவுன்சில் 47 உறுப்பு நாடுகளும் பின்வருமாறு வாக்களித்தன. சாதகமாக 29, எதிர்த்து 12, புறக்ணித்தன 06.
நிறைவேறிய மேற்கூறிய தீர்மானம் இன்று வரை நிலைத்து நிற்கிறது. இந்தத் தீர்மானம் நிறைவேறிய சமகாலத்தில் ஐரோப்பிய நாடுகள் பிறிதோர் கடுமையான பிரேரணையை வாக்களிப்பிற்கு விட்டன. அதை கவுன்சில் உறுப்பு நாடுகள் பெரும்பான்மை வாக்களிப்பால் நிராகரித்தன.
போர் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், போரில் ஈடுபட்ட இரு பகுதியையும் கண்டிக்க வேண்டும், தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்ட பொது மக்களைப் பார்வையிடும் தடையற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று தோல்வியுற்ற பிரேரணை கூறியது.
ஐநா செயலாளர் நாயகம் சிறிலங்கா போர்க் குற்றங்களை விசாரணை செய்வதற்கு நியமித்த நிபுணர் குழு தனது அறிக்கையை 2011 மார்ச்சு 31ம் நாள் வெளியிட்டது. அரச படைகள் போர்க் குற்றங்கள் புரிந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், மனித உரிமை, மனிதநேயச் சட்டங்கள் மீறப்பட்டதாகவும் அறிக்கை கூறியது.
இந்த அறிக்கையை பாதுகாப்புச் சபையிடம் அல்லது ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலிடம் ஒப்படைக்கும் பொறுப்பை வகிக்கும் ஐநா செயலாளர் நாயகம் இதுவரை அறிக்கையை பாதுகாப்புச் சபைக்கு விடவில்லை. கடமை தவறியவர், பணிப் பொறுப்பற்றவர் என்ற குற்றச் சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்படுகின்றன.
அறிக்கையின் முடிவுகள் மனித உரிமைக் கவுன்சிலில் 2009 மே 27ம் நாள் நிறைவேறிய தீர்மானத்திற்கு நேரடி முரணாக இருப்பதால் தீர்மானத்தின் பெறுமதி பூச்சியமாக மாறியுள்ளது. அதே சமயத்தில் நிபுணர் குழு அறிக்கையைப் பரிசீலனை செய்து பாதுகாப்புச் சபையிடம் நடவடிக்கைக்காக ஒப்படைக்கும் கடப்பாடு கவுன்சிலிடம் இருக்கிறது. அதற்கு செயலாளர் நாயகத்தின் மூலம் மனித உரிமை கவுன்சில் அறிக்கையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
நிபுணர் குழு அறிக்கை தொடர்பான வாக்கெடுப்பில் பெரும்பான்மை நாடுகள் சாதகமாக வாக்களித்தால் மாத்திரமே அது பாதுகாப்புச் சபைக்குச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. ஐநா பாதுகாப்புச் சபை நியமித்த மனித உரிமை கவுன்சில் தலைவி நவநீதம்பிள்ளை போர் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் அவர் வாக்களிப்பிற்குக் கட்டுப்பட்டவர்.
மனித உரிமைக் கவுன்சிலில் சிறிலங்கா தொடர்பான சூடான விவாதம் நடக்கும் என்பது உறுதி. சிறிலங்கா பக்கத்தில் இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், ருஷ்யா போன்ற சக்திவாய்ந்த நாடுகள் அணி வகுத்து நிற்கின்றன. சிறிலங்கா பக்கத்தில் நிற்கும் நாடுகளில் மனித உரிமை மீறல்கள் தாரளமாக நடக்கின்றன.
இன்று சிறிலங்காவை விசாரிப்பவர்கள் நாளை எம்மையும் விசாரிக்க முற்படலாம் என்று சிறிலங்காவின் நட்பு நாடுகள் எண்ணுகின்றன. அதே சமயத்தில் கனடா போன்ற பலமான எதிரிகளை சிறிலங்கா பெற்றுள்ளதையும் சுட்டிக் காட்ட வேண்டும். சிறிலங்காவின் பொறுப்புக் கூறும் கடப்பாடு (Accountability) பற்றிய உரத்த குரல்கள் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ளன.
மனித வரலாற்றில் முதன் முறையாக மனித உரிமைகளைப் பட்டியலிட்ட அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம் (Universal Declaration of Human Rights) ஐநா பொதுச் சபையால் 1948ல் நிறைவேற்றப் பட்டது. அதனுடைய முகவுரையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
“கொடுங்கோலாட்சி, அடக்குமுறை ஆகியவற்றிற்கு எதிராக மனிதன் இறுதிக் கட்ட நடவடிக்கையாக எதிர்த்தெழுவதைத் தடுக்க வேண்டுமாயின் சட்டத்தின் ஆட்சி மூலம் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்”
நடைமுறையில் மனித உரிமைகள் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட வில்லை. சர்வதேச மனித உரிமைச் சட்டம் (International Human Rights Law) என்று குறிப்பிடத்தக்க ஒற்றைச் சட்ட வரைவு இதுவரை உருவாக்கப்படவில்லை. நாடுகளைக் கட்டுப்படுத்தாத உடன்படிக்கைகளும் தீர்மானங்களும் மாத்திரம் இருக்கின்றன.
இதனால் சிறிலங்கா போன்ற குற்றவாளி நாடுகள் தப்பிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. சர்வதேச சமூகம் வேண்டுமென்றே எல்லா நாடுகளையும் சரிவர இறுக்கமாக கட்டுப்படுத்தும் மனித உரிமைச் சட்டத்தை இயற்றி அதை அமலாக்கும் நேரடி நீதி அமைப்பை உருவாக்காமல் இருக்கிறது. மனித உரிமைகளை பொறுத்தளவில் இதுதான் மிகப் பெரிய குறைபாடு
senpagam@hotmail.com
No comments:
Post a Comment