Translate

Wednesday, 14 March 2012

ஜெனீவாவில் வெள்ளை அறிக்கை, கொழும்பில் வெள்ளை வேன் இதுதானா அரசாங்கத்தின் இலட்சணம்; கேள்வியெழுப்புகிறார் மனோ கணேசன்


ஜெனீவாவில் வெள்ளை அறிக்கை, கொழும்பில் வெள்ளை வேன் இதுதானா அரசாங்கத்தின் இலட்சணம்; கேள்வியெழுப்புகிறார் மனோ கணேசன்
news
ஜெனீவா ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் வெள்ளை அறிக்கை சமர்பித்து தம்மை மனித உரிமை காவலனாக காட்டிக்கொள்ள முனையும் சிறிலங்கா அரசாங்கம் கொழும்பில் வெள்ளை வானை அனுப்பி ஆட்களை கடத்துகின்றது. இதுதானா இந்த அரசாங்கத்தின் இலட்சணம் என, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.


இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்ற, கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ நகரசபை தலைவர் ரவீந்திர உதயசாந்தவை கடத்தும் முயற்சி தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே மனோ கணேசன் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த காலங்களில் நாம் வெள்ளை வேன் கலாச்சாரத்தை சுட்டி காட்டி உலகத்தை தட்டி எழுப்பிய போது, மறுப்பு அறிக்கை விட்டு வந்த இந்த அரசு இன்று கையும், மெய்யுமாக அகப்பட்டு கொண்டுள்ளது. இதுதான் நாம் நம்பும் இயற்கை நீதி இந்த அரசாங்கத்திற்கு தந்துள்ள தண்டனை. என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த நகரசபை தலைவர் ஆளும்கட்சியை சேர்ந்தவர். தமது கட்சியின் உட்பிரச்சினையில் அகப்பட்டுக்கொண்டு இருக்கும் இவர் தற்சமயம் தம்மை கடத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பில் எமது மக்கள் கண்காணிப்பு குழுவிற்கு புகார் செய்துள்ளார். இவரது அரசியல் எமக்கு ஏற்புடையதல்ல. ஆனால் இவரை சட்ட விரோதமாக வெள்ளை வானை அனுப்பி கடத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

கடத்த முயற்சி செய்த நபர்கள் பொதுமக்களால் சுற்றி வளைக்கப்பட்டு வெல்லம்பிட்டிய பொலிசில் ஒப்படைக்கப்பட்டார்கள். தற்சமயம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அத்துடன் அப்போது இந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய வெல்லம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரியும் இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடத்தல்காரர்களது வெள்ளை வாகனமும் மக்களால் அடித்து நொறுக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வசம் இருந்த ஆயுதங்களை பார்க்கும் போது இவர்கள் சீருடைக்காரர்கள் என்பது தெளிவாக புரிகிறது.

பகிரங்கமாக அறியப்பட்ட ஒரு நகரசபையின் தலைவரை பட்ட பகலில் ஆயுதம் தரித்த நபர்கள் பலவந்தமாக கடத்துவதற்கு, தலைநகர் கொழும்பில் முயற்சி செய்துள்ளார்கள் என்பதுதான் நடந்த சம்பவம். இது தொடர்பில் அரசாங்கம் இதுவரை முழுமையான விளக்க அறிக்கை சமர்பிக்கவில்லை.

ஆனால் இந்த அரசாங்கம் இன்று, ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் வரிசையாக அறிக்கை சமர்பித்து கொண்டிருக்கின்றது. மனித உரிமைக்கான இலங்கையின் விசேட பிரதிநிதி அமைச்சர் மகிந்த சமரசிங்க, வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ், முன்னாள் சட்ட மாஅதிபர் மொஹான் பீரிஸ், ஐநா நிரந்தர பிரதிநிதி பாலித கோஹன,  ஜெனீவா நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம் ஆகியோர் தமது அரசாங்கம் மனித உரிமைகளை கடைபிடிப்பதிலும், அவற்றின் நடைமுறைகளை கண்காணிப்பதிலும் அர்ப்பணிப்புடன்  செயல்படுகிறது என ஒவ்வொரு நாளும் தொடர்  வெள்ளை அறிக்கைகளை ஜெனீவாவில் சமர்பித்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களது அனைத்து அறிக்கைகளையும்  இன்று இந்த கொலொன்னாவை சம்பவம் தோல்வி அடைய செய்துள்ளது.

கடந்த காலங்களில் வெள்ளை வேன்களில் துடிக்க, துடிக்க கடத்தப்பட்ட எமது உடன்பிறப்புகள் பற்றி நமது மக்கள் கண்காணிப்பு குழு குரல் எழுப்பி உலகை தட்டி எழுப்பியது. இன்று இந்த விடயங்கள்தான்  ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் பேசப்படுகின்றன. இன்று தமது சொந்த கட்சிகாரர்களையே கடத்துபவர்கள்தான்,  அன்று எம்மவர்களை கொழும்பில் கடத்தினார்கள். இதை நான் அன்றும் சொன்னேன். இன்றும் சொல்கிறேன். நான் சொல்வது இன்று நிருபிக்கப்பட்டுவிட்ட உண்மை. உண்மையை சொல்வதில் நான் எவருக்கும் எப்போதும் அஞ்ச மாட்டேன். அரசாங்கம் முடியுமானால் பதில் சொல்லட்டும். என்றார்.  

No comments:

Post a Comment