(செய்தி தொகுப்பு – இளந்தி 26/02/2012)வடகிழக்கு மக்களின் நல்வாழ்வுக்காக மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வதாகக் கூறும் இலங்கை அரசு மக்களின் நிலத்தை வகை தொகையாய் அபகரிக்கிறது. இதற்கு முடிவே கிடையாதா என்று மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
கடற்படை கரையோர மக்களின் நிலங்களைப் பறிக்கும் போது தரைப்படை கிராமம், நகரம் என்ற வேறு பாடின்றி பாரிய நிலப்பரப்புக்களை தனக்காக எடுத்துக் கொள்கிறது. அரசு கூறும் இன நல்லிணக்கம் காற்றில் பறக்க விடப்படுகிறது.
காங்கேசன்துறை, கீரிமலை, மாதகல், ஒட்டகப்புலம், துணுக்காய் ஆகிய பகுதிக் காணிகள் அரசுடமையாக அறிவிக்கப்பட்டுள்ளன. போர்க் காலத்தில் பல காணி நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயருடன் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டன.
ஆனால் போர் முடிந்து இயல்பு நிலை திரும்பி விட்டதாகக் கூறும் அரசு உயர்பாதுகாப்பு வலய நிலயங்களை மாத்திரமல்ல வேறு புதிய நிலங்களையும் கைப்பற்றியுள்ளது. படிப்படியாக வடகிழக்கு மக்கள் தமது சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாற்றப்படுகின்றனர்.
யாழ் குடாவில் பலாலி, வலிவடக்கு, வடமராச்சி கிழக்கு நிலங்கள் இராணுவத்தின் வசமாகியுள்ளன. எந்த நிலத்தையும் எப்போது வேண்டுமாயினும் தேவை இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன அரசுடமை ஆக்கலாம் என்ற காட்டுமிராண்டி நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது.
ஆளுநர் வைத்ததே சட்டம். அவருடைய முப்படையினர் போட்டதே விதிமுறை என்ற எழுதப்படாத ஒழுங்கை கொழும்பு அரசு வடகிழக்கில் அமுல்படுத்துவதால் நியாயம், நீதி செத்துப்போய் விட்டது. போராட்டத்திற்கான காரணிகளை அடையாளம் கண்டு அது மீண்டும் தலைதூக்காமல் பார்க்க வேண்டிய அரசு மீண்டுமோர் போருக்குத் தூபமிடுகிறது.
மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் இனநல்லிணக்கம் என்ற கொள்கையைப் பிரகடனப்படுத்திய இந்திய -இலங்கை அரசுகள் அதற்கு எதிர்மறையான கருமங்களை நடத்துகின்றன.
மீண்டுமொரு போராட்டத்திற்கு வெளிநாடுகளில் வாழும் புலிகளும் புலம்பெயர் தமிழர்களும் கூட்டாக முயற்சி செய்கிறார்கள் என்று இந்திய றா உளவுப் படையும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகமும் கூறுகின்றன. நில அபகரிப்பு அசுர வேகத்தில் தொடரும் போது மீண்டுமொரு போராட்டம் தொடங்காமல் விடுமா, யோசித்துப் பாருங்கள்.
புலிகள் ஆயுதம் வாங்குகிறார்கள் போர்ப் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள் என்று பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் பாதுகாப்புச் செயலர் கொத்தபாய ராஜபக்ச நில அபகரிப்பை நியாயப்படுத்துகிறார். அத்தோடு சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீட்டையும் இதே காரணத்திற்காக நியாயப்படுத்துகிறார்.
வன்னியிலும் காணி அபகரிப்பு மிகப் பெரியளவில் நடக்கிறது. துணுக்காய் பிரதேசத்தில் மாத்திரம் 650 ஏக்கர் நிலத்தை அபகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. பழைய முறிகண்டியில் 50 ஏக்கர், ஆலங்குளம் கிராம சேவகர் பிரிவில் 112 ஏக்கர் அரசுடமையாகிவிட்டன.
வவுனியா, மன்னார், மட்டகளப்பு, அம்பாறை, திருகோணமலையில் சிங்களக் குடியேற்றம் மற்றும் இராணுவ முகாம் அமைப்பிற்காக தமிழர் மண் பறிபோகிறது. இராணுவத்தினர் இலங்கை சிவில் சட்டத்தையும் தமக்குத் துணையாக மேற்கோள் காட்டுகின்றனர்.
தாம் பிடித்து வைத்திருக்கும் காணிகள் 10 தொடக்கம் 20 வருடம் வரை தமது பிடியில் இருப்பதால் நெடுங்கால ஆட்சி உரிமைச் சட்டத்தின் கீழ் (The Law of Prescription) இராணுவத்தின் உடமையாகுமாம். இதற்காக சட்டத்தையும் வளைத்துப் போடுகிறார்கள்.
இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையத்தைப் பூநகரியில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. பலாலி விமான நிலையம் எதற்காக என்று கேட்கப்படுகிறது. வளமான ப+நகரி நெற் காணிகளை அரசுடமை ஆக்குவது தான் அடிப்படை நோக்கம்.
தொட்டம் தொட்டமாக நிலங்களைக் கிள்ளி எடுத்தபடி ஒட்டுமொத்த தமிழினத்தையும் நலன்புரி நிலையங்கள் என்ற அகதி முகாம்களில் அடைப்பது தான் சிங்கள அரசின் நாசகாரத் திட்டம்.
No comments:
Post a Comment