Translate

Friday 6 April 2012

மூன்று மாத கட்டாய விடுமுறை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் சமரசிங்க


அரசாங்கத்தின் பலவீனமான வெளிநாட்டுக் கொள்கையே அமெரிக்காவின் பகையை சம்பாதித்துக் கொள்வதற்கும் இந்தியாவினால் கைவிடப்படுவதற்கும் முக்கியமான காரணமாகும் என்று ஐ.தே.க.வின் எம்.பி.யான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.


ஏகாதிபத்திய அரசாங்கத்தினால் ஜனநாயக விழுமியங்களையும் மனித உரிமை விவகாரங்களையும் பாதுகாக்க முடியாது என்பதுடன், ஜெனீவா குழுவுக்குத் தலைமை தாங்கிய அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கு மூன்று மாத கட்டாய விடுமுறை வழங்கியது ஏன் என்றும் வினவினார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஜெனீவா பிரேரணை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தருணத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் எதனையும் எடுக்காமல் நாடோடியாகவே செயற்பட்டது. இந்தியாவுக்கு வருகைதந்த ஹிலாரி கிளின்டன் வெளிவிவகார அமைச்ர் ஜி.எல்.பீரீஸை இந்தியாவுக்கு அழைத்தார்.
அங்கு செல்லாமல் ஹிலாரியின் கடிதத்தில் கடினமான வார்த்தைப் பிரயோகங்கள் இருந்ததாக அரசு தெவித்துவிட்டது.

இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில் வாஷிங்டனிலுள்ள இலங்கை அதிகாரிகள் அறிந்து வைத்திருக்காதது ஏன்? முன் கூட்டியே அறிந்து வைத்திருந்தால் அதற்கேற்ப நாம் தயாராகியிருந்திருக்கலாம்.

இலங்கை அரசிடம் முறையான வெளிநாட்டுக் கொள்கை இல்லை. அதனால் தான் அமெரிக்காவுடன் பகைத்துக் கொண்டது. அணிசேராக் கொள்கையையே இலங்கை பின்பற்றியிருந்தது. ரஷ்யா, சீனா பின்பற்றும் வெளிநாட்டுக் கொள்கையையே நாம் தற்போது பின்பற்றுகின்றோம். இதனை அமைச்சர் சம்பிக்க போன்றவர்கள் ஆதரிக்கின்றனர். அதன் விளைவுதான் ஜெனீவாவில் இலங்கை தோல்வியடைந்தது.
ஜெனீவா சென்ற குழுவுக்கு அமைச்சர் பீரீஸே தலைமை தாங்கியிருக்க வேண்டும். ஆனால், தலைமை தாங்கிய அமைச்சருக்கு அரசாங்கம் கட்டாய விடுமுறை வழங்கியுள்ளது.

அவர் பதிலளிப்பதற்குத் தயாராகவேயிருக்கின்றார் என்றும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி அவருக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவுக்கு இலங்கையின் சார்பில் நூற்றுக்கும் அதிகமான பிரதிநிதிகள் சென்று மொத்தமாக 128 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. இது மக்களின் பணமாகும் என்றார்.

No comments:

Post a Comment