Translate

Friday, 6 April 2012

தமிழ்மக்களை ஏமாற்றியது போன்று அனைத்துலக சமூகத்தை ஏமாற்ற முடியாது – இரா.சம்பந்தன் ஆவேசம்

தமிழ்மக்களை 60 ஆண்டுகளாக ஏமாற்றியது போன்று அனைத்துலக சமூகத்தை உங்களால் ஏமாற்ற முடியாது என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆவேசமாகக் கூறியுள்ளார்.

ஜெனிவா தீர்மானம் தொடர்பான சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


“தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு சிறிலங்கா தவறிவிட்டது. வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினை உள்ளது.

சிறிலங்கா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்தப் பிரச்சினை தொடர்கிறது.

எமக்கு தனித்துவமான கலாசாரம், தனித்துவம் உள்ளது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் சிறுபான்மையினராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமத்துவமான தீர்வு காணப்பட வேண்டும்.

ஆறு பத்தாண்டுகளாக இந்தப் பிரச்சினை நீடிக்கிறது. தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமை சிறிலங்கா அரசாங்கத்தினால் சிக்கலுக்குள்ளாக்கப்பட்டது.

ஆயுத போராட்டத்துக்கு முன்னரே இந்த உரிமைப் போராட்டம் ஆரம்பமானது.

இந்தப் பிரச்சினைகளை தீர்க்க பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவற்றை சிறிலங்கா அரசாங்கங்கள் தீர்க்கத் தவறிவிட்டன.

எதிர்மறையான முரணான விடயங்கள் இன்னும் தொடர்வது உலக மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாட்டின் நலனை கருத்திற் கொண்டு புத்திக்கூர்மையுடன் அரசு நடக்க வேண்டும்.

புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்னும் அவர்கள் குறித்து பேசுகிறீர்கள். விடுதலைப் புலிகள் குறித்துப் பேசுவது உங்களின் தப்பிக் கொள்ளும் தந்திரம்.

இந்தப் பரப்புரைகளின் மூலம் சிறிலங்கா அரசாங்கம் நீண்டகாலத்துக்கு தப்பிக்கொள்ள முடியாது.

அழிந்து போன புலிகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல் உயிரோடு இருக்கும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும், சிங்கள மக்களுக்குச் சமமான அதிகாரங்களை வழங்க வேண்டும்.

ஆனால், சிறிலங்கா அரசாங்கம் ஆறு தசாப்தங்களாக கடைப்பிடித்த அணுகுமுறைகளையே இன்னும் பின்பற்றுகிறது.

தமிழ்ப் பகுதிகளில் ஜனநாயகம் நிலைநாட்டப்படக் கூடாது என்பதில் சிறிலங்கா அரசாங்கம் அவதானமாக இருக்கிறது.

தமிழர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த இடங்களில் இரண்டாம் தரக் குடிமக்களாக வாழமுடியாது.

தேசியப் பிரச்சினை விவகாரத்தில் சிறிலங்கா அரசு இரட்டை நாக்குடன் பேசுகிறது.

தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.

அவ்வாறாயின், வடக்கு, கிழக்கு முன்னேற மட்டுமன்றி முழுநாட்டின் முன்னேற்றத்திற்கும் புலம்பெயர் தமிழர்கள் பங்களிப்பர், இங்கு முதலிடுவர்.

நாட்டில் வாழும் மக்களின் பல்லினத்தன்மையை உறுதி செய்யும் வகையில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்கிறீர்கள், ஆனால் எதுவுமே நடக்கவில்லை.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் சமாதானம், நல்லிணக்கம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரப்பகிர்வு சகல மக்களும் இணங்கக் கூடியதாக இருக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே அதிகாரப் பகிர்வு தேவைப்படுவதாக சிலர் கூறுகின்றனர்.

எமக்கு அதிகாரப்பகிர்வு தேவையில்லை. தமிழ் மக்களுக்கு சமமான உரிமை வழங்கப்பட வேண்டும்.

அதிகபட்ச பரவலாக்கல் என்ற அடிப்படையில் இந்தப் பிரச்சினையை தீர்க்க நாம் தயாராக உள்ளோம்.

ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்த ஒவ்வொரு நாட்டினதும் இறைமையை மதிக்க வேண்டும்.

உள்நாட்டு அழுத்தம் காரணமாகவே இந்தியா எதித்து வாக்களித்ததாக அமைச்சர் டி.யூ. குணசேகர கூறுகிறார். ஆனால் உண்மை அதுவல்ல.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக சிறிலங்கா அரசு, இந்தியாவுக்கு பொய்யான வாக்குறுதி கொடுத்தது.

தமிழ்மக்களை கடந்த அறுபதாண்டுளுக்கு மேலாக ஏமாற்றியது போல, அனைத்துலக சமூகத்தை உங்களால் ஏமாற்ற முடியாது.

தமிழ்ச் சமூகத்தின் பிரச்சினைகளை சிறிலங்கா புறக்கணிக்க முடியாது என்பதை வெளிப்படுத்தும் அனைத்துலக சமூகத்தின் முதல் சமிக்ஞை தான் இந்தத் தீர்மானம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு முன்னெடுக்காவிட்டால், அது குறித்து அனைத்துலக சமூகத்துக்குப் பதிலளிக்க வேண்டி ஏற்படும்." என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


http://www.puthinapp...?20120405105933 

No comments:

Post a Comment