Translate

Friday 6 April 2012

குருநகர் கடற்கரை வீதியில் திடீரென தோன்றும் விகாரை; மக்கள் ; ஆத்திரம்

யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியில் மாநகர சபை வளாகத்துக்குச் சமீபமாக அவசர அவசரமாக பௌத்த விகாரை அமைக்கப்பட்டுவருகிறது என்று யாழ். மாநகர சபை எதிர்க் கட்சி உறுப்பினர் ஆ.பரஞ்சோதி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தப் பகுதியில் புராதன அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு முன்பாக அரச மரத்தின் கீழ் இந்த விகாரை அமைக்கும் பணிகள் இரவு பகலாக மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் பிரதேச மக்கள் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.



இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள கண்டனக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜெனிவா மனித உரிமைச் சபையின் இலங்கைக்கெதிரான இன நல்லிணக்கத்தை நோக்கிய தீர்மானத்தின் பின்னரும் இலங்கை அரசானது இன்னமும் இன, மத முரண்பாடுகளை வளர்ப்பதிலேயே கவனஞ்செலுத்தி வருகின்றது. இணக்க அரசியல் மூலம் தமிழரின் உரிமைகளை வெல்லலாம் எனக் கூறிக்கொண்டு அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிக்கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகளும் அரசின் செயல்களை ஆதரிப்பது போல் தெரிகிறது. யாழ். நாகவிகாரைக்கு அடுத்த பெரிய விகாரையொன்று மிக ரகசியமாக மாநகரசபை எல்லைக்குள் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு வருகின்றது. குருநகரில் கடற்கரை வீதியில் மாநகரசபை வளாகத்துக்கு அண்மையாக  மிகப் புரதான கால அம்மன் கோயிலுக்கு முன்பாக அரச மரமொன்றின் கீழ் சுமார் 15 மீற்றர் தூரத்தில் எவரது அனுமதியுமின்றி இவ்விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது. நேற்றுமுன்தினம் ஆரம்பமான இவ் வேலைகள் இடைவேளையின்றி இரவு பகலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது சம்பந்தமாக மாநகரசபை முதல்வருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரச அதிபரைத் தொடர்புகொண்டபோது அவர் கொழும்பு சென்றுள்ளதாக அறிய முடிகிறது. பின்னர் மேலதிக அரச அதிபரைத் தொடர்பு கொண்டபோது எழுத்து மூலம் தருமாறு வேண்டிக்கொண்டுள்ளார். இந்து கலாசார அமைச்சுக்கு அமைச்சர் எவரும் இல்லாத நிலையில் புத்த சாசன அமைச்சருக்குக் கீழேயே இந்து சமய விவகாரமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.கோயில்கள் அமைக்கும் போது புத்தசாசன அமைச்சின் அனுமதி பெற்ற பின்பே கட்டவேண்டுமென அரச சுற்று நிரூபமொன்று கூறுகிறது. ஆனால் இந்தச் சுற்றறிக்கையானது இந்து, கிறிஸ்தவ கோயில்கள் கட்டுவதைத் தடுப்பதற்காகவே உரு வாக்கப்பட்டது போல் தெரிகிறது.  தமிழ் பிரதேசங்களில் அமைக்கப்படும் புத்தவிகா ரைகளுக்கு இது விதிவிலக்கானது போலும். அரசுடன் ஒட்டி உறவாடிவரும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இவ்விடயத்தில் கரிசனை எடுத்து இதைத் தடுத்து நிறுத்த ஆவண செய்ய வேண்டும். முன்னரும் இதே போல திருக்குடும்ப கன்னியர்மட பாடசாலைக்கு முன்பாகவும் புத்தர் சிலை அமைக்க முயன்றபோது பொது மக்களதும் மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப் பினர்களதும் எதிர்ப்பினால் அம்முயற்சி கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது என்றுள்ளது.

No comments:

Post a Comment