பிச்சை எடுத்து மகளை என்ஜீனியரிங் படிக்க வைத்த அப்பா!
புதுக்கோட்டை பூங்காநகரை சேர்ந்த ரவிச்சந்திரன் - லீலாவதி தம்பதிக்கு வள்ளிமயில், சுந்தரவல்லி என்ற இரு மகள். இரயில் விபத்தில் தனது வலது காலை இழந்த ரவிச்சந்திரன் ஒற்றைக்காலுடன் பிழைப்பு ஓட்டி வந்தார். ஆனால் குடும்பத்தை நடத்த போதி வருமானம் இன்றி தவித்த ரவிச்சந்திரன், மதுரைக்கு வந்துவிட்டார். அங்கு ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார் ரவிச்சந்திரன். அப்படியும் வருமானம் போதுமானதாக இல்லை. தனது மகள்களைப் படிக்க வைக்க கடுமையாக சிரமப்பட்டு வந்தார்.
யாரும் செய்ய முடியாத, எதிர்பார்க்காத ஒரு முடிவை எடுத்தார் ரவிச்சந்திரன். தன் வாழ்க்கை முடிந்து விட்டது, நன்றாக படித்து மகள்களுடைய வாழ்க்கை செழிக்க வேண்டும் என்பதற்காக தன் கெளரவத்தை விட்டுவிட்டு மதுரையில் பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.
பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்று கூறி தெருத் தெருவாக சென்று பிச்சை எடுத்தார் ரவிச்சந்திரன். இவரின் இந்த நிலையை கண்டு பலரும் மனம் உருகி உதவி செய்ய முன் வந்தனர். இதில் கிடைத்த பணத்தை வைத்து தனது மூத்த மகள் வள்ளிமயிலை புதுக்கோட்டையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்தார். தற்போது 2ஆம் ஆண்டு பி.இ. படித்து வருகிறார் வள்ளிமயில். 2வது சுந்தரவல்லி பிளஸ்-1 தேர்வு எழுதியுள்ளார்.
ஊனமுற்றவர் ரவிச்சந்திரன் நிலை அறிந்து மதுரை பாரதி யுவகேந்திராவும், தமிழ் அரிமா சங்கமும் சேர்ந்து 8 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. அதோடு, பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு முயற்சியால் தொழில் அதிபர் வாலாந்தூர் பாண்டியன் என்பவர் 35 ஆயிரம் ரூபாய் மதிப்பில் லேப் டாப் ஒன்றை வழங்கியுள்ளார். இந்த லேப் டாப்பை மதுரை கலெக்டர் சகாயம், மாணவி வள்ளிமயிலுக்கு வழங்கி பாராட்டினார்.
''படிப்பது தொடர்பாக எந்த உதவி வேண்டுமானாலும் கேட்கலாம்'' என்று வள்ளிமயிலுக்கு வாக்குறுதி அளித்தார் கலெக்டர் சகாயம். அண்மையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தந்தை ஒருவரே, படிப்பு சரியாக வரவில்லை என்று கூறி மகளை கோயில் வாசலில் பிச்சை எடுக்க வைத்தார். மகளை பிச்சை எடுக்க வைத்த தந்தை சிறையில், ஆனால் மகள்கள் படிப்புக்காக பிச்சை எடுக்கும் தந்தை ரவிச்சந்திரன் நம் மனதில் நிற்கிறார்.
No comments:
Post a Comment