Translate

Saturday 7 April 2012

ஜெனிவா தீர்மானத்தை: இலங்கைக்கு எதிரான மிகப்பெரிய சதியாக பரப்புரை செய்து சிங்களத் தேசியவாதத்தை, தனது நலன்களுக்காக தட்டி எழுப்பி விட்ட மகிந்த?


இன்னொரு தீர்மானத்துக்கு வழி கோலுமா அரசாங்கம்? 
  • ஜெனிவா தீர்மானத்தை தட்டிக்கழிப்பதற்கு அரசாங்கம் இப்போது ஒரு ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது.
    “நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் எமக்கு உள்ள பொறுப்பை, எவரும் எடுத்துக் கூற வேண்டியதில்லை“-இது தான் அந்த ஆயுதம்.
    யாரும் எதையும் கூற வேண்டியதில்லை, எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எல்லாம் தெரியும் என்ற கட்டத்துக்கு அரசாங்கம் வந்துள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன், இதனை ஏற்க முடியாது என்றும் அறிவித்து விட்டது.
    அதுமட்டுமன்றி இந்த முயற்சிகளில் எந்த சர்வதேச தலையீடுகளையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையும் கூட தலையிட முடியாது என்றும் கூறும் அளவுக்கு அரசாங்கம் விடாப்பிடியான போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. முன்னதாக சற்று நழுவல் போக்கை வெளிப்படுத்திய அரசாங்கம், ஜெனிவா தீர்மானத்தை அடுத்து கடும் போக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. இது தோல்வியின் வெளிப்பாடாக இருந்தாலும், எந்தளவுக்கு உண்மையானது, எவ்வளவு காலத்துக்கு நீடித்து நிலைக்கக் கூடியது என்ற கேள்வி உள்ளது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இப்போது விரும்பியோ, விரும்பாமலோ சில சிக்கல்களில் சிக்கிக் கொண்டு விட்டது.
    முதலாவது- நல்லிணக்க ஆணைக்குழுவைக் காட்டி தப்ப நினைத்தது, தப்பாகிப் போய்விட்டது.
    நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம், சர்வதேச சமூகத்துக்கு கொடுத்த வாக்குறுதியும் நெருக்கடியாகி விட்டது. இதனால், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுமாறு அழுத்தங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், எல்லா பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த முடியாது, என்று பகிரங்க அறிவிக்க வேண்டியதாயிற்று. முன்னதாக அரசாங்கம் இதை வெளியே கூறாமல் இழுத்தடித்து வந்தது. இப்போது அரசின் உண்மையான முகம் என்னவென்று வெளிப்பட்டுள்ளது.
    மூன்று மாதங்களாக எதையும் கூறாமல் இருந்த அரசாங்கம், வழங்கப்பட்ட ஆணைக்கு அப்பால் நல்லிணக்க ஆணைக்குழு சென்று விட்டது என்றும் இப்போது சொல்கிறது. அதிலும் கூட அரசாங்கத்தினுள் ஒற்றுமையில்லை.
    ஆணைக்குழு எல்லை மீறவில்லை என்பதே டியு.குணசேகர, வாசுதேவ நாணயக்கார போன்றவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, நிமால் சிறிபால டி சில்வா உள்ளிட்ட பல அமைச்சர்களும் ஆணைக்குழு எல்லை மீறிவிட்டதாக கூறுகின்றனர். இலங்கையின் வரலாற்றில் அமைக்கப்பட்ட எந்தவொரு ஆணைக்குழுவும் உருப்படியான பயனைக் கொடுத்ததில்லை. அதுபோலத் தான் இதுவும் இருக்கும் என்ற சர்வதேச அமைப்புகளின் விமர்சனங்களை உண்மையாக்கும் வகையில் தான் அரசின் இப்போதைய நகர்வுகள் அமைகின்றன.
    ஜெனிவா தீர்மானத்தை வைத்து புத்திசாலித்தனமாக காய்களை நகர்த்த வாய்ப்புகள் கிடைத்த போதும், அதையெல்லாம் காலில் போட்டு மிதிக்கின்ற காரியத்தையே அரசாங்கம் செய்கிறது. ஜெனிவா தீர்மானத்துக்குப் பின்னர் அரசாங்கம், அவசரகதியில் எடுகின்ற முடிவுகளும் வெளியிடும் கருத்துகளும் அதற்கே ஆப்பாக விழப் போகிறது.
    சர்வதேச நாடுகளுடனான உறவுகள் குறித்து வெளிப்படுத்தப்படும் கருத்துகளும், எடுக்கப்படும் முடிவுகளும் தொலைநோக்குத் திட்டத்துடன் கூடியவையாகத் தெரியவில்லை. இப்போது அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது. இது முக்கியமானதொரு விடயம்.
    அதுவும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்தப் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரே அரசாங்கம் இந்த அழுத்தமான அறிவிப்பை வெளியிட்டது. இது சர்வதேச சமூகத்துடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க அரசாங்கம் எடுத்துள்ள நகர்வாகவே தெரிகிறது. அடுத்து, எமக்கு யாரும் புத்தி சொல்ல வேண்டாம், எமக்கு எல்லாம் தெரியும் என்ற தொனியில் வெளியிடப்படும் கருத்துக்கள் சர்வதேச அளவில் இலங்கை அந்நியப்பட்டுப் போவதற்கான அறிகுறிகளையே வெளிப்படுத்துகிறது. இலங்கை அரசிடம் இத்தகைய போக்கு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. எப்பொதெல்லாம் சர்வதேச சமூகம் தனக்குத் திருப்தியில்லாததை செய்கிறதோ, அப்போதெல்லாம் இவ்வாறு கூறுவது தான் அதன் வழக்கம். ஏற்கனவே பலமுறை இதுபோன்ற விவகாரங்களினால், அரசாங்கம் சர்வதேச அளவில் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது.
    குறிப்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நிபுணர்குழுவை நியமித்த போது, ஐ.நாவுடன் முரண்படப் போய் நன்றாக வாங்கிக் கட்டிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் சத்தமின்றிப் பணிந்துபோனது. இப்போது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மீது அரசாங்கத்துக்கு ஆழ்ந்த கோபம் உள்ளது. அதிலும் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையைக் கண்ணில் கூடக் காட்ட முடியவில்லை. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மீது நம்பிக்கையில்லை என்று, அதன் அமர்வுகளில் இருந்தவாறே இலங்கை அரசின் பிரதிநிகள் சொல்கின்றனர். இந்தக்கட்டத்தில் ஐ.நாவின் மீது நம்பிக்கையில்லை, ஐ.நாவுக்கு கட்டுப்படமாட்டோம் என்றால், அதிலிருந்து விலகிவிட வேண்டியது தானே என்று ஏளனம் செய்துள்ளது ஐதேக.
    இலங்கையைப் பொறுத்தவரையில் இப்போது ஐ.நாவை விட்டு இலகுவாக வெளியேறிவிட முடியாது. கடந்த மாதம் 22ம் திகதி ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அன்று இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. அதற்கு அமெரிக்கா மட்டும் தான் எதிர்ப்புத் தெரிவித்தது. ஏனைய 47 நாடுகளில் ஒன்று கூட இஸ்ரேலுக்கு ஆதரவாக வரவில்லை. இந்தநிலையில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையுடனான உறவுகளை முறித்துக் கொள்ளப் போவதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதுபோல இலங்கையால் செய்ய முடியவில்லை – அவ்வாறு செய்யவும் முடியாது. ஐ.நாவுடனும், சர்வதேச சமூகத்துடனும் முரண்டு பிடிப்பது போன்று உள்நாட்டில் காட்டிக் கொள்வதே அரசின் இப்போதைய உத்தி. ஏனென்றால் ஜெனிவா தீர்மானத்தை இலங்கைக்கு எதிரான மிகப்பெரிய சதியாக பரப்புரை செய்து சிங்களத் தேசியவாதத்தை, தனது நலன்களுக்காக தட்டி எழுப்பி விட்டது அரசாங்கம். இந்தநிலையில், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்துடன் இணங்கிப் போவதாக காட்டிக் கொண்டால், விளைவுகள் விபரீதமாகி விடும். எனவே சர்வதேச சமூகத்துடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதாகவே காட்டிக் கொள்ள அரசாங்கம் முனையும்.
    என்ன தான் அரசாங்கம் இப்போது முரண்டு பிடித்தாலும், கடைசியில் வழிக்கு வந்து தானே ஆக வேண்டும். சிறிது காலத்துக்கு சர்வதேசத்துடனான இந்த முரண்போக்கு தொடரலாம். ஆனால் பின்னர் படிப்படியாக அரசாங்கம் சர்வதேச சமூகத்தினதும், ஐ.நாவினதும் வழிக்கு வந்தேயாக வேண்டும். இல்லையேல் அடுத்த ஆண்டில் அது இன்னொரு தீர்மானத்தைப் பிரசவிப்பது தவிர்க்க முடியாது போகும்.

No comments:

Post a Comment