Translate

Saturday 26 May 2012

தெஹிவளை மசூதியை அகற்றக்கோரி பிக்குகள் தலைமையில் சிங்களவர்கள் தாக்குதல்!

கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளையிலுள்ள முஸ்லிம்களின் மசூதி ஒன்றை அங்கிருந்து அகற்றுமாறு கோரி அதன் மீது தாக்குதலை நடத்துவதற்கு பிக்குகள் தலைமையில் வந்த சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட முயற்சி நேற்று மாலை பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதன்போது ஏற்பட்ட மோதல்களால் தெஹிவளைப் பகுதியில் பெரும் பதற்றநிலை காணப்பட்டது.


நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இரண்டு பஸ் வண்டிகளில் பிக்குகள் தலைமையில் வந்த சிங்களக் காடையர்கள் தெஹிவளை மிருகக்காட்சிச் சாலைக்கு அருகில் உள்ள கல் விஹாரை வீதியிலுள்ள தருள் ரஹ்மான் மசூதி மீது கற்களைக் கொண்டு கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

மசூதி அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். இத்தாக்குதல் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

இதனையடுத்து கல் விஹாரை முன்பாகக் கூடிய பிக்குகள் தலைமையிலான காடையர்கள், அங்கிருந்து ஊர்வலமாக மீண்டும் மசூதிக்கு முன்பாக வந்து அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரி மறியல் போராட்டம் ஒன்றை மேற்கொண்டார்கள்.

நிலைமைகள் கட்டுமீறிச் செல்வதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் உடனடியாகவே பொலிஸார் அப்பகுதிக்குக் குவிக்கப்பட்டு மசூதி மீதான தாக்குதலைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

தொடர்ந்தும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், தெஹிவளையில் பதற்ற நிலை காணப்படுகின்றது.இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் மத்ரசாவை அங்கிருந்து அகற்றுமாறு கோசமிட்டதுடன் பதாகைகளையும் தாங்கியிருந்தனர். அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸ் மத்ரசா பகுதியில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டனர்.

இவ்வார்ப்பாட்டத்தில் ஐம்பது தொடக்கம் நூறு பேர் வரை கலந்துகொண்டனர். மேலும் இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் இந்தப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், வேறு இடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று பி.ப. 2:30 மணியளவில் முச்சக்கர வண்டிகளில் வந்த இனந்தெரியாத நபர்கள் மத்ரசா மீது கற்களை வீசிவிட்டுச் சென்றிருந்ததுடன்  பின்னர் பிற்பகல் 4 மணியளவில் கல்விஹாரவில் இருந்து பிக்குமார் மற்றும் பொதுமக்களைக் கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்று புறப்பட்டு மத்ரசாவைத் தாண்டி மிருகக்காட்சி வீதி சந்திக்கு வந்து சேர்ந்தது.

குறித்த இடம் மாடுகளை அறுக்கும் மடுவமாக பாவிக்கப்படுவதாகவும் அதை மூட வேண்டும் என்பதும் முக்கியமான கோசமாக ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது.

ஜாமியுஸ் ஷபாப் நிறுவனத்தின் காணியில் அமைந்திருக்கும் மேற்படி பள்ளிவாசல் மற்றும் குர்ஆன் மத்ரசா முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், பதினைந்து வருடங்களாக  இவ்விடத்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பதற்றத்தை அடுத்து இவ்விடயத்தை ஆராயவென தெஹிவளை பொலிஸாரால் இன்று தெஹிவளை, கல்கிஸை மாநகர சபை கட்டிடத்தில் பிற்பகல் 03.00 மணிக்கு பள்ளிவாசல் நிருவாகிகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கலந்துகொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment