Translate

Thursday 24 May 2012

தஸ்தயேவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையும்”


சுசீலாவின் தமிழ் மொழிபெயர்ப்பில் தஸ்தயேவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையும்” நாவலை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். அதில் கல்குதிரை சிறப்பிதழில் வெளியான தஸ்தயேவ்ஸ்கியின் மனைவியான அன்யாவின் “என் கணவரைப் பற்றிய சில நினைவுகள்” என்ற பகுதி பிரசுரிக்கப்பட்டிருந்தது. 
நுாற்றைம்பது வருடங்களுக்கு முன்பு பிறந்த பியோதர் தஸ்தயேவ்ஸ்கியைக் காட்டிலும் சிறந்த உரைநடை, புனைகதை மேதை உலகில் தோன்றியதில்லை என்று கருதுபவர்கள் இன்றிருக்கிறார்கள்.அந்த மாபெரும் எழுத்தாளனின் மனைவியின்(அன்யா) வாழ்க்கைக் குறிப்புகளிலிருந்து சில வரிகள் இவை.


புத்தக வெளியீடு பொருளாதார ரீதியில் வெற்றி பெற்று எங்கள் குடும்பம் ஓரளவு தலைநிமிர்ந்து நிற்க முடிந்தது. சற்றும் எதிர்பாராத வகையில் எனக்குப் பெருந்தொகை கிடைத்தது. எனவே தஸ்தயேவ்ஸ்கியின் கடன்கள் சிலவற்றை அடைக்க முடிந்தது. இந்தக் கடன்களைத் தீர்க்க முடியவில்லையே என்று தமது மரணத்துக்கு முன்பு தஸ்தயேவ்ஸ்கி அடிக்கடி வருந்தினார்.

பிரசுரகர்த்தாக்களின் வெற்றியால் என் கணவர் இறந்த பிறகு இவ்வளவு பெருந்தொகை கிடைத்தது. இது அவர் இருந்த காலத்தில் கிடைத்திருந்தால் அவருக்கு நிம்மதி ஏற்பட்டிருக்கும். தனது குழந்தைகளின் வருங்காலக் கல்வியைப் பற்றியும், தனது குடும்பத்தின் வறுமையைப் பற்றியும், சாகும் தறுவாயில் அவர் கவலைப்பட்டிருக்க மாட்டார். அவர் கையில் பத்தாயிரம் ரூபிள்கள் பணம் அதிகமாக இருந்திருந்தால் அவர் நிதானமாக எழுதியிருப்பார். தன் வாழ்நாளில் ஒரு தடவையாவது அவசரமில்லாமல் ஒரு நுாலை எழுதி முடித்திருப்பார். பணத்திற்காக அவசர அவசரமாக எழுதியதால், அவர் பல நுால்களைத் திருப்திகரமாக எழுத முடியவில்லை. அவற்றில் ஏகப்பட்ட குறைகளையும் தவிர்க்க முடியவில்லை.

இலக்கிய உலகிலும், சமுதாயத்திலும் அவரது படைப்புகள் துர்கனோவின் படைப்புகளுடனும் இதர எழுத்தாளர்களின் படைப்புகளுடனும் அடிக்கடி ஒப்பிடப்படுகின்றன. என் கணவரின் படைப்புகளை விட துர்கனோவின் படைப்புகள் முழுமையாக இருக்கின்றன என்றும் அவற்றின் வேலைப்பாடு அருமையாக உள்ளது என்றும் மக்கள் கூறுகிறார்கள். ஆனால் ஒரு எழுத்தாளர் எந்தச் சூழ்நிலையில் வாழ்ந்தார் , எழுதினார் என்பதைப்பற்றி அவர்கள் அதிகம் சிந்திப்பதில்லை. நல்ல ஆரோக்கியமும், பொருளாதாரப் பாதுகாப்பும், உறுதியான வேலையும் உடைய எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை மீண்டும், மீண்டும் திருத்தி எழுதவும், முழுமைப்படுத்தவும் வாய்ப்பு இருந்தது. ஆனால் என் கணவரின் நிலை அப்படியில்லை. இரண்டு தீவிர நோய்கள் அவரைப் பிடித்திருந்தன.

குடும்பச் சுமையும், கடன் சுமையும் அவரை அழுத்தின. அன்றாட வாழ்க்கையை எப்படிக் கழிப்பது என்ற பிரச்சினை அவரை எப்பொழுதும் வாட்டிக் கொண்டேயிருந்தது. பல சமயங்களில் கீழ்காணும் நிலை ஏற்பட்டதுண்டு. அவரது நாவலின் முதல் மூன்று அத்தியாயங்கள் அச்சில் வந்திருக்கும். நான்காவது அத்தியாயம் அச்சகத்தில் இருக்கும். ஐந்தாவது அத்தியாயம் பத்திரிகை ஆசிரியரை நோக்கித் தபாலில் சென்று கொண்டிருக்கும். அதற்குப் பிந்திய அத்தியாயங்களை எழுத முடியாதபடி பணத்தொல்லைகளும், கவலைகளும் அவரை வாட்டும்.

எனவே பாக்கியுள்ள அத்தியாயங்கள் அவர் மனதில் தங்கி விடும். அவரது நாவலின் அச்சான அத்தியாயம் ஒன்றை அவர் படிப்பார். அதிலுள்ள குறையைத் திடீரென்று கண்டுபிடிப்பார். அந்தக் குறை என் நாவலைக் கெடுத்து விட்டதே என்று துயரத்தில் முழ்கி விடுவார்.
“அந்த அத்தியாயத்தை திருத்தி எழுத முடியுமானால்!” என்று ஏங்குவார். அந்த அத்தியாயம் அச்சாகவில்லையானால் நான் அதைத் திருத்தியிருப்பேன்! அதில் என்ன குறை என்பதும், அதை ஏன் தொடர்ந்து எழுத முடியவில்லை என்பதும் இப்பொழுதுதான் தெரிகிறது. இந்தத் தவறால், சொல்ல வந்த விசயத்தையே நான் கொன்றுவிட்டேனே!” என்று அவர் வருந்துவார். தனது பிழையைக் கண்டுபிடித்து, ஆனால் அதைத் திருத்த முடியாது அவதிப்படுகிற உண்மையான துயரம் அது.

No comments:

Post a Comment