Translate

Monday 25 June 2012

இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்துவதாயின் 13ஆவது திருத்தத்தினை அமுல்படுத்த வேண்டும்: ஐ.தே.க. _


  இந்தியாவுடன் நட்புறவை வலுப்படுத்த வேண்டுமென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து உண்மையானால் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும். இல்லா விட்டால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி அதனை இரத்து செய்ய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அதனை விடுத்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் இணைந்து கூட்டறிக்கை விடுப்பதால் பலனில்லையென்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. 



கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே ஐ.தே.க.யின் பிரதிச் செயலாளரும், எம்.பி.யுமான ஜயலத் ஜயவர்தன இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பிரேஸில் நாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதோடு, இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர்.

இதில் இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவை வலுப்படுத்துவதோடு அதற்கு பங்கம் ஏற்படாத விதத்தில் நகர்வுகள் முன்னெடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையானால் அரசாங்கம் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தி தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். தேசிய பிரச்சினை தீர்வுக்கு 13ஆவது திருத்தம் அடிப்படையாக இருக்கின்றதென ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அதேபோன்று ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்தியாவிடம் பலமுறை 13 அல்ல அதற்கு அப்பால் சென்ற 13 பிளஸ் தீர்வை வழங்கவும் அரசாங்கம் தயாராகவுள்ளதாக உறுதி மொழிகள் வழங்கப்பட்டன.

ஆனால் யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கழிந்துவிட்ட போதும் இன்றுவரை தமிழ் மக்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. வெறுமனே உறுதி மொழிகள் மட்டுமே வழங்கப்படுகிறது. வடபகுதி மக்களுக்கு அரசியல் உரிமைகளை, ஜனநாயக உரிமைகளை வழங்குவதில் அரசிற்கு நாட்டமில்லை. உடனடியாக அம் மக்களுக்கு உரிமைகளை வழங்க வேண்டும்.

இந்தியாவுடன் நட்புறவை பேணுவோம். அதற்கு பங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்க மாட்டோமென வெறுமனே அறிக்கைகளை வெளியிடுவதால் பலனில்லை.

உண்மையான இதய சுத்தியுடன் தீர்வு விடயத்தில் அக்கறையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். எனவே உடனடியாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல் செய்து தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இல்லாவிட்டால் அரசாங்கத்திற்குள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி 13ஆவது திருத்தத்தை அரசியலமைப்பிலிருந்தே நீக்கி விட வேண்டும்.

அதைவிடுத்து உறுதிமொழிகளை வழங்கி இந்தியாவை ஏமாற்றும் வித்தையை கைவிட வேண்டும்.

அமைச்சர் அடாவடித்தனம்

சிரேஷ்ட அமைச்சரொருவர் தனது பாதுகாவலர்களுடன் சென்று தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து அடாவடித்தனம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ளார்.

அந்தளவுக்கு நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.

அம்பாந்தோட்டை ஜனாதிபதி ராஜபக்ஷ குடும்பத்தினரின் சாம்ராஜ்ஜியம். அங்கு பாதாள உலகக் கோஷ்டித் தலைவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். மேடைகளில் பேசுகின்றனர். ஜூலம்பிட்டிய அமரேவுக்கு நூற்றுக்கு மேற்பட்ட பிடியாணைகள் உள்ளன என நீதிபதி தெரிவித்துள்ளார். ஆனால் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அமரேவுக்கு எதிராக 5 பிடியாணைகள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கின்றார்.

இவ்வாறு கூறி யாரை பாதுகாக்க பொலிஸார் முயற்சிக்கின்றனர். நாடு முழுவதும் பாதாள உலகக் கோஷ்டியினர் கொலை, கொள்ளை, கற்பழிப்புக்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில குழுக்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றனர்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று வீடுகளுக்கு சென்று அச்சுறுத்தப்படுகிறார்கள்.

பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத் தலைவர் நிர்மல ரஞ்சித் தேவசிறியின் வீட்டுப் பிரதேசத்திற்கு சென்று அவரது பாடசாலை செல்லும் மகள் தொடர்பில் விபரங்களை கேட்டுள்ளனர்.

இவ்வாறு அடாவடித்தனங்களும், அச்சுறுத்தல்களும் நாட்டில் அதிகரித்துள்ளன என்றார். _

No comments:

Post a Comment