தாயகப் போராட்டத்திற்கு வலுவூட்டுவோம்: கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அழைப்பு!
தமிழர் தாயக பிரதேசத்தில் நாளை முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு உந்துசக்தியாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பினை ஏற்று, புலம்பெயர் நாடுகளில் அணிதிரளவேண்டுமென உலகத் தமிழர் பேரவையின் தலைவர் கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அழைப்பு விடுத்துள்ளார்.
இனஅழிப்பின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்காலினைத் தொடர்ந்து, கடந்த மூன்றாண்டுகளாக தமிழர் தாயகத்தில் சிங்கள மயமாக்கல், பௌத்தமயமாக்கலினை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசின் செயற்பாடானது, ஆழமான பிரச்சனையெனத் தெரிவித்துள்ள கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல், இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய காலத்தின் தேவை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுடைய தாயகம், தேசியத்தினை வேரறுக்கும் ஒர் முயற்சியாகவே, சிறிலங்கா அரசாங்கம் இதனைத் செய்துவருகின்றது. சர்வதேசத்தின் கவனத்திற்கு இதனைக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களுக்கு உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா விவகாரத்தில் மனித உரிமைகள் குறித்து சர்வதேசம் கரிசனை கொண்டிருந்தாலும் நில அபரகரிப்பு போன்ற விடயத்தில் கூடிய கரிசனை இல்லாத நிலையில், மிகவும் பாரதூரமானவும், ஆழமானதுமான இவ்விவகாரத்தினை, சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய உடனடி நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாளை தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டங்களுக்கு உந்துசகத்தியாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்திருக்கும் அழைப்பினை ஏற்று, புலம்பெயர் நாடுகளில் அணி திரளவேண்டுமென உலகத் தமிழர் பேரவை சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment