யாழ். மாவட்டத்தில் வாடகை வீடுகளில் குடியிருப்போர் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக வாடகைக் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வீட்டை விட்டு வெளியேறுமாறு அல்லது அதிகரித்த வாடகையை வழங்குமாறு வீட்டு உரிமையாளர்கள் நிர்ப்பந்தித்து வருவதாலேயே தாங்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக வாடகைக் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வலி. வடக்கு உட்பட யாழ். மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து வெளியேறி வாடகை வீடுகளில் குடியிருப்போர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் யாழ். குடாநாட்டிலுள்ள வீடுகளில் பெரும்பாலானவை ஆட்களற்ற வீடுகளாகவே இருந்தன. வீட்டு உரிமையாளர்கள் யுத்தம் காரணமாக வெளிநாடுகளுக்குச் சென்ற நிலையிலும் வெளிநாடுகளில் வசித்த நிலையிலும் யாழில் உள்ள அவர்களின் வீடுகளில் வாடகைக் குடியிருப்பாளர்கள் வசித்தனர்.
இந்த வீடுகள் முற்பணம் எதுமின்றி மாதாந்தம் 500 ரூபா தொடக்கம் ஆயிரம் ரூபா வரை வாடகைக்கு விடப்பட்டிருந்தன. சில வீட்டு உரிமையாளர்கள் வாடகை ஏதுமின்றி தமது வீடுகளைப் பாதுகாக்கும் நோக்கில் சில குடும்பங்களைக் குடியமர்த்தியிருந்தனர்.
ஆனால், யுத்தம் முடிவுக்கு வந்து ஏ-9 நெடுஞ்சாலையும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆரம்பித்த வாடகைக் குடியிருப்பாளர்களை விரட்டும் படலம் இன்று வரை தொடர்ந்து கொண்டேயிருப்பதாக பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.
வெளி மாவட்டங்களில் அல்லது வெளிநாடுகளில் உள்ள சிலர் இங்குள்ள வாடகைக் குடியிருப்பாளர்களைத் தொடர்புகொண்டு புதிய ஒப்பந்தத்தை எழுதுமாறு வற்புறுத்துகின்றனர்.
இந்த ஒப்பந்தப்படி இலட்சக்கணக்கான ரூபாவை முற்பணமாகச் செலுத்துமாறும் 2000, 3000 ரூபா வரை வாடகைக் கட்டணமாகச் செலுத்துமாறும் இல்லையேல் வீடுகளை விட்டு வெளியேறுமாறும் வற்புறுத்துகின்றனர்.
சில வீட்டு உரிமையாளர்கள் முன்னறிவிப்பு ஏதுமின்றி வீட்டுக்கு வந்து, வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகின்றனர். இதனால் பல குடும்பங்கள் நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அண்மையில், கோண்டாவில் மேற்கில் வசித்த குடும்பமொன்றை ஒப்பந்த காலம் முடிவடைய முன்னரே வெளியேறுமாறு வீட்டு உரிமையாளர்கள் நிர்ப்பந்தித்ததால் இவ் விடயம் பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment