Translate

Tuesday 26 June 2012


உரிமைகளை அடையும் வரை ஓயமாட்டோம்; போராடுவோம் முறிகண்டியில் மாவை சூளுரை
news
 எமது உரிமைகளை அரசும், இராணுவமும், பௌத்த குருமாரும் அழித்துவருகின்றனர். இதற்கெதிராக நாங்கள் ஜனநாயக ரீதியிலான பல்வேறு போராட்டங்களை முன்னெடுப்போம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

 
தமிழர் தாயக நிலங்களின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் நேற்று முற்பகல் 9.30 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை முல்லைத்தீவு திருமுறிகண்டி ஆலய முன்றிலில் ஆரம்பமாகி நடைபெற்றது. 
 
இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மாவை சேனாதிராசா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு
எங்கள் நிலத்தில் நாங்கள் வாழும் உரிமையை எங்களின் வாழ்வுரிமையை இந்த அரசு திட்டமிட்டு இராணுவத்தின் ஊடாகவும், பௌத்த குருமார் ஊடாகவும் பறித்து வருகிறது. எமது நிலங்களை ஆக்கிரமித்து தமது குடியிருப்புக்களையும், புத்த விகாரைகளையும், இராணுவ முகாம்களையும் அமைத்து அவர்கள் எமது மக்களை அகதிகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
 
 இன்னும் இலட்சக் கணக்கான மக்கள் தமது நிலங்களுக்குப் போகாமல் இருப்பதற்கு காரணம் இராணுவம் இந்த நிலங்களை ஆக்கிரமித்திருப்பது தான். பௌத்த குருமார் புத்த சிலைகளை வைத்து ஆக்கிரமித்து இருப்பது தான். 
 
தமிழ் மக்களின் பண்பாடு, கலாசாரம், அவர்களுடைய நில உரிமை, வாழ்வுரிமை, அவர்களது ஜனநாயக உரிமை என்பவற்றையும் சீரழித்திருக்கின்றது இந்த அரசு. 
இதற்கு எதிராக இன்று நாங்கள் சில மணிநேரங்கள் போராட்டம் நடத்துகின்றோம். 
 
இது ஒரு அடையாளமாக எங்களால் மேற்கொள்ளப்படும் போராட்டம். இதே போன்று அனைத்து இடங்களிலும் எமது போராட்டங்களை முன்னெடுப்போம். நேற்று முன்தினம் கூட இங்கு மீளக்குடியமர்வதற்கு கொண்டுவரப்பட்ட திருமுறிகண்டியைச் சேர்ந்த மக்கள் மாலையில் இராணுவத்தினரால் மிருகத் தனமாகத் தாக்கப்பட்டு பஸ்களில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் செல்லப்பட்டனர்.
 
இந்த உரிமை இராணுவத்துக்கு வழங்கியது யார்? எனவே தான் இந்த அட்டூழியங்களைச் செய்கின்ற இராணுவம், எங்கள் நிலங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்று சொல்கின்றோம். என்றார். 

No comments:

Post a Comment