Translate

Friday 29 June 2012



மூதூரில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு பிரதமருக்கு யோகேஸ்வரன் எம்.பி கடிதம்
திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் உள்ள 3ம் கட்டை மலை அருகாமையில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதை தடுக்குமாறு, பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் பௌத்த மதவிவகார அமைச்சரும், பிரதமருமான தி.மு. ஜயரத்னவுக்கு அவசரமாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போதைய அரசாங்கத்தில் வடக்கு கிழக்கு மண்ணில் இவ்வாறான பௌத்த மத வணக்கஸ்தலங்கள் திட்டமிட்டு ஸ்தாபிக்கும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இது குறித்து தங்களுக்கு மகஜர் மூலமும், பாராளுமன்றத்திலும், பாராளுமன்ற விவகார அமைச்சின் கூட்டத்திலும் தங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆகையால், ஆசியாவில் ஆட்சிமிக்க நாடாக இலங்கையை மாற்றுவதாக கூறும் தங்கள், அரசாங்கம் ஒருபோதும் சிங்கள மக்கள் வாழாத இடத்தில் சிறுபான்மை மக்களை வேதனைப்படுத்தும் வகையில் சிறுபான்மை மக்களின் மத வழிபாட்டை கொச்சப்படுத்தும் வகையில் திட்டமிட்டு பௌத்த மதம் ஸ்தாபிப்பது இலங்கை நாட்டின் வரலாற்றில் பெரும் ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்தி வருகின்றது.
ஆகவே தயவு செய்து உடனடியாக தங்களது ஆதரவு கட்சியான ஹெல உறுமயவின் நிகழ்ச்சி நிரலில் அடங்கி உள்ள வடக்கு கிழக்கு மண்ணில் இத்திட்டமிட்ட பௌத்த மத தாபிப்பை தடுத்து நிறுத்துமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்.
இந்நிலை தொடருமாக இருந்தால், இது குறித்து இந்து மக்களை எழுச்சிப்படுத்த வேண்டிய சூழல் உருவாகும். இலங்கை வரலாற்றிலே தற்போதைய ஆட்சியில் தான் சிறுபான்மை மக்களின் வாழ்விடங்களில் பௌத்த மதம் ஸ்தாபிக்கும் செயற்பாடும், சிறுபான்மை மக்களின் வணக்கஸ்தலங்களை திட்டமிட்டு அழிக்கும் செயற்பாடு தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.
தற்போது மூதூர் 3ம் கட்டை மலை அருகாமையில் சிங்கள குடியிருப்புக்கள் இல்லாத நிலையில், இங்கு பௌத்த மதம் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதோடு, அருகில் உள்ள காடுகளை துப்பரவு செய்து சிங்கள மக்களை குடியிருக்க வைக்க ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தமிழ் பேசும் சமூகம் வன்மையாக கண்டிக்கின்றது.
இந்த வகையில் இச்செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறு வேண்டுகின்றேன். இந்து, இஸ்லாமிய மக்களின் பூர்வீக வாழ்விடங்களை தொல்பொருள் ஆய்வு பகுதி என அரசாங்கம் பிரகடனப்படுத்தி அங்கு பௌத்த விகாரைகளை ஸ்தாபிப்பது இந்து, இஸ்லாமிய மக்களை பெரிதும் துன்படுத்தியுள்ளது.
இவ் ஜனநாயக நாட்டில் நடைபெறும் இச்செயற்பாடு தடுத்து நிறுத்த வேண்டியது நாட்டின் பிரதமர் என்ற வகையில் தங்களுக்கு உரியதாகும். எனவே நியாயமான நடவடிக்கையை மேற்கொண்டு அதற்கான பதிலை தந்துதவுமாறு வேண்டுகின்றேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment