ஜெனீவாவில் பிரித்தானிய தமிழர் பேரவை அதிரடிப் பிரச்சாரம்:
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் இன்று வியாழக்கிழமை அன்றைய அமர்வுகளின் போது இலங்கையின் மனித உரிமை விவகாரம் குறித்து பல உறுப்பு நாடுகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் விசனம் தெரிவித்திருப்பதுடன் பல்வேறு விடயங்கள் குறித்தும் வலியுறுத்தி இருக்கின்றன. ஹங்கேரி, பெல்ஜியம், சுலவோகியா , ஜப்பான் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளே இவ்வாறு குரல் எழுப்பி இருக்கின்றன. ஊடகவியலார்களுக்கு எதிரான அச்சுறுத்தல் மற்றும் இடையூறுகள் இருப்பதாக ஹங்கேரி கவலை வெளியிட்டது. அதேவளை, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்துமாறும் செயலாளர் நாயகத்தின் அறிக்கையை கருத்தில் எடுக்குமாறும் பெல்ஜியம் வலியுறுத்தியது.
சர்வதேச பொறிமுறைகள் மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து இலங்கை செயற்பட வேண்டும் என்று ஜப்பான் வலியுறுத்தியது. ஐ. நாவின் விசேட செயன்முறைகளுடன் இணைந்து செயற்பட இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது என்று குறிப்பிட்ட பிரித்தானியா ஐ . நா. விசேட செயன்முறைகள் மற்றும் நாடுகளின் விஜயங்களுக்கு இலங்கை அழைப்பு விடுக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டது. சுலவோகியா தனது அறிக்கையில், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கையின் நம்பகமான அமுல்படுத்தலை வலியுறுத்தியதுடன், சிவில் சமூகங்களுடன் திறந்த மற்றும் மூடிய கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பிலான கள நிலவரம் குறித்து பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் செயற்ப்பாட்டாளர்கள், பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் அரச சார்பற்ற நாடுகளுக்கு விளக்கமளித்து வருகிறது. அத்துடன், ஐ. நா . வின் சகல பொறிமுறைகளையும் மற்றும் வழிமுறைகளையும் பயன்படுத்தி மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் பரப்புரை செய்து வருவதுடன், அவற்றை வினைத்திறனுடன் தீர்ப்பதற்காகவும் ஆவன செய்து வருகிறது.
No comments:
Post a Comment