Translate

Saturday, 30 June 2012

அனுராதபுரம் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்ட கைதிகள் மீது தாக்குதல்- மூவர் ஆபத்தான நிலையில்!

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து அங்கிருந்த 28 கைதிகள் பலவந்தமாக அநுராதபுரம் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் 15 பேர் கடுமையான கா யமடைந்த நிலையில் இருப்பதாகவும் அதில் மூவரின் நிலை மோசமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அநுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட இவர்கள் மிகவும் மேசமான முறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது.


வவுனியா சிறைச்சாலையில் அதிகாரிகள் மூவர் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவத்துக்கு குறிப்பிட்ட 28 தமிழ்க் கைதிகளுமே பொறுப்பெனக் கருதும் சிறைச்சாலை நிர்வாகம். இன்று நண்பகல் பணயக்கைதிகள் விவகாரம் முடிவுக்கு வந்ததையடுத்து குறிப்பிட்ட 28 பேரையும் அம்புலன்ஸ் மற்றும் சிறைச்சாலை வாகனங்களின் மூலமாக அனுராதபுரம் சிறைச்சாலைக்கு பலாத்காரமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட போது இவர்களில் 15 பேர் மிகவும் மேசமாகக் காயமடைந்திருந்தனர். சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்திய இராணுவத்தினரும். அதிரடிப்படையினரும் தாக்குதல் நடத்தியபோதே இவர்கள் காயமடைந்ததாகத் தெரிகின்றது. இவர்களில் மூவருடைய நிலை மிகவும் மோசமாக இருந்ததாக வவுனியா சிறைச்சாலையிலிருந்து கிடைத்த தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இவர்கள் அனைவரும் மருத்துமனைக்குக் கொண்டு செல்வதற்குப் பதிலாக அநுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தனியான அறை ஒன்றில் அடைக்கப்பட்ட இவர்கள் மீது இன்று பிற்பகல் முதல் கடுமையான தாக்குதல்களும் சித்திரவதைகளும் இடம்பெறுகின்றது. தடிகள், கம்பிகள் என்பவற்றுடன் சப்பாத்துக் கால்களாலும் இவர்கள் தாக்கப்படுவதாக அநுராதபுர சிறைச்சாலையிலிருந்து கசிந்துள்ள தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இவர்களுடைய கதறல் சத்தத்தை அநுராதபுரம் சிறைச்சாலையின் பல பகுதிகளிலும் கேட்கக் கூடியதாக இருக்கின்றது.

No comments:

Post a Comment