Translate

Wednesday, 27 June 2012


போராட்டங்கள் என்ன செய்யும்? 

'வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்...' ஆங்கிலத்தில் அறியப்படும் சிறந்த பழமொழி ஒன்றின் அழகான தமிழாக்கம் இது. இனப்போர் முடிந்து மூன்று ஆண்டுகள் முழுமையுமாக முடிந்த பின்னர், இன்றைய சூழலிலும் இலங்கை தமிழ் மக்களுக்கும் அவர்களின் அரசியல் தலைமைக்கும் வெகுவாக பொருந்தும் விடயம் இது. அதிலும் குறிப்பாக, அரசிற்கு எதிராக சர்வதேச சமூகம் முன்னெடுக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த நடவடிக்கை அளித்துவரும் ஊக்கத்தின் அடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது மொட்டவிழும் மக்கள் போராட்டங்களுக்கும் இது பொருந்தும்.


இன்று காணி பிரச்சினை குறித்து அடிமேல் அடி வைத்து தொடங்கப்படும் போராட்டங்கள் எங்கே சென்று முடியும் என்று அதனை தொடக்கி வைத்துள்ளவர்களுக்கு எண்ணத் தோன்றி உள்ளதா? என்பது தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில், தமிழ் மக்களின் தற்போதைய அபிலாஷைகளை சர்வதேச சமூகத்தின் முன் வைப்பதற்கு இத்தகைய போராட்டங்கள் உதவும். ஆனால், இதில் எந்தவித பயனும் ஏற்படவில்லை என்றால் அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைள் என்ன? அதற்கும் அப்பால் சென்று, எந்தவித அமைதி போராட்டமும் எதிர்பார்க்கும் நல்ல முடிவுகளை ஏற்படுத்தாவிட்டால், அதன் பின்விளைவுகள் என்ன? இவை குறித்து யாரும் யோசித்து பார்த்ததாக தெரியவில்லை.

அதாவது போராட்டம், போர்க்குணம் என்பன போன்ற விதைகளை மக்கள் மனதில் தூவி, அதனை தண்ணீர் விட்டு வளர்த்து விட்டு, பின்னர் கைகளை பிசைந்து கொண்டு நிற்கும் அவலத்தை தமிழ் அரசியல் தலைமை ஏற்கனவே ஏராளமாக சந்தித்துவிட்டது. அதற்கான அதி உயர் விலையையும் தமிழ் சமுதாயம் கொடுத்து மாய்ந்து விட்டது. அதே வழியில் தான் தற்போதும் தாங்கள் பயணிக்கிறோமா என்று தமிழ் மக்களும் அரசியல் கட்சிகளும் சிந்தித்து செயல்பட வேண்டும். அல்லது, நிகழ்கால நிகழ்வுகளை மட்டுமே மையப்படுத்தி செயலாற்றினால், தமிழ் சமூகத்தின் எதிர்காலமும் கடந்த காலத்தை போலவே இருண்டு விடும் சூழ்நிலை உள்ளது.

முக்கியமாக தமிழ் அரசியல் தலைமை, சர்வதேச சமூகத்தின் தற்போதைய நடவடிக்கைகளையும் முடிவுகளையும் அலசி, ஆராய்ந்து, தமது மக்களின் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளையும் அவை நோக்கவிருக்கும் எதிர்ப்புகளையும் குறிப்பறிந்து செயல்பட வேண்டும். தனது எதிர்பார்ப்புகளை மட்டுமே எண்ணிப்பாராமல், தனது எல்லைகளையும் உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும். இதில், தமிழ் இனத்தின் குறிக்கோளும் இலக்கும் என்ன? என்பது குறித்த குழப்ப நிலை மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும். இவ்வாறு செய்யத் தவறியதால் தான் கடந்த கால நிகழ்வுகள் எந்தவித கட்டுப்பாடுமின்றி தன்னிச்சையாக செயல்வடிவம் பெறும் நிலைமைக்கு தள்ளப்பட்டது.

இதில் மிதவாதிகளுக்கும், அரசியலில் தீவிரவாத எண்ணம் கொண்டவர்களுக்கும் இடையே, 'கொள்கை பிடிப்பு', இலக்கு ஆகிய விடயங்களில் அடிப்படையாக இருந்து வந்துள்ள வித்தியாசங்கள் களையப்பட வேண்டும். அவ்வாறு செய்யப்படாவிட்டால், மிதவாதிகள் எப்போது தோல்வியை தழுவுவார்கள் என்று தீவிரவாத அரசியல் செய்பவர்கள் காத்திருப்பார்கள். அவர்கள் கையில் தமிழ் இனத்தின் எதிர்காலம் சென்று அடைந்து விடக்கூடாது என்ற கரிசனத்தில் மிதவாதிகளே தீவிரவாதமான அரசியல் நடவடிக்கைகளை எடுத்து விடுவார்கள்.

உதாரணத்திற்கு தற்போதைய போராட்டங்கள், அரசிடம் இருந்து பயன் எதனையும் தங்களது மக்களுக்கு பெற்று தரவில்லை என்றாலும், தங்களது மக்கள் மீது காவல் துறையினரையோ, இராணுவத்தினரையோ ஏவி விடாது என்ற நம்பிக்கையில் தமிழ் அரசியல் தலைமை நம்புவது போல் தோன்றுகிறது. இதனை மட்டுமே சர்வதேச சமூகத்தின் பார்வை தவிர்க்க முடியும் என்று தற்போதைய சூழலில் (மட்டுமே) எதிர்பார்க்கலாம். ஆனால், சர்வதேச சமூகத்தையும் மீறி, அத்தகைய அசம்பாவிதங்கள் அரங்கேறினால், அனாதரவாய் நிற்கப்போகும் தமிழ் மக்களுக்கு அவர்களது அரசியல் தலைமை செய்யப் போவது என்ன? இது குறித்து எந்த விதமான சிந்தனைகளும் தோன்றியுள்ளதாக தெரியவில்லை.

அவ்வாறு நடக்குமேயானால், அப்போது மிதவாத அரசியல் தலைமை என்ன செய்யப்போகிறது? போருக்கு முந்திய காலத்தை போலவே காணாமல் போகப் போகிறதா, அல்லது தங்களது செயல்பாடுகளினால் அல்லலுறும் மக்களுடன் தாங்களையும் 'தண்டனை'-க்கு உள்ளாக்கி கொள்ளப் போகிறார்களா? மிதவாத அரசியல் தோல்விக்கு அரசையும் அடுத்தவர்களையும் சுட்டிக்காட்டி காரணம் கற்பிப்பதுடன் அவர்கள் வேலை முடிந்து விட்டது என்று கருதி மீண்டும் செயல்படாமல் விட்டுவிடப் போகிறார்களா? அப்போதும் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி தமிழ் மக்களே.

மிதவாத அரசியல் தலைமை பொறுப்பேற்க முழுவதுமாக முயலாமல், காலி செய்துவிட்டு சென்ற இடத்தை தான், கடந்த காலத்தில் தீவிரவாத அரசியல் போக்கு கொண்ட இளைஞர் குழுக்கள் தங்களதாக ஆக்கிக் கொண்டன. பின்னர், அதுவே கொள்கை அளவிலான அரசியல் குறைந்து, செயல்பாட்டில் தீவிரவாதம் நிறைந்த நிலைமைக்கு தள்ளப்பட்டது. இதில் தீவிரவாத அரசியல் போக்கை விட, தீவிரவாத செயல்பாடு தனக்கென ஓர் இடத்தையும், அர்த்தத்தையும் கற்பித்துக் கொண்டு, அதற்கென ஓர் 'இயக்கவியல் (dynamics)  செயல்விதி முறைகளை'-யும் வகுத்துக் கொண்டதை தமிழ் கூறும் நல்லுலகம் மட்டுமல்ல, இன்ன பிற உலகத்தகவரும் காண்பதற்கு, கண்டு வெறுப்பதற்கு ஏதுவாகியது.

எங்கே, இலங்கை அரசும் பிரிவுபட்ட சிங்கள அரசியல் தலைமையும் அவர்களிடையே உலவிவரும் பேரினவாதிகளும் தங்களை கண்டு பயந்து 'தனி நாடு' கொடுத்து விடுவார்கள் என்ற எண்ணம் போய், விடுதலை புலிகள் இயக்கத்தை உலக நாடுகள் தீவிரவாத இயக்கமாக மட்டுமே கண்டு செயல்படும் துர்பாக்கிய நிலைக்கு தமிழ் சமூகம் தள்ளப்பட்டது.

இந்த முறையும் மிதவாத அரசியல் தலைமையால் கட்டவிழ்த்து விடப்படும் போராட்ட திட்டங்கள், தமிழ் - சிங்கள சமூகத்தினரிடையே உலாவரும் அடிப்படைவாதிகளையும் இனவாதிகளையும் உசுப்பி விடும் நிலைமைக்கு உள்ளாக கூடாது. அத்தகைய நிலைமை உருவாகுமானால், மிதவாத தமிழ் தலைமை அரசையும், சிங்கள பேரினவாதிகளையும், ஏன் சர்வதேச சமூகத்தையும் கூட குறை கூறி, குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பி விடலாம். தங்களது போராட்டங்கள் வன்முறைக்கும் வித்திட்டது என்ற குற்றச்சாட்டையும் உதறி தள்ள முயலலாம். கடந்த காலத்தை போலவே அதில் வெற்றியும் பெறலாம். ஆனால், அதனால் எல்லா விதங்களிலும் பாதிக்கப்படப் போவதும் முன்னர் அடி மேல் அடி வாங்கி, அதிலிருந்து மீண்டெழ முடியாமல் தொடர்ந்தும் தவித்து வரும் அப்பாவி தமிழ் மக்களே!

No comments:

Post a Comment