Translate

Tuesday 26 June 2012


  வடக்கு தேர்தலை வலியுறுத்தவோ அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கவோ மேனன் வரவில்லை


வட மாகாண தேர்தலை வலியுறுத்தவோ அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு அழுத்தம் கொடுக்கவோ இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் இலங்கைக்கு வரவில்லை. மாறாக வழமையானதும் பொது வானதுமான விஜயமாகவே அவரின் விஜயம் காணப்படும் என்று அரசாங்கம் தெரிவித்தது.


இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் சிறந்த இராஜ தந்திர உறவுகள் காணப்படுகின்றன என்றும் அரசாங்கம் குறிப்பிட்டது. 



மேனனின் வருகையை மையப்படுத்தி அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ள பலர் முயற்சிக்கின்றனர். இவர்களே போலியான தகவல்களை பிரசாரம் செய்து வருகின்றனர்.

எவ்வாறாயினும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் சிறந்த இராஜ தந்திர உறவுகள் காணப்படுகின்றன என்றும் அரசாங்கம் குறிப்பிட்டது. இது குறித்து ஊடக அமைச்சரும் அரசாங்க பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுகையில்:

எதிர் வரும் வெள்ளிக் கிழமையன்று இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இவ் விஜயமானது இராஜ தந்திர ரீதியிலான பொதுவான விஜயமாகும். வட மாகாண தேர்தல், அரசியல் தீர்வு மற்றும் ஆணைக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் போன்ற விடயங்களை வலி யுறுத்தி சிவ் சங்கர் மேனன் இலங்கைக்கு வரவில்லை. அவ்வாறான தொரு நோக்கத்தில் இந்தியா அவரை அனுப்பவும் இல்லை.

மேனனின் வருகையினைப் பயன்படுத்தி சிலர் அரசியல் இலாபம் தேடிக்கொள்ளமுயற்சிக்கின்றனர். அழுத்தங்களுக்கு அடி பணிந்து உள் நாட்டின் விடயங்களை முன்னெடுக்கும் நிலைப் பாட்டில் அரசு இல்லை.தேசிய பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளக் கூடிய பொறிமுறைகள் இலங்கை வசம் உள்ளது. எனவே இந்தியாவோ ஏனைய நாடுகளோ தலை யிடவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படாது.

சிவ் சங்கர் மேனனின் வருகையினை உள் நோக்கத்துடன் பார்ப்பதை அரசு ஏற்றுக்கொள்ளாது. ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை சந்தித்து பொதுவான விடயங்கள் குறித்தே இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் பேசுவார். உள் நாட்டு விடயங்கள் குறித்து அரசு உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளது எனக் கூறினார். _

No comments:

Post a Comment