Translate

Saturday 30 June 2012

"முறிகண்டியில் ஓர் முள்ளிவாய்க்காலை கண்டோம்" குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழ்மாறன்


"முறிகண்டியில் ஓர் முள்ளிவாய்க்காலை கண்டோம்" குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழ்மாறன்
ஈழமெங்கும் நிலத்திற்கான போராட்டங்கள் விரிவடைந்துவரும் இன்றைய காலத்தில் தாங்கள் வாழ்ந்த நிலத்தை மீட்பதற்காய் ஒரு முள்ளிவாய்க்கால் நடவடிக்கைக்கு முகம் கொடுத்த முறிகண்டி மக்கள் தங்கள் வாழ்நிலத்தை மீட்கச் சிறைசென்றிருக்கிறார்கள். இந்த நூற்றாண்டின் மாபெரும் திறந்த சிறைச்சாலைக்கு மீண்டும் ஏதற்காக இந்த மக்கள் கொண்டு செல்லப்பட்டார்கள்? என்ற கேள்விதான் இந்த மக்களின் உன்னதமான போராட்டத்திற்கான உக்கிரமான பதிலை அளிக்கிறது. மீள்குடியேற்றம் வடக்கின் வசந்தம் என்ற என்ற பெரும் அரசியல் பிரசாரங்களின் மத்தியில்தான் இந்த மக்கள்மீதான அநீதி அரசின் பொய் பிரசாரங்களை உடைத்திருக்கின்றன. எல்லாவற்றையும் கடந்து இந்த மக்கள் நிலத்திற்காக கொண்ட உறுதிதான் நம்பிக்கையைத் தருகிறது.

 
 
முறிகண்டி மக்கள் தமது நிலத்தை தொடர்ச்சியாகவும் உக்கிரமாகவும் கோரியதைத் தொடர்ந்து அந்த மக்களுக்கு காணிகளை கையளிக்கப் போவதாக கிளிநொச்சி மாவட்ட இராணுவத்தளபதி ரேணுகா ரொவல் தெரிவித்திருந்தார். முறிகண்டிப் பாடசாலையில் இதற்காகவே நடந்த கூட்டத்தில் பேசிய இராணுவத்தளபதி ஏ-9 பாதைக்கு ஒரு கிலோமீற்றர் நீளமாகவும் 235 அடி அகலாமாகவும் காணிகளை கையளிக்கப்போவதாக தெரிவித்தார். அந்தக் கூட்டத்திலேயே இராணுவத்தளபதியை நோக்கியே ஒரு தாய் உக்கிரமான கேள்வியை எழுப்பினார். எங்களுடைய காணிகள்தான் எங்களுக்கு வேண்டும், உங்களுடைய நிலத்தை இப்படி யாருக்கும் விட்டுக்கொடுப்பீர்களா என்று அந்தத் தாய் கேட்டார்.
 
இந்தக் கேள்வி நில உணர்ச்சி மிகுந்த கேள்வி மட்டுமல்ல! மிகவும் அறிவூர்வமானதும் நீதியானதுமான கேள்வி. இந்தக் கேள்விதான் இன்றைய ஈழத்து மக்களின் பெரும் கேள்வி. கிளிநொச்சி மாவட்டத் தளபதியோ பதில் சொல்ல முடியாமல் ஜனாதிபதியே எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்று நழுவினார். கடந்த இருப்பத்துமூன்றாம் தேதி அன்று முறிகண்டியில் மீள்குடியேற்றம் என்று அரச தரப்பால் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, அமைச்சர் றிசாட்பதியூதின் முதலியோர் முறிகண்டிக்கு பயணம் செய்து காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை கைகளில் வைத்திருந்த பத்துக்குடும்பத்த்pற்கு மாத்திரம் காணிகள் மீள வழங்கப்பட்டிருக்கின்றன.
 
மீள்குடியேற்றத்திற்கு என ஆனந்தகுமாரசாமி தடுப்புமுகாமிலிருந்தும் கதிர்காமர் தடுப்புமுகாமிலிருந்தும் அழைத்துவரப்பட்ட மக்கள் முறிகண்டி பாடசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அந்த மக்களிடம் சென்ற இராணுவத்தினர் தாம்மால் மீள்குடியேற அனுமதித்துள்ள பகுதியில் ¼ ஏக்கர் வீதம் காணிகளை பகிர்ந்தளிப்பதாகவும் அவற்றை பெற்றுக் கொண்டு குடியேற வேண்டும் என்றும் மக்களிடம் குறிப்பிட்ட பொழுது மக்கள் அதை அடியுடன் மறுத்தார்கள். எங்களுடைய காணிகள்தான் எங்களுக்கு வேண்டும் என்பதையே மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார்கள்.
இதற்குப் பெயர் மீள்;குடியேற்றமா? கால்வாசிக் காணி தருகிறோம். ஒரு லட்சம் ருபா பெறுமதியில் இராணுவத்தால் வீடு கட்டித்தருகிறோம். ஏனயை நிலத்தை தந்து விடுங்கள் என்று நிலத்தை அபகரிப்பதற்குப் பெயர் மீள்குடியேற்றமா? இதற்காகத்தான் தளபதி ரேணுகா ரொவல் தலமையிலான இராணுவத்தரப்பும் உதவி அரச அதிபரும் நாமல் ராஜபக்சேவும் அமைச்சர் றிசாரட்பதியூதினும் மீள்குடியேற்றம் என்று ஒரு விழாவை நடத்தியிருக்கிறார்கள். இவ்வளவு பேரின் மத்தியில் நடந்த மீள்குடியேற்றம் என்ற பொய்யான தோல்வி நடவடிக்கையில் உறைந்துள்ள அரசியல் பெரும் அபாயமானது.
 
முறிகண்டிமீதான இராணுவத்தின் திட்டம் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. கிளிநொச்சிப் பிரதேசத்தில் உள்ள இராணுவமுகாங்களை எல்லாம் அகற்ற நேரிடும் பொழுது முறிகண்டியை மையப்படுத்திய சூழலிலேயே தாம் நிலை கொண்டிருக்கவேண்டும் என்றும் அதற்கு பெரும் நிலப்பரப்பு தேவைப்படுவதாகவும் அதற்காகவே இந்த நிலங்களை இராணுவத்தினர் சேகரிப்பதாகவும் கிளிநொச்சி மாவட்ட இராணுவத்தளபதி ரேணுகா ரொவல் முறிகண்டி மக்களிடத்தில் தெரிவித்துள்ளார். மக்களின் பூமியில் இராணுவத்தின் வசிப்பதற்கு எத்தகைய நடவடிக்கைகளும் அநியாயங்களும் மேற்கொள்ளப்படுகின்றன என்பது இங்கு அபாயத்துடன் அதிரச்சியூட்டுகிறது.
 
ஒட்டிசுட்டான் உதவி அரசாங்க அதிபர் தினேஸ்குமாரும் நாமல் ராஜபக்சவின் ஒருங்கிணைப்பாளருமான கீர்த்தனனும் மக்களின் நிலத்தை இராணுவத்திற்கு தாரை வார்ப்பதில் பெரும் அக்கறையுடன் உள்ளனர். தரப்படும் காணியில் மீளக்குடியேறுங்கள் அவ்வாறு குடியேறாது விட்டால் கொடுப்பனவுகள், நிவாரணங்கள் நிறுத்தப்படும் என்றும் புலிகள் காலத்தில் நடந்தவற்றை தான் நிராகரிப்பதாகவும் உதவி அரசாங்க அதிபர் சொல்லியுள்ளார். கீர்த்தனனோ எங்கள் காணியைத் தாருங்கள் என்று இராணுவத்தை நோக்கி குரலெப்பும் மக்களை நோக்கி 'வாயை மூடுங்கள்' என்று சொல்லுகிறார். முல்லைத்தீவு மாட்ட அரச அதிபர் வேதநாதன் முறிகண்டியில் மக்களுக்கு எதிராக நடந்த நடவடிக்கை முற்றாக மறுத்திருப்பதுடன் மக்களே விரும்பி தடுப்புமுகாமிற்கு சென்றார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இருப்பதாறாம் தேதி முறிகண்டி நில அபகரிப்புக்கு எதிரான போராட்டம் நடக்க இருக்கையில் முறிகண்டிப் பாடசாலையில் எங்கள் காணியை தந்தால் மாத்திரமே மீள்குடியேறுவோம் என்று சொன்ன மக்களை ஒன்றில் பலவந்தமாக குடியேற்ற வேண்டும் அல்லது அந்த மக்களை வேறு இடத்திற்கு கடத்த வேண்டும் என்று இராணுவம் தீர்மானித்தது. இதனால் முறிகண்டிப் பாடசாலையில் தஞ்சமடைந்த மக்களை கடுமையாக நிர்பந்திக்கத் தொடங்கியது இராணுவம். தாம் தரும் இடப்பகுதியில் குடியேற வேண்டும் என்று குடும்பம் குடும்பமாகவும் தனித்தனியாகவும் இராணுவம் நிர்பந்தித்தது.
 
கடந்த இருபந்தைந்தாம் தேதி, அதாவது முறிகண்டி நில அபகரிப்பு போராட்டத்திற்கு முதல்நாள். இராணுவத்தினர் தமது நடவடிக்கையை உக்கிரப்படுத்தினர். அன்று மாத்திரம் மூன்று கூட்டங்களை நடத்தி மக்களுடன் பேசினார்கள். மக்கள் தெளிவாக தமது முடிவை மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார்கள். அந்த மக்களின் தெளிவான முடிவு இதுதான். எங்கள் காணியில் குடியிருக்க ஒரு மேட்டுப்பகுதி இருக்கிறது. ஏனையவை நாங்கள் விவசாயம் செய்யும் தாழ்வான பகுதி. ஒரு காணியை நான்காகப் பிரித்து மக்களுக்கு பகிரும் பொழுது மூன்று குடும்பங்கள் தாழ்நிலப்பகுதியில் வசிக்க நேரிடும். அத்துடன் அவர்களின் விவசாயம் பாதிக்கப்படும். நான்காகப்படும் காணிகளில் வீடு ஒரு பக்கமும், கிணறு மற்றொரு பக்கமும் பிரிபடும். இதை இந்த மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?
 
இலவச காணிகளை பகரிந்தளிப்பதுபோல இராணுவத்தினர் நிர்பந்திக்கிறார்கள். இது இந்த மக்களுக்குச் சொந்தமான நிலம். இந்த மக்கள் தமது வியர்வையாலும் இரத்தத்தாலும் உருவாகிய பூமி. அரச அதிகாரிகளோ சனங்களின் நிலத்தை இராணுவமுகாங்களுக்கு பரிசளிக்கத் துடிக்கிறார்கள். சனங்கள் அழுதார்கள். நிலத்திற்காக கண்ணீர்விடும் மக்களை இங்குதான் பார்க்க முடிந்தது. துடித்தார்கள். நிலத்தை தாருங்கள் என்று நீதியோடும் நியாயத்தோடும் கேட்டார்கள்.
 
முறிகண்டி வாசியான சிவலிங்கத்தை இராணுவம் கடுமையாக அச்சுறுத்தியிருக்கிறது. தடுப்புமுகாமிலிருந்து மீள்குடியேற வந்த சிவலிங்கத்தை நோக்கி இராணுவம் கைகளை நீட்டியும் விரல்களை நீட்டியும் சிங்களத்தால் கடுமையாக எச்சரித்தது. இதனால் மாரடைப்பால் மயக்கமடைந்த சிவலிங்கம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிவலிங்கத்தின் மனநிலைதான் எல்லா மக்களுடையதும். அந்த மக்கள் மிகவும் உடைந்து போயிருந்தார்கள். இராணுவத்தினரோ மீண்டும் மீண்டும் கடும் தொல்லை கொடுத்தார்கள். இருபத்தைந்தாம் தேதி மாலை இராணுவத்தினரின் நடவடிக்கை உச்ச கட்டம் பெற்றது. இராணுவத்தினரின் திட்டத்திற்கு சம்மதிக்காத மக்களை முறிகண்டிப் பாடசாலையில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.
 
 
இந்த நடவடிக்கை முள்ளிவாய்க்கால் யுத்தத்தைதான் நினைவுக்கு கொண்டு வந்தது என்று முறிகண்டி மக்கள் சொல்லுகிறார்கள். முறிகண்டிப் பாடசாலையை இராணுவம் சுற்றி வளைத்தது. மக்கள் துரத்தி துரத்தி பிடித்து பேரூந்துகளில் ஏற்றப்பட்டார்கள். பாடசாலையை விட்டு ஓடிய மக்களை இராணுவ ஜீப் வண்டிகள் மடக்கிப் பிடித்து ஏற்றின. மக்களின் பொருட்களை லொறிகள் அள்ளிக்கொண்டு சென்றன. இறுதிவரை தங்கள் நிலத்தை தரக்கூடும் என்று நம்பியடியே அந்த மக்கள் போராடினார்கள். முள்ளிவாய்க்கால் மக்கள் காப்பாற்றப்படாததுபோல முறிகண்டி மக்கள் கைவிடப்பட்டார்கள். முறிகண்டியில் நிலத்திற்கான இந்த மக்களின் அழுகுரல்கள் நிறைந்தன. இறுதியில் முறிகண்டிப் பாடசாலையிலிருந்து அந்த மக்கள் துடைத்து ஏற்றப்பட்டார்கள். முள்ளிவாய்க்கால் போரின் பின்னர் நடந்ததுபோலவே இந்த மக்கள் தடுப்புமுகாங்களுக்கே கொண்டு செல்லப்பட்டார்கள்.
 
எங்களை எங்கே கொண்டு போகிறார்கள் என்று போகுமிடம் தெரியாமல் மீண்டும் அகதியாக கொண்டு செல்லப்பட்டோம் என்று குறிப்பிட்டார் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர். இரவு 11.30க்கு எங்கே எங்களை ஏற்றினார்களோ அங்கே கொண்டு போய் விட்டார்கள். நாங்கள் கதிர்காமர் முகாமில் வசித்தோம். பிள்ளைகளின் படிப்பு, எங்கட வாழ்க்கை எல்லாம் மீண்டும் திரும்பும் என்று பெரும் மகிழச்சியோடு கனவோடு வந்த எங்களை இப்படி செய்துவிட்டார்கள். யாரிடம் முறையிடுவது? என்றார் அந்தத் தாய்.
 
18 குடும்பங்களைச் சேர்ந்த எழுபது பேர் இவ்வாறு கொண்டு செல்லப்பட்டார்கள். கதிர்காமம் முகாமிற்கு 11 குடும்பங்களும் ஆனந்தகுமாரசாமி முகாமிற்கு 7 குடும்பங்களும் கொண்டு செல்லப்பட்டனர். இந்த மக்களை சிங்களப் பேரினவாத அதிகாரத்தின் ஜனநாயகமும் நீதியுமற்ற நடவடிக்கை சிறையில் அடைத்தது. எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்! என்று இறுதிவரை போராடியதன் வாயிலாக இந்த நூற்றாண்டின் மாபெரும் திறந்தவெளி மனிதச்சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். உலகத்தில் வேறு எங்கேனும் அகதிகளுக்கு இப்படி அநீதி நடந்திருக்கிறதா? இவை எல்லாவற்றையும் அய்நா அதிகாரிகள் வேடிக்கை பார்த்து தகவல்களை மாத்திரம் எடுத்தார்கள்.
 
இந்த மக்கள். இராணுவத்தை நோக்கி மண்ணை வாறியெறிந்து திட்டினார்கள். எங்களை எங்கள் நிலத்திற்கு விடாவிட்டால் ஏ-9 பாதையில் போக்குவரத்தை துண்டித்து படுத்துக்கிடந்து போராடுவோம் என்றும் எங்களது உணவில் நஞ்சைக் கலந்து தாருங்கள் நிலத்திற்காக செத்துப் போகிறோம் என்றும் இராணுவத்தினரை நோக்கிச் சொன்னார்கள். இராணுவத்தினரை நோக்கி கெட்ட வார்த்தைகளால் திட்டுமளவுக்கும் இராணுவ அதிகாரத்தை மனம் நொந்து சாபமிடுமளவுக்கும் மக்களின் மனங்கள் காயபட்டிருந்தன.
 
எல்லாவிதமான கோரிக்கைகளுக்கும் எடுத்துரைப்புக்களுக்கும் கண்ணீருக்கும் பெரும் துயருக்கும் பின்னரும் தமது போரை நிறுத்தாத இராணுவத்தினர் இருப்பதாறம் தேதி நடக்கவிருந்த நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்தை தடுப்பது எப்படி என்ற வியூகங்களை வகுத்தது. முறிகண்டிப் பகுதிக்கு செல்பவர்கள் காரணம் கேட்கப்பட்டனர். முறிகண்டியை சொந்த இடமாகக் கொண்டவர்கள் அப்பகுதிக்கு வர அனுமதிக்கப்டவில்லை. முறிகண்டி நிலத்திற்கான போராட்டம் அரசின் எல்லா நடவடிக்கையையும் தாண்டி நடந்தது. அந்தப் போராட்டத்தில் பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டிருந்தன. கடத்தப்பட்ட முறிகண்டி மக்கள் எங்கே? எங்கள் நிலத்தை எங்களிடம் தா! என்ற கோரிக்கைகள் போராட்டத்தில் எழுப்பட்டன.
 
போராட்டக்காரர்கள் இறுதியில் முறிகண்டிப் பிள்ளையார் கோயிலில் தேங்காய் அடித்தார்கள். அந்தக் கோயிலில் தேங்காய் அடிப்பது நேத்தி வைத்தல் என்பது நம்பிக்கை சார்ந்தது. முறிகண்டி மக்கள் இல்லாததல் களையிழந்திருக்கிறது அந்தக் கோயிலில் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கும் முறிகண்டிப் பிள்ளையாரை நோக்கி முறிகண்டி மக்கள் தங்கள் நிலத்திற்கு திரும்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டு தேங்காய்களை உடைத்த போராட்டக்காரர்கள் ஈழத் தமிழினத்தை சூழ்ந்திருக்கும் அநீதியும் அதிகாரமும் சிதறியகழ வேண்டும் என்று நினைத்தும் சிதற உடைத்தார்கள்.

No comments:

Post a Comment