Translate

Monday, 16 July 2012


அரசின் கபடச் சதுரங்க ஆட்டமே கிழக்கு மாகாண சபைத் தேர்தல் சாடுகிறார் சுமந்திரன் எம்.பி
news
 "அரசு அதன் அரசியல் சதுரங்கத்தில் ஓர் கபட நோக்கமாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி சர்வதேசத்தை ஏமாற்ற முனைந்துள்ளது'' இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.

 
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுதல் மற்றும் வேட்பாளர் தெரிவு தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் கருத்தறியும் கூட்டமொன்று நேற்று (ஞாயிறு) கல்முனை மெதடிஸ்த மண்டபத்தில் நடைபெற்றது.
 
 இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
 
கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பலர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முடிவால் முஸ்லிம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலைமையை எடுத்துக்கூறி அவர்களது விருப்பின் படி முஸ்லிம்களையும், கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள வேண்டுமென்ற அபிப்பிராயங்களை வெளிப்படுத்தினர்.
 
நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்;
கிழக்கு மாகாண சபைக்கு முதுகெலும்புள்ள ஒரு முதலமைச்சர் இருந்திருந்தால் மாகாணசபையைக் கலைப்பதற்கு இணங்கியிருக்கமாட்டார். ஆனால் அரசு அதன் அரசியல் சதுரங்கத்தில் ஓர் கபட நாடகமாக இன்று மாகாணசபையைக் கலைத்து தேர்தலை நடத்துகின்றது.
 
சர்வதேச தரப்பிலிருந்து வடமாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு வரும் அழுத்தங்களைத் தணிக்கவும் சிறுபான்மை இனங்களுக்கு இங்கு எந்தப் பிரச்சினையுமில்லை என்பதை உணர்த்தவும், அரசு வெற்றிபெறுவதாகக் காட்டவுமே வஞ்சக நோக்குடனான இந்தத் தேர்தலை அரசு நடத்துகின்றது.
 
அதே போல், மூன்று மாகாணசபைகளும் மூன்று ஆளுநர்கள்,மூன்று முதலமைச்சர்களின் ஒரே சிந்தனையில் ஒரே நாளில் கலைக்கப்பட்ட விந்தையும் நடைபெற்றுள்ளது. சட்டவிரோதமாகக் கலைக்கப்பட்டுள்ளது. 
 
முஸ்லிம் மக்கள் 
முஸ்லிம் மக்களுக்கு மத்தியிலும் இன்று அரசின் மீதான வெறுப்பும் சந்தேகமும் இந்த நிலையில் எழுந்துள்ளது. சிறுபான்மை எண்ணிக்கையான மக்களை, சிறுபான்மை தேசங்களை என்ன விதமாக அரசு ஆளுகை செய்கிறது என்பது முஸ்லிம் மக்களுக்குத் தெளிவாகத் தெரிகின்றது.
 
மு.கா. தீர்மானம்
இதன் காரணமாகத் தான் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சிறிலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி, அவர்களது கட்சிக்குள்ளேயே எதிர்புக்குரல் எழும்பியுள்ளதுடன், வாதப் பிரதிவாதங்களும் உக்கிரமடைந்துள்ளன.
 
இதனால் இன்று ஒரு பத்திரிகையில் முஸ்லிம் காங்கிரஸ் உடைவதற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைவதற்கும் சாத்தியக்கூறு உண்டென எழுதியுள்ளனர்.
 
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் உடையப் போவதில்லை. அதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் உடைவதும் எமக்கு விருப்பமில்லை. இதனைப் பகிரங்கமாகவே சொல்ல விரும்புகின்றோம்.
 
ஆனால் முஸ்லிம் மக்களுடைய விருப்பத்திற்கு, அவர்களது ஆதங்கத்திற்கு  எதிரான ஒரு தீர்மானத்தையே, மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் இப்பொழுது எடுத்துள்ளதென்பது முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்திற்கே தெரியும்.
எனவே முஸ்லிம் மக்களோடு எமக்கிருக்கும் உறவில், அதனைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டிய உறவு என்ற வகையில் அவர்களுடைய சுய சிந்தனைப்படி அவர்கள் செயற்பட வேண்டும், அதேவேளை அவர்களுக்குப் பாதகமாகவும் எமக்குப் பாதகமாகவும் செயற்படாமலிருப்பதுடன், அதற்கான விதிமுறைகளைக் காண்பதும் முக்கியமாகும்.
 
இந்த வகையில் இங்கு தெரிவிக்கப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பிலான கருத்துக்கள் ஆக்கபூர்வமாகவும், சந்தோஷமாகவும் அமைந்திருந்தன.
 
தனித்துப்போட்டி
முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டிருந்தால் தேர்தல் முடிவு வருகின்ற போது கிழக்கில் அரசுக்குரிய வாக்கு எவ்வளவென்று உலகிற்கு நாம் காட்டியிருக்கலாம். நாம் கேட்டுக்கொண்டதெல்லாம் அதுவேதான்.
 
ஆனாலும் இப்பவும் அரசின் நிலையை நாம் உலகுக்குக் காட்டலாம். எவ்வளவு தான் இதுவொரு பின்னடைவாக இருந்தாலும் நாம் இதனால் சலித்துப் போய்விடவேண்டிய அவசியமில்லை.
 
நிதானமாக, பக்குவமாக
இன்று தமிழ் மக்களுடைய தேசிய நலனும் முஸ்லிம் மக்களுடைய தேசிய நலனும் பிரதானமாகவுள்ளது. இந்த இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து முன்னகர்த்த வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் நிதானமாகப், பக்குவமாக, கவனமாக முஸ்லிம் மக்களோடு சேர்ந்து நடக்கக் கூடாத ஆனால் நடத்தப்படுகின்ற இந்தத் தேர்தலைச் சந்தித்து, இதில் நாம் வெற்றி பெறுவோமானால் இதுதான் இந்த அரசாங்கத்தினது வீழ்ச்சியின் முதற்படியாகவிருக்கும்.
அப்படியானதொரு சரித்திர நிகழ்வை செய்து காட்டும் சந்தர்ப்பம் கிழக்கு மாகாண மக்களுக்குக் கிடைத்துள்ளது. இந்த அரசு மாற்றப்படுவதற்கு நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் அமைய வேண்டும்.
 
அந்த விதத்தில் நிதானமாகவும் பக்குவமாகவும் கவனமாகவும் முஸ்லிம் சகோதரர்களோடு இணைந்து செயற்பட்டு, அப்படியானதொரு வெற்றியை ஈட்டவேண்டுமென மீண்டும் கூறுகின்றேன். இதில் முழு மூச்சாக நாம் அனைவரும் ஈடுபடுவோம்.
 
இன்றைய காலகட்டத்தில் ஜனநாயகத்திற்கு அரசு செய்துள்ள குந்தகங்களை  இந்தத் தேர்தல் மூலம் வெளியுலகிற்கு எடுத்துக்காட்டுவோம் என்றார்.

No comments:

Post a Comment