தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்ககப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்திருக்கிறது.
வட கிழக்கில் சிறிலங்காப் படைகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நில அபகரிப்பு மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நாளை மறுதினம் யாழ். நெல்லியடி பேருந்து நிலையத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுக்கவுள்ளது.
இந்தப் போராட்டம் சமகாலத்தின் தேவையாகவுள்ள நிலையில் நாம் இந்தப் போராட்டத்திற்கு எமது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
நில ஆக்கிரமிப்புக்கள், சிறைக் கைதிகளின் பிரச்சினைகள் குறித்து தவறான சில கருத்துக்களை அரசாங்கம் வெளியிட்டு வருகின்றது. அவற்றில் எந்த உண்மையுமில்லை என்பதை நாம் ஆதாரங்களுடன் சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்லியுள்ளோம். ஒவ்வொரு மாவட்டங்களிலும், படையினரால் வெளிப்படையாகவே பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் விழுங்கப்பட்டுக் கொண்டிருப்பதையும், அதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வாழ்வதையும் நாம் கண்கொண்டு பார்க்கிறோம். அந்த வகையில் இன்று யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும், முல்லைத்தீவிலும் நடப்பது. நாளை எங்குவேண்டுமானாலும் நடக்கலாம்.
அதேபோல் தமிழீழ விடுதலைப்புலிச் சந்தேகநபர்கள் எனக் கூறி நூற்றுக் கணக்கில் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில், அரசாங்கம் பாராமுகமாகவே இருந்து வருகின்றது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தொடர்ந்தும் தமிழர்களை காப்பாற்றிவிட்டதாகவும், தமிழர்களை ஜனநாயக சூழலில் வைத்திருப்பதாகவும் அரசாங்கம் கூறிக் கொண்டிருப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தக் கருத்துக்கள் பொய்யானவை என்பதை உலகத்திற்குச் சொல்ல வேண்டும்.
அதற்கு இன்றைய சூழலில் எமக்கிருக்கின்ற ஒரே வழி வீதியில் இறங்கி போராடுவதும், அதன் மூலம் உலகத்தின் கவனத்தையீர்ப்பதும் மட்டுமே. எனவே வேறுபாடுகளை மறந்து மக்களுக்காக, மக்களுடைய உரிமைகளுக்காக கூட்டமைப்பின் பிரதேசபை தலைவர்கள், உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோரையும், பொதுமக்களையும் தவறாது கலந்துகொண்டு, எமது பிரச்சினைகளை எடுத்துச் சொல்வதன் மூலம் உரிமைகளை பெற்றுத்தர கோருகின்றோம். என்றுள்ளார்.
No comments:
Post a Comment