புழல் காவல் நிலையம் முன்பு பெண் ஒருவரும், 3 குழந்தைகளும் தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, புழல் சிறைச்சாலை அருகில் காவாங்கரை இலங்கைத் தமிழர் முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் நீண்ட காலமாக இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வரும் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு வெள்ளை வாகனத்தில் வந்த பொலிஸார் அங்கிருந்து 6 இளைஞர்களை வண்டியில் ஏற்றிக் கொண்டும்,அந்த இளைஞர்கள் வைத்திருந்த இரண்டு இரு சக்கர வாகனங்களையும் தங்களது வாகனத்தில் எடுத்துக் கொண்டும் சென்றுவிட்டதாகக் கூறப்படுகின்றது.
பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட 6 இளைஞர்களின் பெயர்கள் வருமாறு,
1. சுரேஷ் குமார்- 3 பெண் குழந்தைகளின் தந்தை
2. ரமேஷ் - திருமணமாகாதவர்
3. உமேஸ் - திருமணமாகாதவர்
4. சுயா - திருமணமாகாதவர்
5. சுதர்சன் - திருமணமானவர். மனைவியும் ஒரு மகளும் இலங்கையில் உள்ளனர்.
6. சுரேஷ் - திருமணமாகாதவர்
இச்செய்தி காவாங்கரை முகாமில் உள்ளவர்களுக்குற்கு தெரிய வர புழல் காவல் நிலையம் முன்பு சுரேஷ் குமாரின் மனைவியும்,அவரது 3 பெண் குழந்தைகளும் தங்களது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக முகாம் வாசிகளும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அந்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டம் வலுக்கவே,முகாமிலிருந்து 6 இளைஞர்களையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றதை ஒப்புக் கொண்டதுடன், 4 இளைஞர்களை விசாரணைக்கு பின்பு விடுதலை செய்வதாக பொலிஸார் உறுதியளித்தனர். அதன்படி சுரேஷ் குமார்,உமேஸ்,சுயா, சுரேஷ் ஆகியோர் விடுவிக்கப்படவுள்ளனர்.
இதற்கிடையே, பொலிஸார் விசாரணையில் ரமேஷ், சுதர்சன் ஆகிய இருவரும் இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளை கேரளா வழியே அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அனுப்ப பணம் பெற்றுக் கொண்டதை ஒப்புக் கொண்டதால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment