Translate

Tuesday, 3 July 2012

அச்சத்தினால் சிறிலங்காவை விட்டு வெளியேறும் தமிழ் அகதிகள் – அவுஸ்ரேலியா ஊடகங்கள் தகவல்

Posted Imageசிறிலங்கா அகதிகள் தொடர்ந்தும் அவுஸ்ரேலிய கரையை நோக்கிப் படையெடுத்து வருவதாகவும், தமது நாட்டில் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாலேயே இவர்கள் அவுஸ்ரேலியாவுக்குப் படையெடுப்பதாகவும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


நேற்றும் இரண்டு பதின்ம வயதினர் உள்ளிட்ட 37 ஆண்களுடன் ‘சஞ்ஜன புத்தா – 04‘ என்ற மீன்பிடிப்படகு கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்தது.

இதனுடன் சேர்த்து கடந்த ஜுன் 24ம் நாளுக்குப் பிந்திய 9 நாட்களில் கிறிஸ்மஸ் தீவு மற்றும் கொகோஸ் தீவுக்கு ஆறு படகுகளில் சிறிலங்காவில் இருந்து மொத்தம் 353 அகதிகள் வந்துள்ளனர்.

கடைசியாக வந்த படகில் இருந்தவர்களுடன் சேர்த்து கிறிஸ்மஸ் தீவில் தற்போது 1475 அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, ‘மெராக்‘ கப்பலில் இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டு, அவுஸ்ரேலியாவில் குடியேறுவதற்காக காத்திருக்கும் நிமால் என்ற தமிழ் அகதி, சிறிலங்காவில் தமிழர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன. அங்கு பல பிரச்சினைகள் உள்ளதால் தான், உயிராபத்துள்ள பயணத்தை மேற்கொண்டு அவுஸ்ரேலியா நோக்கி தமிழ் அகதிகள் வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அவுஸ்ரேலிய குடிவரவு சட்டவாளரான இயன் றின்ரோல், இந்தக் கருத்து உண்மையானது என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களைத் துன்புறுத்துவதால் தமிழர்கள் அகதிகளாக வரக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டில் 1344 சிறிலங்கர்கள் படகுகள் மூலம அவுஸ்ரேலியாவை வந்தடைந்துள்ளனர்.

2009ம் ஆண்டில் 736 பேரும், 2010ல் 536 பேரும், 2011ல் 211 பேரும் சிறிலங்காவில் இருந்து படகுகள் மூலம் அவுஸ்ரேலியா வந்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களாவர்.

http://www.puthinapp...?20120703106519 

No comments:

Post a Comment