Translate

Thursday, 20 September 2012

ஐ.நாவின் 'அச்சுறுத்தும் போக்குடைய நாடுகள்' பட்டியலில் இலங்கை


அச்சுறுத்தும் போக்குடைய நாடுகள் எனும் ஐ.நாவின் புதிய பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் 2011 முதல், ஜூலை 2012 காலவரை உள்ளடக்கிய ஐ.நாவின் இந்த அறிக்கை, தனிநபர்களுக்கு எதிரான பழிவாங்கும் நோக்குடனான செயற்பாடுகள் பதிவாகி வரும் புள்ளிவிபரங்களை கொண்டும் அரசு அதிகாரிகளாலும் உயர்மட்ட அதிகாரிகளினாலும் அச்சுறுத்தலுக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாக்கபப்டும் செயற்பாடுகள் பற்றிய விபரங்கள் கொண்டும் தயாரிக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.


அல்ஜீரியா, பஹ்ரென்ய், பெலாரஸ், சீனா, கொலம்பியா, ஈரான், கஜகிஸ்தான், கென்யா, லெபனான், மலாவி, ருவெண்டா, சவுதி அரேபியா, சூடான், உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுடன் இலங்கையின் பெயரும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

உலக நாடுகள் மற்றும் ஐ.நா மனித உரிமை குழு என்பன ஒன்றிணைந்து அப்பாவி மக்களுக்கு எதிரான கொலை, கொடுமை, கைது அச்சுறுத்தல் ஆகியன தொடரும் இந்நாடுகளின் செயற்பாடுகளை முறியடிக்க வேண்டும் எனவும், புதிய சீரான மாற்று திட்ட வியூகங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நாவின் மனித உரிமை ஆணையகத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று தற்சமயம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

எனினும் அவர்கள் அரச நிகழ்சிநிரலின் படியே யாழில் தமது பயணத்தை தொடர்வதாலும் இதனால், பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை அவர் கேட்டறிந்து கொள்ள சந்தர்ப்பம் இல்லாது போவதாகவும் அதிருப்தி எழுந்துள்ளது.

இதேவேளை கடத்தப்பட்டோர், காணாமல் போனோர் மற்றும் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டோருக்கான நியாயம் வேண்டி, கடத்தல்கள் மற்றும் கைதுகளுக்கு எதிரான ஒன்றிணைந்த அமைப்பு நேற்று யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளது. எனினும் இது திடீரென ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வு என்பதனால் இதில் பெருமளவிலான தமிழர்கள் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கபப்டுகிறது.

No comments:

Post a Comment