Translate

Tuesday 25 September 2012

அரசாங்கத்தின் மீள்குடியேற்ற கொள்கை சர்வதேச மீள்குடியேற்ற சட்டங்களை மீறுகிறது :மனோ கணேசன்

இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்ற வேண்டும் என்பதுவே சர்வதேச சட்டம். இதை ஐநாவின் மீள் குடியேற்ற ஒழுங்கும் அங்கீகரித்துள்ளது. இலங்கையில் போரினால், இடம்பெயர்ந்து முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழ் மக்களில் பெருந்தொகையானோர், தமது சொந்த கிராமங்களில் குடியேற்றப்படவில்லை. 


வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் தமது சொந்த கிராமங்களில் குடியேறமுடியாமல் தடுக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது நிலங்களை அரசு இராணுவ மற்றும் பல்வேறு தேவைகளுக்காக பிடித்து வைத்துள்ளது. இந்நடவடிக்கைகள் அரசின் உண்மையான மீள்குடியேற்ற கொள்கையை படம் பிடித்து காட்டுகின்றன. 

இந்நிலையில், தமது சொந்த இடங்களில் குடியேறுகின்ற தமிழ் மக்களின் உரிமையை பச்சையாக மீறிவிட்டு இந்த அரசாங்கம் மீள் குடியேற்ற பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட்டதாக கூறக்கூடாது. இதுபற்றி உண்மைகளை அறிந்துகொள்ளாமல், அவசர, அவசரமாக இலங்கை வந்து செல்லும், ஐநா, அமெரிக்க, இந்திய பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கவும் கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, 

தாம் பிறந்து, வளர்ந்து, விவசாயம் செய்து, வாழ்ந்த சொந்த கிராமங்களில் மீண்டும் குடியேறுவதற்கு தமிழ் மக்களுக்கு முழுமையான உரிமை இருக்கின்றது. தமது பாரம்பரிய நிலங்களை மீண்டும் பெறுவதற்கு மக்களுக்கு உரிமை இருக்கிறது. இவை இன்று மீறப்படுகின்றன.
சொந்த கிராமங்களுக்கு போக விடுங்கள் என்று உரிமையுடன் கோரிக்கை விடுக்கும் மக்கள் பயமுறுத்தப்படுகிறார்கள். அவர்களை வேறு நிலங்களுக்கு அனுப்புவதற்கு அரசு முயற்சி செய்கிறது. ஒருதொகையினர் இப்படி அரசின் பயமுறுத்தல் காரணமாக மாற்று இடங்களை நாடி உள்ளார்கள். இவை உலகிற்கு தெரியாமல் நடத்தப்பட்டுள்ளன. 

திருமுருகண்டி, கோப்பாபிலவு ஆகிய கிராம மக்களின் பரிதாப நிலைமைகள் சமீபத்தில் நடைபெற்ற தமிழ் கட்சிகளின் மக்கள் போராட்டங்களின் மூலமாக வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளன. 

அதேபோல் பரவிபாஞ்ஞான், இரணைதீவு, முகமாலை ஆகிய கிராமங்களிலும் மக்களை குடியேறவிடாமல் இராணுவம் தடுக்கின்றது. 30 வருடங்களுக்கு முன்னர் மலையகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டதால், கிளிநொச்சி மாவட்டத்தின் மருதநகர் கிராமத்தில் குடியேறி, அந்த பூமியை வளபடுத்தி விவசாயம் செய்து வாழ்ந்துவரும் தமிழ் மக்கள் தமது கிராமங்களில் குடியேறுவதையும், இராணுவம் இன்று தடுக்கிறது. இந்த கிராமங்களில் வாழ விரும்பும் மக்களின் அவல நிலைமைகளை வெளிக்கொணர எதிர்வரும் 27 ம் திகதி மக்கள் எதிர்ப்பு இயக்கத்தை நடத்த, கூட்டமைப்பு எம்பி சிறிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமது சொந்த இடங்களில் குடியேறுகின்ற தமிழ் மக்களின் உரிமையை பச்சையாக மீறிவிட்டு இந்த அரசாங்கம் மீள் குடியேற்ற பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட்டதாக கூறக்கூடாது. இதுபற்றி உண்மைகளை அறிந்துகொள்ளாமல், அவசர, அவசரமாக இலங்கை வந்து செல்லும், ஐநா, அமெரிக்க, இந்திய பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கவும் கூடாது.

No comments:

Post a Comment