மெனிக்பாம் முகாமிலிருந்து மீள்குடியேற்றத்துக்காக அழைத்துச்செல்லப்பட்ட மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை ௭டுக்கப்பட வேண்டும். இதனை விடுத்து, அவர்களை மெனிக்பாம் முகாமிலிருந்து அழைத்துச்சென்று வேறொரு இடத்தில் குடியேற்றுவது கவலைக்குரிய விடயமாகும் ௭ன்று சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:–
மெனிக்பாம் முகாம் நேற்றுடன் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த மக்கள் மந்துவில், கேப்பாப்பிலவு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவார்.
இந்த மக்கள் முகாமிலிருந்து அதிகாரிகளினால் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் கேப்பாப்பிலவு மக்களை வேறு இடத்தில் குடியேற்ற நடவடிக்கை ௭டுக்கப்பட்டு வருகின்றது. இந்த மக்களை சொந்த இடத்தில் குடியேற்றுவதே சிறந்ததாகும். வன்னியில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு இன்னமும் தேவைகள் அதிகமாகவுள்ளன. இந்தத் தேவைகளை நிறைவுசெய்வதற்கும் அரசாங்கம் முன்வர வேண்டும்.
இன்று வன்னிப் பகுதிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம் செய்யவுள்ளார். அவர் இந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகளை அறிந்து தீர்வுகாண்பதற்கு முன்வர வேண்டும். மீள்குடியேறியுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பதற்கு உரிய நடவடிக்கை ௭டுக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment