Translate

Friday, 30 September 2011

புனிதர்களின் நினைவுகளைக் காப்போம் வாரீர்!

புனிதர்களின் நினைவுகளைக் காப்போம் வாரீர்! - மாவீரர் நினைவு இனவிடுதலைக்கு உந்துசக்தி தருவதேயன்றி, சிலரின் இருப்பை காப்பதற்கானதன்று.
மாவீரர்கள் புனிதமானவர்கள். தமிழினம், தமிழ்மொழி, தாய்நிலம் வாழ தங்கள் இன்னுயிர்களை ஈகம்செய்த உன்னதமானவர்கள். மாசுமறுவற்ற மண்ணின் மைந்தர்கள். விடுதலை என்ற இலட்சியக் கனவோடு தாய்மடியில் வீரவிதையாய்ப் புதைந்திருப்பவர்கள்.
புனிதர்களின் நினைவுகளைக் காப்போம் வாரீர்.!


மாவீரர் நினைவு இனவிடுதலைக்கு உந்துசக்தி தருவதேயன்றி. சிலரின் இருப்பை காப்பதற்கானதன்று.
அவர்களின் நினைவுகள் புனிதமானவை. பரிசுத்தமானவை.
எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் உந்துசக்தியாக, தமிழர் மனங்களில் புத்தொளி பாய்ச்சி, புதுவிசை கொடுக்கும் ஆன்மசக்தியாக இருப்பது மாவீரர்களின் நினைவுகளே.
 
மாவீரர்நாள் என்பது, எந்த இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் தம் இன்னுயிர்களை ஈகம்செய்தார்களோ, அந்த இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்ற உறுதியை மனங்களில் நிறைத்துக்கொள்ளும் நாள்.

தாயகத்தில், சிங்கள இராணுவ அடக்குமுறைக்குள், மாவீரர்களின் நினைவெழுச்சி நிகழ்வுகளை நடாத்துவதற்குரிய சாத்தியம் தற்போது இல்லை.

புலத்திலேயே, மாவீரர்களை வணங்கி வழிபடும் தேசிய நினைவெழுச்சி நாளை, உணர்வுபூர்வமாகவும் மிகச் சிறப்பாகவும் நடாத்த, புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் அனைவரும் அணிதிரளவேண்டும்.

முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து முடிந்ததின் தொடர்ச்சியாக, ஒற்றுமைக்கு விரோதமாகவும், தான்தோன்றித்தனமாகவும், கட்டுப்பாடுகள் அற்றமுறையிலும், பொறுப்பற்ற போக்கிலும் மேற்கொள்ளப்படும் விரும்பத்தாக போக்குகள் தேசிய விடுதலைப் போராட்டம் குறித்த, அச்சமூட்டும் சந்தேகங்களை பொதுமக்கள் மத்தியில் விதைக்கவே செய்துள்ளன.
தேசியத் தலைவரால், சிறுகச் சிறுகக் கட்டிவளர்க்கப்பட்ட, பலம்வாய்ந்த தேசியத்தளம் அறிவிலித்தனமாக, ஈவிரக்கமற்ற முறையில் சிதைத்தழிக்கப்பட்டு வருகின்றமை எங்கள் கண்ணெதிரே நடக்கின்ற கொடுமை.

ஒரு மாபெரும் இயக்கத்தை, ஒரு சிறு குழுவாகச் சிறுக்கவைக்கின்ற முயற்சி வேகமாக நடந்து வருகின்றது. இது சதியா? அல்லது சம்பந்தப்பட்டவர்களின் அறிவுநிலைப்பட்ட முடிவா? என்ற சந்தேகம் பலமாக எழுகின்றது.

புலத்து மண்ணிலே, துரோகிகளாக்கப்பட்டவர்கள் அதிகமாக நிரம்பிப் போயுள்ளனர். சிங்கள அரசோடும், சிங்கள அரசுக்குத் துணை நிற்பவர்களோடும், இணைத்து வகைப்படுத்தி, தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் துரோகிகளாக்கப்பட்டு வருகின்றனர்.
தமது போக்கிற்கு ஒத்துவராதவர்கள், தமது நலன்களுக்கு இடையூறாக நிற்பவர்கள் துரோகிகளாக முத்திரை குத்தப்படுகின்றனர். ஒதுக்கப்படுகின்றனர். அவமானப்படுத்தப்படுகின்றனர்.
எமக்காகப் போரிட்டு வீழ்ந்த எங்கள் மாவீரர்களின் குழந்தைகளை குடும்பங்களைப் பாதுகாக்கவோ, சிறைப்பட்டுள்ள போராளிகளினதும் அவர்களது குடும்பங்களினதும் நலன்களைக் கவனிக்கவோ, போரில் சிக்கிச் சீரழிந்து போயுள்ள எம் மக்களின் வாழ்வை மேப்படுத்தவோ ஒருதுளி முனைப்பும் இன்றி சும்மாயிருப்பவர்கள்.


ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் கனவு, சிலரின் பொறுப்பற்ற போக்கால், சிதைந்தழிந்துபோக, விடுதலையின்பால் அக்கறை கொண்ட சமூகப் பொறுப்புள்ள மக்களால் அனுமதிக்கப்படவே முடியாது.
இந்தப்போராட்டத்தின் தாங்கு சக்தியாக நின்றவர்கள், இதனை வளர்த்தெடுத்தவர்கள், நேரடியாகப் பங்கெடுத்தவர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள், மாவீரச் செல்வங்களின் பெற்றார், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோருக்குமாக இந்த அழைப்பை விடுகின்றோம்.
இந்தப் புனிதப் போராட்டத்தை நாற்றமெடுக்க வைக்க சிலர் முயற்சிக்கின்றனர். இந்தப் போராட்டம், வீரியத்துடன், அடுத்த இலக்கு நோக்கிப் பாயும் பேராறு. அதனைத் தடுக்க எடுக்கும் முனைப்பை முறியடிக்க வேண்டும்.
மாவீரர் நாள் என்பது, தமிழ்மக்கள் எல்லோருக்கும் பொதுவானது. மாவீரர்களை வணக்க எல்லோருக்கும் உரித்துண்டு. இந்தநாளை அதன் அர்த்தத்தில், உணர்வு கெடாமல், எந்த உள்நோக்கமும் இல்லாமல், நடாத்தவேண்டும். 
புனிதமான மாவீரர் நாள் நிகழ்வுகளும், அவர் தாங்கிநின்ற தேசிய இலட்சியமும், பொறுப்பற்றவர்களின் கைகளில் சிக்கிவிடாமல் தவிர்க்க, புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் விழிப்புடனும், முனைப்புடனும் செயற்பட முன்வரவேண்டும்.

புனிதமான தேசிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களின் கனவு நனவாக எல்லோரும் இணைந்து உழைப்பதென உறுதிகொள்வோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.


தமிழீழத் தேசியத் தலைமை இல்லை என்ற நினைப்பில் இனத்திற்கு பங்கம் விளைவிக்கும் நோக்கோடு செயற்படுபவர்கள் கவனத்திற்கு. எமது இனத்தின் விடுதலையினை வென்றெடுத்து தமிழர்களுக்கென்று ஒரு அரசை நிறுவுவதே தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது அவதாரத்தின் கடமையாகும். அதனை எத்தனை தடைகள் வந்தாலும் எத்தனை ஆயிரம் பேர் துரோகிகளாக அணை போட்டு நின்றாலும் எத்தனை வல்லரசுகள் சிங்களத்தை காத்து நின்றாலும் நிறைவேற்றுவது திண்ணம்.

No comments:

Post a Comment