Translate

Friday, 30 September 2011

சிறிலங்கா தொடர்பான புதிய அணுகுமுறையானது வெளிநாட்டிலும், நீண்டகாலமாக அதிருப்தியுடன் வாழும் கனேடிய தமிழ் சமூகத்தின் மத்தியிலும் தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா தொடர்பான புதிய அணுகுமுறையானது வெளிநாட்டிலும், நீண்டகாலமாக அதிருப்தியுடன் வாழும் கனேடிய தமிழ் சமூகத்தின் மத்தியிலும் தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இவ்வாறு கனடாவில் இருந்து வெளியாகும் The Globe and Mail ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

2009 ல் சிறிலங்காவில் இறுதிப் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பல கனேடியத் தமிழர்களை விரோதித்த ஸ்ரீபன் கார்ப்பரின் அரசாங்கமானது தற்போது மனித உரிமை விவிகாரம் மற்றும் அரசியல் இணக்கப்பாடு தொடர்பாக சிறிலங்கா மீது பெரும் அழுத்தங்களை விளைவித்து வருகின்றது. 



சிறிலங்காவின் சிதைவடைந்துள்ள அரசியலில் இப்பழமைவாதக் கட்சியின் அணுகுமுறையானது வியத்தகு மாற்றமாக அமைந்துள்ளது. 

பல ஆண்டுகளாக கனடாவின் பழமைவாதக் கட்சியானது தமிழ்ப் புலிகளைப் பயங்கரவாதிகள் எனப் பழிசுமத்தி வந்த அதேவேளையில் சிங்களப் பெரும்பான்மை அரசாங்கமானது சிறுபான்மைத் தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் புறக்கணிப்பது தொடர்பாக வாயளவில் கூட எந்தவொரு விமர்சனக் கருத்துக்களையும் தெரிவித்திருக்கவில்லை. 

புலம்பெயர் மக்களின் அரசியல் கலப்பு மற்றும் வெளிநாட்டுக் கோட்பாடுகள் போன்றவற்றால் உருவாகியுள்ள சிறிலங்கா தொடர்பான புதிய அணுகுமுறையானது வெளிநாட்டிலும், நீண்டகாலமாக அதிருப்தியுடன் வாழும் கனேடிய தமிழ் சமூகத்தின் மத்தியிலும் தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சரியான பதிலைத் தராதவிடத்தும், சிறுபான்மைத் தமிழ் மக்களுடன் இணக்கப்பாட்டை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காதவிடத்தும் 2013ல் சிறிலங்காவில் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ள பொதுநலவாய அமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் இதேபோல் ஏனைய நாட்டுத் தலைவர்களும் இம்மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் திரு.கார்ப்பர் இம்மாத ஆரம்பத்தில் கேட்டுக்கொண்டிருந்தார். 

இந்த விடயமானது அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதான பேசுபொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த வாரம் இடம்பெற்ற ஐ.நா வின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஏனைய நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் சிறிலங்கா அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போது கனேடிய வெளிவிவகார அமைச்சரான ஜோன் பெயார்ட் சிறிலங்கா விவகாரம் தொடர்பாகவும் சூடான விவாதங்களைக் கிளப்பியிருந்தார். 

கனடாவானது சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுத் தொடர்பாக சரியான நடவடிக்கையை எதிர்பார்ப்பதுடன் போருக்குப் பிந்திய இணக்கப்பாட்டு முயற்சியில் சிறிலங்கா ஈடுபடவேண்டும் என்பதையே கனடா விரும்புவதாக கடந்த வியாழனன்று கனேடிய வெளியுறவு அமைச்சர் சிறிலங்கா வெளியுறவு அமைச்சரான ஜி.எல்.பீரிசிடம் எடுத்துக் கூறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர் இம்மாதத்தின் ஆரம்பத்தில் சிறிலங்காத் தூதராகக் கடமையாற்றும் சித்திராங்கனி வாகீஸ்வராவிடம் இறுதிக் கட்ட உள்நாட்டுப் போர் இடம்பெற்ற 2009 காலப்பகுதியில் அங்கு மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தனது அரசாங்கத்தின் அதிருப்தியை வெளியிட்டதுடன், இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழுவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா அரசாங்கம் ஏற்க மறுத்ததாகவும் போரின் போது சிறிலங்காவானது மிகக் கடுமையான போர் உத்திகளைப் பயன்படுத்தியதாகவும் முறைப்பாடு செய்துள்ளார். 

"இதற்கான நடவடிக்கைள் எடுக்கப்படவேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம்" என பெயார்ட்டின் பேச்சாளரான கிறிஸ்டே தெரிவித்துள்ளார். 

சிறிலங்கா அதிகாரிகளுடன் மேற்கொண்ட சந்திப்பின் போது, தமிழ்ப் புலிகளை கனடாவானது தனது நாட்டின் பயங்கரவாதப் பட்டியலில் இணைத்தது தொடர்பாகக் குறிப்பிட்ட கனடாவின் வெளியுறவு அமைச்சரான திரு.பெயார்ட், மனித உரிமையை சிறிலங்கா மதிக்க வேண்டும் என்பதைக் கனடா தற்போது எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டினார். 

சிறிலங்காவானது தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துவருகின்றது. ஆனால் கடந்த மார்ச்சில் ஐ.நா வல்லுனர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையில், சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் அரசாங்கமானது பாதுகாப்பு வலயம் மற்றம் மருத்துவமனைகளில் தஞ்சம் கோரியிருந்த பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டமை மற்றும் யுத்தம் முடிவுற்ற பின்னர் மக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருந்த சில முகாங்களில் துன்புறுத்தல்களை மேற்கொண்டமை போன்றவற்றை ஆதாரப்படுத்தியுள்ளது. 

அமெரிக்க போன்ற சில நாடுகளும் இது தொடர்பாக சிறிலங்கா மீது தமது அழுத்தத்தைப் பிரயோகித்துள்ளன. ஆனால் 2006 இலிருந்து சிறிலங்காவிற்கு 200 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ள கனடாவானது தற்போது சிறிலங்கா மீது பெரும் அழுத்தத்தைப் பிரயோகிக்கும் வகையில் தனது பரப்புரை நடவடிக்கையை விரிவாக்கியுள்ளது. 

சிறிலங்காவில் இடம்பெற்ற குருதி தோய்ந்த உள்நாட்டுப் போர் இடம்பெற்ற வேளையில் அது தொடர்பாக கனேடிய அரசாங்கமானது தனது கருத்துக்களை வெளிப்படுத்தாதிருந்தது. இதனால் மிகவும் கவலை கொண்டிருந்த 300,000 வரையிலான புலம்பெயர் தமிழர்களைக் கொண்டுள்ள கனடா நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய மாற்றமானது பெரும் விளைவை ஏற்படுத்தலாம். 

சிறிலங்காவில் இடம்பெற்ற குற்றச்சாட்டுக்களை எதிர்த்து பல ஆயிரக்கணக்கான கனேடியத் தமிழர்கள் ரொரன்ரோவிலும் ஒட்டாவாவிலும் பல ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர். அத்துடன் கனேடிய அரசாங்கத்திடமும் இது தொடர்பாக முறைப்பாடு செய்திருந்தனர். 

ஆனால் கனேடிய அரசாங்கம் இது தொடர்பாக தனது எதிர்ப்பைக் காட்டியிருக்கவில்லை. அத்துடன் அந்நாட்டின் எதிர்க்கட்சியும் இது விடயத்தில் மௌனம் காத்தது. கனேடிய தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளையோர்கள் கோபங்கொண்டனர். 

"இந்த அழிவு நடவடிக்கைகள் தொடர்பாக அவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை. ஜனநாயக நாடானது உரத்த குரலில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது" என 21 வயதுடைய கனேடிய தமிழ் இளையவர் ஒருவர் தெரிவித்தார். 

தமிழ் கனேடியர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக சில தாராண்மைவாதிகள் புலிகளின் ஒருங்கிணைப்பாளர்களுடன் நெருக்கமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அத்துடன் தேர்தல் மூலம் தெரிவ செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக பயங்கரவாதிகள் யுத்தத்தில் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டிருந்தது. 

இவ்வாறான சில சம்பவங்களால் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதில் கனேடிய அரசியல்வாதிகள் தயக்கம் காட்டினார்கள். சில லிபரல்கள் புலி ஆதரவைப் பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்கப் பயந்தார்கள். 

தற்போது, புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட போதிலும் சிறிலங்காவில் இணக்கப்பாட்டு முயற்சி முன்னெடுக்கப்படவில்லை. இரு வாரங்களின் முன்னர் கனேடிய தமிழர்களைக் கொண்ட குழுவொன்றுடன் திரு.பெயார்ட் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். அச்சந்திப்பில் சிறிலங்கா அரசாங்கம் மீதான அவர்களின் முறைப்பாடுகளை பெற்றுக்கொண்டார். 

தற்போதுள்ள கனேடிய அரசியலின் படி, சிறிலங்காவில் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த வேண்டும் என அழுத்தம் கொடுப்பதானது அங்குள்ள எல்லாக் கட்சிகளினதும் பிரதான விடயமாக உள்ளது. இது கனேடியத் தமிழர்களை அவர்களுடைய அரசியல்வாதிகளுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம். 

"சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் கனடாவில் வாழ்ந்த தமிழர்கள் உண்மையில் பெரும் கோபத்திற்குள்ளாகியிருந்தனர்" என இரு வாரங்களுக்கு முன்னர் திரு.பெயார்ட்டைச் சந்தித்தவர்களின் கருத்துக்களை வழங்கிய ரொரன்ரோ தமிழ் வானொலி நிகழ்ச்சியின் போது குயின்ரஸ் துரைசிங்கம் தெரிவித்தார். 

"அவர்கள் எமது கருத்துக்களை செவிமடுக்க முன்வந்தது தொடர்பாகவும், தமது தரப்புக் கருத்துக்களை வெளிப்படையாகக் கூற முன்வந்தது தொடர்பாகவும் நாம் மகிழ்வடைகின்றோம்" எனவும் அவர் தெரிவித்தார். 

No comments:

Post a Comment