அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் இந்தமாதம் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டை இலக்கு வைத்து- சிறிலங்காவுக்கு எதிரான பரப்புரைகளில் குறிப்பிட்ட சில நாடுகள் ஈடுபட்டு வருவதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இம்மாதம் 28ம் நாள் தொடக்கம் 30ம் நாள் வரை மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பேர்த் நகரில் கொமன்வெல்த் தலைவர்களின் மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார்.
கொமன்வெல்த் அமைப்பில் இருந்து சிறிலங்காவை இடைநிறுத்த வேண்டும் என்று பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கையை கொமன்வெல்த் நாடுகள் முன்னெடுப்பதை தடுக்கும் முயற்சிகளில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக நேற்று கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகளை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து இதுபற்றிக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் சிறிலங்கா அதிபரின் வெளிவிவகார ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தனவும், வெளிவிவகார அமைச்சின் செயலர் கருணாதிலக அமுனுகமவும் பங்குபற்றியிருந்தனர்.
கொமன்வெல்த் அமைப்பில் சிறிலங்காவுக்கு எதிராக சில நாடுகள் செயற்படுவதாக இந்தச் சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன் மனிதஉரிமைகள், ஜனநாயகம், மற்றும் சட்டம் தொடர்பான கொமன்வெல்த் ஆணையாளர் பதவி ஒன்றை உருவாக்குவதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பிரீஸ் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளே இந்த ஆணையாளர் பதவியை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இந்தப் பதவி உருவாக்கப்படுவது தமக்கு நெருக்கடியை கொடுக்கும் என்பதால், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சிறிலங்கா தனக்கு ஆதரவான அணியொன்றைத் திரட்டும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.
கொமன்வெல்த் அமைப்பில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் சிறிலங்காவின் நகர்வுகள் அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. |
No comments:
Post a Comment